ஜெயலலிதா நேற்று மேற்கொண்ட தேர்தல் பரப்புரைக்காக அனைத்து நடத்தை விதிகளும், பொது விதிகளும் மீறப்பட்டிருக்கின்றன. இதை போக்க வேண்டியது ஆணையத்தின் கடமையாகும். வெளிமாநிலங்களில் இருந்து நேர்மையான அதிகாரிகளை வரவழைத்து தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், ஆளுங்கட்சியின் அத்துமீறல்களும், அதிகார துஷ்பிரயோகங்களும் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. இதை தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையமும், தேர்தல் அதிகாரிகளும் இதற்கு துணை போவது கண்டிக்கத்தக்கது.
தருமபுரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று மேற்கொண்ட தேர்தல் பரப்புரைக்காக அனைத்து நடத்தை விதிகளும், பொது விதிகளும் மீறப்பட்டிருக்கின்றன. சாதாரண நிகழ்ச்சிகளுக்கே பொதுமக்களை சரக்குந்து போன்ற வாகனங்களில் அழைத்துச் செல்லக்கூடாது என விதிகள் வகுக்கப் பட்டிருக்கின்றன. பரப்புரைக்காக மக்களை வாகனங்களில் அழைத்து வருவது நடத்தை விதிகளின் படியும் குற்றமாகும். ஆனால், இந்த விதிகளை மதிக்காமல் ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்திற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சரக்குந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் மூலம் பொதுமக்கள் அழைத்து வரப் பட்டனர். இதனால் இந்த மாவட்டங்களின் பல பகுதிகளில் தனியார் பேரூந்து போக்குவரத்து நிறுத்தப் பட்டது. இந்த வாகனங்கள் அனைத்தையும் ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் மிரட்டி அழைத்து வந்துள்ளனர். இது நடத்தை விதி மீறலாகும். ஆனால், இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.
அதுமட்டுமின்றி, கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு சாலைகளில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கண் எதிரிலேயே தலா ரூ.300 வீதம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. ஊடகங்களும் இதை படம் பிடித்து வெளியிட்டன. ஆனால், இக்காட்சிகள் எதுவும் தேர்தல் அதிகாரிகளின் பார்வையில் படவில்லை. இதற்கெல்லாம் மேலாக, ஜெயலலிதாவின் பிரச்சாரம் நடைபெற்ற இடத்தில் தான் தருமபுரி மாவட்டத்தின் வருவாய்த் துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் குவிந்திருந்தனர். இவர்கள் தவிர சென்னையிலிருந்து தனியார் வாகனங்கள் மூலம் வந்த அதிகாரிகளும் அ.தி.மு.க. தொண்டர்களாக மாறி பொதுக்கூட்டப் பணிகளை கவனித்தனர். மற்ற கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே பாதுகாப்புக்கு காவலர்களை அனுப்பும் காவல்துறையினர் இந்த கூட்டத்தின் பாதுகாப்பு பணிக்காக மட்டும் 5 ஆயிரம் காவலர்களை அனுப்பி வைத்திருந்தனர்.
ஜெயலலிதாவின் பரப்புரையை தடையின்றி முழுமையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும், இல்லாவிட்டால் கேபிள் தொலைக்காட்சியில் உங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடியாது என்று தனியார் தொலைக்காட்சி நிர்வாகங்களை ஆளுங்கட்சி மிரட்டுவதால் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவராக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் இருப்பதால் அவர்கள் வைப்பது தான் சட்டமாக உள்ளது. எதிர்க்கட்சி நிகழ்ச்சிகளை தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்தால் அவற்றின் ஒளிபரப்பையே தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இருட்டடிப்பு செய்கிறது. உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளையும் அதிமுகவினர் தான் பினாமி பெயர்களில் நடத்தி வருகின்றனர் அத்தொலைக்காட்சிகளிலும் அதிமுக நிகழ்ச்சிகள் மட்டும் தான் ஒளிபரப்பாகின்றன. இது தேர்தலின் போது அனைத்துக் கட்சிகளுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கொள்கைக்கு எதிரானது ஆகும். இதற்குக் காரணமான அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் இராதாகிருஷ்ணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பா.ம.க.வின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்த பிறகு நிலைமை மேலும் மோசமாகிவிட்டது.
அரசியல் கட்சிகள் நேரடியாக பிரச்சாரம் செய்வதை விட தொலைக்காட்சிகள் மூலம் பிரச்சாரம் செய்வது அதிகரித்துள்ள நிலையில், அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் ஒருசார்பு செயல்பாடுகளால் எதிர்க்கட்சிகளின் பிரச்சார வாய்ப்புகள் முற்றிலுமாக பறிக்கப்பட்டிருக்கின்றன. இதையும் ஆணையம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது ஏற்க முடியாத மிக மோசமான அணுகுமுறை ஆகும்.
தேர்தலின் போது பண பலத்தை தடுப்பதற்கான வாகன சோதனை வலுப்படுத்தப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியினர் அரசு உதவியுடன் வித்தியாசமான வழிகளில் பணத்தைக் கடத்திச் செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன. டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு மதுப்புட்டிகளை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகளில் வைத்து பணம் கடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் இதைக் கண்டு கொள்ளாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆளுங்கட்சியின் அதிகார அத்துமீறல்கள் குறித்து அளிக்கப்படும் புகார்கள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக,‘‘ ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் எனக்கு இல்லை’’ என்று கை விரிக்கிறார். இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நியாயமாக நடைபெறுமா? என்ற ஐயம் எழுகிறது. இதை போக்க வேண்டியது ஆணையத்தின் கடமையாகும். ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு துணை போகும் அனைத்து அதிகாரிகளையும் உடனடியாக தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். வேட்பு மனுத் தாக்கல் முடிவடையும் வரை காத்திருக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து நேர்மையான அதிகாரிகளை வரவழைத்து தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். தேர்தலை நியாயமாக நடத்தி ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.