கொழும்பு மகசின் சிறைச்சாலையில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 14 தமிழர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று நடத்தப்பட்டது. மன்னார் பிரஜைகள் குழுவின் அழைப்பு விடுத்த இந்தப் போராட்டம் யாழ் முனியப்பர் ஆலய முன்றலில் நடைபெற்றது.
இவர்கள் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாத நிலையில் வழக்கு விசாரணைகள் இன்றி வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை உடனடியாக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது முழக்கம் எழுப்பப்பட்டது.
மன்னார் பிரஜைகள் குழுவின் பிரமுகர்கள், தமிழ்க் கைதிகளின் குடும்ப உறவினர்கள், அரசியல்வாதிகள், கிறிஸ்துவ மத போதகர்கள் என்று பலதரப்பட்டவர்களும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
பதின்மூன்றாவது நாளாக தமிழ்க் கைதிகள் 14 பேரும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களில் மூவரின் உடல் நிலை மோசமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.