“இன்னிக்கு வெளியில சுத்த வேண்டாம்.. முகநூல் பாப்போம்”னு உக்காந்தேன்.
எடுத்தவுடனே தமிழிசை அக்கா… அதாங்க.. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரரஜன் பதிவு கண்ணுல பட்டுது.
அதுல, “இளங்கோவனை கண்டித்து பாஐக ஆர்ப்பாட்டம்”னு ஒரு பதிவு. இவங்க பாஜகதானே… பா.ஐ.க.னு புது கட்சி ஏதும் துவங்கிட்டாங்களானு ரோசிச்சப்பதான்.. “ஓ… தெரியாம தப்பா தட்டச்சிருப்பாங்க”னு புரிஞ்சுது…
சரின்னு, அவங்க பக்கத்துக்கு போய் அடுத்த பதிவ படிச்சேன். . அய்யய்யோ… லலித்கலா அகடமியில நடந்த ஓவிய கண்காட்சிய பத்தி எழுதியிருக்காங்கன்னு புரிஞ்சுது.. ஆனா புரியலை!
என்ன பாக்கறீங்க.. அப்படி இருக்கு அவங்க தமிழ்!
ரொம்ப சிரமப்பட்டு அவங்க தமிழை தமிழ்ல மொழியாக்கம் பண்ணேன்.
ஒவ்ஒருவரின் – ஒவ்வொருடைய, வருபடி – வரும்படி, என்கு – எனக்கு, வளங்கும் – வழங்கும், எடுத்தரைக்க – எடுத்துரைக்க…
அடுத்தடுத்த பதிவுகள்லயும் இதே கதைதான்.
ஏதோ ஒரு சமயத்துல எழுத்துப்பிழை வர்றதை சகிச்சிக்கலாம்.. ஆனா அவங்களோட ஒவ்வொரு பதிவுலேயும் தப்புகள் மலிஞ்சிருக்கு.. ஒருவேளை ஆங்கிலவழியிலேயே பள்ளிப்படிப்பை முடிச்சு அப்படியே மருத்தவக்கல்லூரிக்கு போனதால இருக்கலாம்…
ஆனா ஒரு தேசிய கட்சியோட தமிழக தலைவரா இருக்கிறவரு, பல காலமா அரசியல்ல இருக்கிறவரு…. அப்புறமாவது தமிழ் கத்துக்க வேண்டாமா…?
இவரோட முகநூல் பக்கத்தை 37 ஆயிரத்து 905 பேர் பின்தொடர்றாங்க… அத்தனை பேருகிட்ட போற தன்னோட கருத்துக்களை சரியான தமிழில் தட்டச்சணும்னு அக்கறை வேணாமா..?
இவங்க அப்பா குமரி அனந்தன் எப்பேர்ப்பட்ட தமிழறிஞர்! தமிழ்ல முதுகலை, முனைவர் பட்டங்கள் வாங்கியவர். மதுரையில தமிழாசிரியரா பணியாற்றியவரு.
அது மட்டுமா…
பாராளுமன்ற உறுப்பினரா தேர்ந்தெடுக்கப்பட்டு டில்லி போனவுடனே, நாடாளுமன்றத்தில தமிழ்ல கேள்வி கேட்கலாம்ங்கிற நிலையை உருவாக்கியவரு அய்யா குமரி அனந்தன்தான். தமிழில்ல தந்தி மற்றும் காசாணை (மணியார்டர்)கள் விண்ணப்பங்களை தமிழ்லயே பூர்த்தி செய்யலாம்னு போராடி, நமக்கு பெற்றுத்தந்தவரு.
அற்புதமான 29 தமிழ் புத்தகங்கள் எழுதியிருக்காரு. கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், குமரி அனந்தனின் தமிழ் அமுது, சிந்தனைப் பண்ணையில் பாரதியார், சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன்… அப்பப்பா… பேச்சில மட்டுமில்ல எழுத்திலும் தமிழ் விளையாடும்!
அதனாலதான் பொருத்தமா “இலக்கியச்செல்வர்”னு அழைக்கப்படுறார்.
அவ்வளவு எதுக்கு..?
தமிழ்மேல எத்தனை பற்று இருந்தா, தன் பெண்ணுக்கு “தமிழிசை”னு பேரு வைச்சிருப்பாரு?
அந்த தமிழிசை, இப்படி தமிழை கொலை பண்ணலாமா? தமிழ் மேல் அக்கறை இல்லாட்டியும், தன் பதிவுளைப் பார்த்தா, அப்பா குமரி அனந்தன் வருத்தப்படுவாரேனு நினைக்க வேண்டாமா?
சரி, இதுபத்தி பேசலாம்னு தமிழிசைக்கு அலைபேசினேன். எடுக்கவே இல்லை.
பாட்டுதான் ஓடிக்கிட்டிருந்துச்சு.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!”