சென்னை: தமிழக 16வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முடிவடைந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்
தமிழக சட்டப்பேரவை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சென்னை வாலாஜி ரோட்டில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. கடந்த ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி அன்று தொடங்கிa பட்ஜெட் கூட்டத்தொடர், செப்டம்பர் 13ந்தேதி (இன்று) உடன் முடிவடைந்தது. ஆகஸ்டு 13ந்தேதி நிதிநிலை அறிக்கையும், 14ந்தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்டு 20ந்தேதி முதல் ஒவ்வொரு துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று வரை நடைபெற்றது.
கடைசி நாளான இன்று காவல்துறைமீதான மானிய கோரிக்கைகள், விவாதங்கள் நடைபெற்றன. மேலும் நீட் தேர்வு விலக்கு மசோதா, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை அடமானம் தள்ளுபடி, காவல்துறையினருக்கு பல்வேறு சலுகைகள் உள்பட ஏராளமான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். கடைசி நாளான இன்று மட்டும் சுமார் 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
மொத்தம் 23 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையை,இதேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்துள்ளார்.