tamilnadu election

இந்திய சுதந்திரமடைந்து குடியரசான பின்பு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சுதந்திரத்திற்காக போராடியதும் தேசிய நோக்கும் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்த்தன. மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பிறகு மொழியை அடிப்படையாக வைத்து அரசியல் நடைபெற திராவிடகட்சி தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தது, திராவிட கட்சியில் ஊழல் குர்றசாட்டுக்களின் அடிப்படையில் விரிசல் ஏற்பட்டு எம்ஜிஆர் தனிக் கட்சி ஆரம்பித்த பிறகு, தனி மனித அரசியலும், வழிபாடும் தலையெடுத்தது. அதன் உச்சமாக எம்ஜிஆர் நோய் வாய்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அவரையும் அவரது கட்சியையும் தமிழக் மக்கள் வெற்றி பெறச் செய்ததே சாட்சி. அவரால் முழுமையாக முதல்வராக இயங்க முடியாவிட்டாலும் அவரது தலைமையை தமிழக மக்கள் ஏற்று தங்கள் தனி மனித விசுவாசத்தை வெளிப்படுத்தினார்கள்.

அவரது மறைவுக்குப் பிறகு, சற்றே தனி மனித வழிபாடு குறைந்து, தமிழ் மொழி, தமிழ் இன எழுச்சி, போன்றவை முன்னிறுத்துப்படுவது போல் ஒரு பிம்பம் ஏற்பட்டாலும் இரண்டு பிரதான கட்சிகளும் தலைமை வழிபாட்டைக் கோட்பாடாகவே கொண்டு ஆதரித்தனர் என்றால் மிகையாகாது. அதில் அதிமுக வினரின் செயல்பாடு மிக அதீதம். இது மட்டுமின்றி, தேர்தல் என்றாலே பணம் விளையாடும் திருவிழாவாக மாற்றிய பெருமையும் இரு கழகங்களுக்கும் உரித்ததாகும். இடைத் தேர்தல் என்றால் தனி சூத்திரங்களே வகுத்து ஜனநாயகத்தை பண நாயகத்தால் கேலிக்குள்ளாக்கிய பெருமையும் இவர்களுக்கு சேரும். 1967 தொடங்கி 2016 வரை, திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிந்து வந்தாலும், ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றசாட்டுகளை வைத்தே வந்துள்ளனர். இது வரை பெரிதாக எவரும் தண்டிக்கப்படவில்லை, ஒரு சிலர் தண்டிக்கப்பட்டாலும், மேல் முறையீட்டில் வழக்குகள் நிலுவையிலுள்ளன.

தொழில்நுட்ப முன்னேற்றத்தால், தகவல் பரிமாற்றம் பரவலாக்கப்பட்ட பின்பு இளைஞர்கள் அரசியல் தளத்தை உற்று நோக்க ஆரம்பித்துள்ளனர். அது மட்டுமின்றி 2014 நாடாளுமன்ற தேர்தலில் வளர்ச்சியை முன்னிறுத்தி பாஜக நரேந்திர மோடியின் தலைமையில் போட்டியிட்டதும் வென்றதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில், தில்லி சட்டமன்ற தேர்தலில் இரு பெரும் தேசிய கட்சிகளுக்கு மாற்றாக ” ஆம் ஆத்மி ” என்ற மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடித்ததும் மாற்றத்திற்கான தேவைக்கு ஒரு உத்வேகம் கொடுத்துள்ளது என்பது கண்கூடு.

தமிழகத்தைப் பொறுத்தவரை இரு பிரதான கட்சிகளுக்கு மாற்றத்திற்கு வாய்ப்பேயில்லை என்று இருந்த எண்ணம் மாறத் தொடங்கியதும் இந்த கால கட்டத்தில் தான். வழக்கமாக இரு பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் கட்சிகள் தனியாகவோ தங்களுக்குள் ஒரு கூட்டணியாகவோ களம் காண முடிவு செய்து தேர்தலை சந்திக்க இருக்கின்றனர். இந்த முயற்சி ஊடகங்களாலும் அரசியல் நோக்கர்களாலும் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதைக் காண்கிறோம். இந்த விமர்சனக்களின் அடிப்படை, கடந்த தேர்தல்களில் இந்த கட்சிகள் பெற்ற வாக்குகள் அவர்கள் வைத்திருந்த கூட்டணிகள் . ” வாக்கு வங்கி” கணக்குகள் இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டு பலம் பலவீனம் கணக்கிடப்பட்டு வெற்றி/ தோல்வி வாய்ப்புகள் அலசப்படுகின்றன.

ஒவ்வொரு தேர்தலும் முந்தைய அரசின் செயல்பாடு, தேர்தல் நேரத்தில் முன் வைக்கப்படும் மக்கள் பிரச்சனைகள், மக்கள் நல திட்டங்கள் குறித்த வாக்குறுதிகள், கட்சிகளின் நம்பகத்தனமை அடிப்படையிலேயே மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வண்ணம் வாக்களிக்கப்படும் என்பதை ஊடக மற்றும் அரசியல் நோக்கர்களும் ஏற்க மறுப்பது புரியாத புதிராக இருக்கிறது. தில்லி தேர்தலின் போது ஆம் ஆத்மி புது கட்சி, அதற்கு எதிரணியில் இருந்த கட்சிகள் முந்தைய தேர்தல்களின் அடிப்படையில் பெரும் வாக்கு வங்கிகளை வைத்திருந்தன என்றாலும், வெளிப்படையான ஊழலற்ற ஆட்சி என்ற ஆம் ஆத்மியின் பிரசாரம் அவர்களை வீழ்த்தியது என்பது வரலாறு.

ஆகவே, இந்த முன் உதாரணத்தின் அடிப்படையில், புதிதாக கூட்டணி கண்டிருக்கும் கட்சிகளின் கூட்டணி, வெளிப்படையான, ஊழலற்ற, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வளர்ச்சியை முன்னிறுத்தி பிரசாரம் செய்வது மக்களிடையே பெரும் ஆதரவைப் பெரும் என்பதில் சந்தேகம் உண்டா? இதே கட்சிகள் மாறி மாறி திராவிடக் கட்சிகளோடு கடந்த காலங்களில் கூட்டு வைத்திருந்திருக்கலாம், ஆனால், மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்க இப்போது தனிக் கூட்டு வைத்திருப்பது பெரிய மாற்றம் தானே…

ஜனநாயகம் தழைக்க, வெளிப்படையான, ஊழலற்ற, மன்னராட்சி போல தனி நபர் துதியில்லாத மக்கள் அரசு உருவாக வாக்காளர்கள் சிந்தித்து செயல்பட்டு சீர் தூக்கிப் பார்த்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நேரமிது…

மாற்று அரசியல் மக்கள் மனது வைத்தால் சாத்தியமே….

chandra bharathi
சந்திரா பாரதி

https://www.facebook.com/chandra.barathi.1