6c7a36fc-0613-41a1-a48f-5c08603b2ad7_S_secvpf
சென்னை:
தமிழகத்தில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்கள் (புலம்பெயர் தொழிலாளர்கள்)  எண்ணிக்கை 10 லட்சத்துக்கு மேல் உள்ளது என  ஆய்வு  முடிவு தெரிவிக்கிறது.
தமிழக தொழிலாளர் நலத் துறைக்காக தனியார் நிறுவனம் சார்பில் ஒரு சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 27 சதவீதம் பேர் உற்பத்தி துறையிலும், 14 சதவீதம் பேர் டெக்ஸ்டைல் தொழிற்சாலைகளிலும், 11.4 சதவீதம் பேர் கட்டுமான துறையிலும் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இன்ஜினியரிங் சார்ந்த உற்பத்தி தொழிற்சாலைகளில் 3 லட்சம் பேர், டெக்ஸ்டைல் மற்றும் அதை சார்ந்த தொழிற்சாலைகளில் 2 லட்சம் பேர், கட்டுமான துறையில் ஒரு லட்சம் பேர், ஓட்டல், லாட்ஜ், உணவகங்களில் 98 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
நல்ல சம்பளம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் ஆகியவை காரணமாக மேற்கு வங்காளம்ல ஒடிசா, பீகார், ஜார்கண்ட், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கே புலம் பெயர்ந்து வந்து பணிபுரிகின்றனர்.
இந்த தொழிலாளர்களுக்கு நகர பகுதிகளில் தொடர்பு மொழி இந்தி மற்றும் பெங்காலியாக உள்ளது. மேற்கு வங்க தொழிலாளர்கள் கிரானைட் தரை தளம் அமைப்பதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். வடகிழக்கு மாநில தொழிலாளரகள் செக்யூரிட்டி மற்றும் மருத்துவமனை பணிகளில் ஈடுபடுகின்றனர்.