theevu
சென்னையை சேர்ந்த ‘ஸ்பெல்பவுண்டு’ என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது: ‘’சென்னை தீவு திடலில், 42-வது இந்திய சுற்றுலா மற்றும் பொருள்காட்சி சமீபத்தில் நடந்தது. இந்த பொருள்காட்சியில் எங்கள் நிறுவனமும் கலந்துக் கொண்டு, கடைகளை அமைத்தது. இதற்காக சுற்றுலாத்துறையிடம் ஒப்பந்தம் செய்து கொண்டோம். இந்த ஒப்பந்தத்தின்படி தீவுத்திடலில் சுமார் 500 மேற்பட்ட கடைகளை அமைத்தோம். அரங்குகளையும் அமைத்தோம். அதில் கூடாரங்கள் அமைத்தோம். இதுதவிர அலங்கார வளைவுகள் அமைத்தோம்.
நாற்புறமும் அலங்கார வளைவும் அமைத்தோம். தீவுத்திடல் இடம் நீண்ட தூரம் உள்ளதால் இதில் 3 பலகை மேம்பாலங்களை அமைத்தோம். இதற்காக கோடிக்கணக்கில் செலவுசெய்தோம். பொருட்காட்சி நடத்த ஒதுக்கப்பட்ட கால கெடு முடிந்தது. இதனால் பொருட்காட்சி மூடப்பட்டது. பொருட்காட்சி முடிந்த தேதியில் இருந்து எங்கள் பொருட்களையும் கடைகளையும், அலாகார வளைவுகளையும், மர பாலங்களையும், கூடாரங்கள், எந்திரங்கள் உள்ளிட்ட அசையும் சொத்துக்களை அகற்ற 40 நாட்கள் விதிமுறைப்படி அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த அவகாசம் இருப்பதால் நாங்கள் பொருட்களை அப்புறப்படுத்தும் பணியை செய்ய தொடங்கினோம். இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி தீவு திடலில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதிமுக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டால் எங்கள் பொருட்கள் சேதப்படுத்தப்படும் என்று கருதி பொருட்களை நாங்களே அகற்றி கொள்கிறோம் என்று அதிகாரிகளிடம் அவகாசம் கேட்டோம். ஆனால் அதிகாரிகள் அவகாசம் கொடுக்கவில்லை. எங்களது நிறுவனத்துக்கு சொந்தமான பொருட்களை உடனடியாக அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். உடனே இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதில் பொருட்களை அகற்ற தடைகோரி கோரிக்கை விடுத்திருந்தோம். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘தற்போதைய’ நிலையே தொடரவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை கருத்தில் கொள்ளாமல், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான பொருட்களை அரசு அதிகாரிகள் அப்புறப்படுத்தி விட்டனர்.
இதனால் பல பொருட்கள் சேதமடைந்துள்ளது. இதற்காக ரூ. ஒரு கோடியே 50 லட்சம் நஷ்டஈடு தர உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறையை அதிகாரிகள் மீறி உள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் பின்பற்றவில்லை. இது தேர்தல் நடத்தை விதிமுறை ஆகும். எனவே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்தோம். அதன் மீது தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளது. அப்படியும் அதிகாரிகள் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். எனவே உயர்நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வழக்கில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘மனுதாரரின் பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. எனவே, ஒரு வக்கீல் கமிஷனரை அமைத்து அவற்றை ஆய்வு செய்து அறிக்கை பெறவேண்டும், அதிமுக கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறை மீறப்பட்டுள்ளது. எனவே உயர்நீதிமன்றம் உத்தரவு மீறப்பட்டுள்ளது. எனவே இதை உயர்நீதிமன்றம் கடுமையாக கருதி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ’ என்று கூறினார். இதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சுப்பையா , ‘பொருட்கள் அகற்றுவதில் தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று கடந்த 7-ந் தேதி இந்த உயர்நீிதிமன்றம் உத்தரவிட்டும், அதை அதிகாரிகள் மதிக்கவில்லை என்று மனுதாரர் கூறியுள்ளார். எனவே, வக்கீல் கெம்ப்ராஜ் என்பவரை சட்ட ஆணையரை நியமிக்கிறேன். அவர் தலைமையில் குழு சென்று தீவு திடலுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.அப்போது மனுதாரர் வக்கீல், மற்றும் அரசு தரப்பினர் உடன் இருக்க வேண்டும். இந்த கமிஷனர் ஆய்வு அறிக்கையை வருகிற 22-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.