jayalalitha-acharya-
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.
8-வது நாளான நேற்றைய விசாரணையில் கர்நாடக அரசு தரப்பு வக்கீல் பி.வி.ஆச்சார்யா, ‘’ஜெயலலிதா உள்ளிட்டோரின் கட்டிடங்கள் மதிப்பீடு தொடர்பாக ஐகோர்ட்டின் கணக்கீட்டில் நிறைய தவறுகள் உள்ளன. 17 கட்டிடங்களின் மதிப்பு ரூ.27 கோடி என்று ஊழல் தடுப்பு பிரிவு மதிப்பிட்டுள்ளது. இவற்றை எல்லாம் கட்டிட வாரியாக மதிப்பிட்டு தாக்கல் செய்த கணக்கின் அடிப்படையில் தனிக்கோர்ட்டு மதிப்பீடு செய்தது. ஆனால் ஐகோர்ட்டு ரூ.5 கோடியே 10 லட்சத்தை மட்டுமே கட்டிடங்களின் மதிப்பாக எடுத்துக்கொண்டு உள்ளது’’என்று கூறினார்.
மேலும் கட்டிடங்கள் மதிப்பு குறித்து இதுபோன்ற பல்வேறு புள்ளிவிவரங்களை ஆச்சார்யா தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘‘இது ஏதோ மீண்டும் கீழ்கோர்ட்டில் விசாரணையை 2-வது முறையாக மீண்டும் தொடங்குவது போல இருக்கிறது. இந்த கட்டிடங்களின் மதிப்பீடு தொடர்பான விஷயத்தில் ஐகோர்ட்டு எந்தெந்த இடங்களில் தவறு செய்துள்ளது என்பதை சுருக்கமான விவரங்களுடன் தாக்கல் செய்யுங்கள். அதில் பரப்பளவு, 1994-ம் ஆண்டில் பொதுப்பணித்துறை வரையறுத்த சதுர அடிக்கான மதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கிட்டு பட்டியல் தாக்கல் செய்யுங்கள்’’ என்று கூறினர்.
ஆச்சார்யா தொடர்ந்து தனக்கு வாதாட நேரம் ஒதுக்கவேண்டும் என்று கேட்டார். அதற்கு நீதிபதிகள், ‘‘(இன்று) மற்றொரு நீதிபதி அமிதவ ராய் மதியத்துக்கு மேல் இந்த அமர்வில் இருக்க மாட்டார் என்பதால் காலையில் 1 மணி நேரம் வக்கீல் ஆச்சார்யா வாதாடி தனது வாதங் களை முடித்துக்கொள்ளலாம்’’ என்று தெரிவித்தனர்.
மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தனது வாதங்களை முன்வைக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவருக்கு வாதாட ஒரு மணி நேரம் ஒதுக்குவதாக தெரிவித்தனர்.
இன்று 9வது நாளாக தனது வாதங்களை எடுத்து வைக்கிறார் ஆச்சார்யா.