
ஜல்லிக்கட்டு போட்டிக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்தது. பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இது தொடர்பான அறிவிக்கையை மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது.
இதனை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து மத்திய அரசின் அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு விலங்குகள் நல வாரியத்துக்கு மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதில், ‘’மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் பல்வேறு கோர்ட்டுகளில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளது. இது போன்ற நடவடிக்கையை நிறுத்திக்கொள்ளுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது அறிவுரை வழங்கும் அமைப்பு மட்டுமே. கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதற்கு முன்பு வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியை கோர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை எதிர்த்து வாரியம் சுப்ரீம்கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய மந்திரி சபையின் ஒப்புதல் இன்றி, எந்த வழக்கையும் தாக்கல் செய்வதற்கு விலங்குகள் நல வாரியத்துக்கு எந்த முகாந்திரமும் கிடையாது. எனவே வாரியத்துக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்று 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel