டோக்கியோ
ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவின் 5 -ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி ஏற்பட்ட ஆழிப்பேரலை அந்நாட்டில் சுமார் 18 ஆயிரம் பேரை பலிகொண்டது. பல லட்சம் மக்களின் வாழ்வாதாரங்கலை சீர்குலைத்தது. புகுஷிமா அணுமின் நிலையத்தையும் செயலிழக்கச் செய்தது.
அதன் நினைவு தினமான இன்று ஜப்பான் நேரப்படி சரியாக பிற்பகல் 2.46 மணிக்கு நாடு முழுவதும் 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைநகர் டோக்கியோவில் உள்ள நினைவுச் சதுக்கத்தில் ஜப்பான் பிரதமர் ஜிஞ்சோ அபே, பேரரசர் அகிட்டோ ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஜப்பானின் வட-கிழக்கு கடலில் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலையால் அப்பகுதியே உருக்குலைந்து போனதுடன் பல்லாயிரக் கணக்கான மக்களும் மடிந்து போயினர். 1986- செர்னோபில் அணு உலை விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கைச் சீற்றத்தை ஜப்பான் சந்தித்தது. ஆழிப்பேரலைகள் புகுஷிமா அணுமின் நிலையத்தையும் விட்டு வைக்கவில்லை. இதனால் பெரும் ஆபத்து ஏற்பட்டது..அணு உலையைச் சுற்றி இருந்த மக்களின் வசிப்பிடங்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியது. இதனால் அப்பகுதியிலிருந்த 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இன்னும் தங்களின் பழைய வாழ்விடங்களுக்கு திரும்ப முடியவில்லை.
இதனையடுத்து அணு உலைகளின் மீதான கண்ணோட்டமும் ஆபத்தும் வெகுவாக உணரமுடிந்த்து. இதன் தொடர்ச்சியாக அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் ஜப்பான் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் நடக்கத் தொடங்கி உள்ளன.