nila1
அடிக்கடி நிலநடுக்கம் உண்டாகும் பூமியின் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்திருக்கும் ஜப்பான் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 19 பேர் பலியாகியுள்ளனர்.
டோக்கியோ:
முன்னதாக நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பத்துபேர் உயிரிழந்து, சுமார் 650 பேர் காயமடைந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் ஜப்பானின் தென்மேற்கு தீவான கியூஷு பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 அலகுகளாக பதிவாகியுள்ளது.
மிகமோசமான இந்த நிலநடுக்கத்தின் விளைவாக பல அடுக்குமாடி வீடுகளும், தனி வீடுகளும் இடிந்து விழுந்தன. சாலைகளில் பிளவு ஏற்பட்டு, பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் கியூஷு தீவுக்கு அருகாமையில் உள்ள ஒரு எரிமலை வெடித்து, தீப்பிழம்பை கக்கி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 19 பிரேதங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலரை உயிருடன் மீட்கும் முயற்சியில் பேரிடர் நிவாரணம் மற்றும் தீயணைப்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த சுமார் 800 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளாட்சிதுறை சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.