ரவுண்ட்ஸ்பாய்:
சில சமயங்கள்ல எங்க எடிட்டர் ரொம்ப நல்லவரு. என்னையும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அனுப்பிடுவாரு. ஆனா அங்க போயி சிரிக்காம திரும்ப முடியாது. அப்படிப்பட்ட ப்ரஸ் மீட்டுக்குத்தான் அனுப்பவாரு. அப்படித்தான் இன்னைக்கு சரத்குமார் ப்ரஸ் மீட்டுக்கு அனுப்பினாரு.
இதை தரமான செய்தியா, தூய தமிழ்ல எழுதறேன். படிங்க.
செய்தி:
நடிகர் சரத்குமார், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளில் இருந்தார். தற்போது சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவுடன், அக் கட்சியின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு எம். எல்.ஏ. ஆனார்.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார்.
இதற்கிடையே அவரது கட்சியின் துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் உட்பட பலர் கட்சியில் இருந்து விலகினர்.
இன்னொரு புறம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க தலைவராக இருந்த சரத்குமார், அதற்கான தேர்தலில் தோல்வி அடைந்தார்.
இந்த சூழ்நிலையில், அவர் அரசியலை விட்டே விலகுவதாக செய்திகள் பரவின.
இதையடுத்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் சரத்குமார்.
அப்போது அவர், “நான் அரசியலுக்கு முழுக்கு போடப்போவதாக வெளியான செய்தி தவறானது. நான் ஆரம்ப காலத்தில் இருந்து பத்திரிகையாளராக துவங்கி பல சிரமங்களை அனுபவித்து பிறகு, அரசியலுக்கு வந்தவன். அதுவும் ஒரு குறிக்கோளுடன் வந்தவன் நான்.
வாழ்க்கையில் நான் பல்வேறு தடைகளை கண்டவன், தோல்வியை கண்டு துவள மாட்டேன். என்னை பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்ப வேண்டாம்.
பத்திரிகை இந்த நாட்டின் தூண்கள். எனவே அவர்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும். அரசியலுக்கு முழுக்கு என்று வெளியான செய்திக்கு எனது மறுப்பை தெரிவிக்கிறேன்.
தற்போது நடப்பது டிஜிட்டல் உலகம். இந்த காலத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே எதையும் சாதிக்க முடியும். எனது பொருளாதார வளத்திற்காக நான் தற்போது சில சினிமாக்களில் நடித்து வருகிறேன். சேவை செய்வதுதான் என் நோக்கம்.
அதை மீறி கூடுதல் நேரம் இருப்பதால் சினிமாவில் நடிக்கிறேன். தொடர்ந்து நடிப்பேன்” என்று சரத்குமார் தெரிவித்தார்.