தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்கள் இருப்பதாக அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அவர் கடன் வாங்கும் போது பிணையாக வைத்த சொத்துக்களை விற்று அதன் மூலம் கடன் தொகையை ஈடுகட்டும் நடவடிக்கையில் வங்கிகள் தற்போது இறங்கியுள்ளன.
மல்லையாவுக்கு உள்ள சொத்துக்கள் என்னென்ன?
2011ம் ஆண்டில் மல்லையாவின் சொத்து மதிப்பு சுமார் 6 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக இருந்தது என்றும் 2013ல் இது 4 ஆயிரத்து 800 ரூபாயாக குறைந்து எனவும் , உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவிக்கிறது.
மல்லையாவிடம் உள்ள சொத்துக்களில் மிகவும் மதிப்பு வாய்ந்தது பெங்களூர் “அப் சிட்டி”யில் உள்ள கிங்ஃபிஷர் டவர்ஸ் அலுவலக கட்டடம்தான். இந்த கட்டடத்தின் உரிமையில் 55% பங்குகள் மல்லையா வசம் உள்ளது. 34 அடுக்குகளை கொண்ட இது பெங்களூரின் வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படுகிறது.
இது தவிர ஃப்ரான்ஸின் சசாலிடோ என்ற கடலோர நகரத்தில் மாளிகை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு, தென்னாப்ரிக்காவிலும் ஸ்காட்லாந்திலும் மாளிகைகள் லண்டனில் பண்ணை வீடு என மல்லையா சொத்துப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
பிரான்ஸ் நாட்டின் செய்ன்ட் மர்குரிட் என்ற ஒரு தீவையே மல்லையா தனக்கு சொந்தமாக்கியுள்ளார்.
இது தவிர மான்டிகார்லோ தீவிலும் மல்லையாவுக்கு இடம் உள்ளது. இந்தியாவில் சுற்றுலா சொர்க்கமான கோவாவில் ஓய்வெடுப்பதற்கென்றே 90 கோடி ரூபாயில் கிங்ஃபிஷர் வில்லா, மும்பையில் கிங்ஃபிஷர் ஹவுஸ் என்ற பெயரில் அலுவலகமும் மல்லையாவுக்கு உண்டு.
இமய மலை அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களையும் மல்லையா வாங்கிக் குவித்திருப்பதாக தகவல் உண்டு. இவருக்கு வாகனங்கள் என்றால் கொள்ளை பிரியம். ஜெட் விமானங்கள், பிரமாண்டமான சொகுசு படகுகள், ஹெலிகாப்டர்கள், விலை மதிப்பற்ற பழங்கால கார்கள் என மல்லையாவின் வாகன வரிசை நீள்கிறது.
தான் வாங்கிய கடனுக்கு 5 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பிணையாக வைத்துள்ளார். இதை கையகப்படுத்தத்தான் வங்கிகள் தீர்மானித்துள்ளன.
அதே நேரம் மல்லையாவின் வெளிநாட்டு சொத்து விவரங்களையும் மத்திய அமலாக்கத் துறை தோண்டித் துருவத் தொடங்கியுள்ளது.
அதே நேரத்தில், மல்லையாவின் இந்திய சொத்துக்களை ஏலம்விட்டால் வாங்க ஆள் இல்லாத நிலை.