டில்லி,
கடவுள் ராமரின் மனைவி சீதா தேவி பிறந்த இடம் இதுதான் என்பது ஒரு நம்பிக்கைதான் என நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு பதிலளித்தது.
ராமரின் மனைவி சீதையின் பிறந்த இடம் எது என்பதற்கான வரலாற்று ரீதியான ஆதாரம் உள்ளதா என மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குக் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா அளித்த எழுத்துப் பூர்வமான பதிலில், பீஹாரில் இருக்கும் சீதாமரிதான் சீதை பிறந்த இடம் என சொல்லப்படுகிறது.
ஆனால் இது ஒரு நம்பிக்கைதான். வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்று கூறினார். மேலும் சீதாவின் பிறந்த இடம் மிதிலை என்று வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். சீதாவின் கணவர் ராமரும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் வணங்கப்படுகிறார் என்றும் கூறினார்.
ராமாயணத்தில் ராமரும் சீதையும் முக்கியப் பாத்திரங்களில் வருகின்றனர். அதனால் அவர்கள் இந்துக்களால் அதிகளவில் வணங்கப்படும் தெய்வங்களாக உள்ளனர் என்று கூறினார். இதையடுத்து, காங்கிரஸ் மூத்த உறுப்பினர் திக்விஜய் சிங் எழுந்து, ராமர் தனக்கும் கடவுள்தான். ஆனால் அமைச்சரின் பதில் தனது நம்பிக்கையை அசைத்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் அவர், அயோத்தி ராமர் இயக்கத்தால்தான் நாடாளுமன்றத்தை பாஜகவால் கைப்பற்ற முடிந்தது. ஆனால் தற்போது சீதை, ராமர் எல்லாம் ஒரு நம்பிக்கைதான் என்று சொல்வது நகைப்புக்குரியது என விமர்சனம் செய்தார்.