r

குமார் முதல் மிஸ்டு கால் கொடுத்த போது காலை மணி சுமார் ஏழு . பதினெட்டாவது மிஸ்டு கால் வந்து போது சரியாக எட்டு மணி . அதற்கு மேலும் என்னால் பொறுமையை கடைபிடிக்க முடியாமல் போனது .

குமார் இருக்கும் செம்மேபாளையத்துக்கும் சண்முகனாகிய எனக்கும் அப்படி ஒன்றும் வெகு தூரமில்லை . இரண்டு கிலோமீட்டருக்கும் குறைவு தான் . பதினெட்டு மிஸ்டுகால் கொடுத்த நேரத்தில் ஒரு நடை வந்து பேசவேண்டியதை பேசிவிட்டு திரும்பியே போயிருக்கலாம் .

வீடு சோறு போடுகிறது . வீடு உடை எடுத்து தருகிறது . வீடு காய்ச்சல் தலைவலியென்றால் வைத்தியம் செய்கிறது . இப்படி அத்தியாவசிய பிரச்சனைகளை சும்மா சுற்றும் குமாருக்கு அவனது வீடு கவனித்துக் கொண்டாலும் அதற்கு மேலான தேவைகளை மிஸ்டு கால்களின் மூலம் தான் அவன் நிறைவேற்றிக் கொள்கிறான் . அதற்கு வலது காதின் பின்புறம் உள்ள மச்சம் தான் காரணம் என்பதை ஆணித்தரமாக நம்புவதன் காரணமாகவே படித்து முடித்த பின் அவன் எந்த ஆணியையும் பிடுங்க முயற்சிக்கவில்லை .

ரிங் ஆன இரண்டாவது விநாடியில் எடுத்தான் ” சண்முகா வீட்ல இருக்கியா வெளிய இருக்கியா ? ” பதினெட்டு அழைப்புகளுக்கு கோபம் கொள்ளாமல் பேசிய குமார் ஆச்சரியமாக தெரிந்தான் .

” வீட்ல தான் இருக்கேன் குமாரு ! போன் சைலண்ட்ல போட்ருந்ததால பாக்கல ! என்னடா மேட்டர் ? வெடியால கூப்பாடு போட்ருக்குற போல ? ”

” எனக்கு தேவதானா இது ? உனக்கெல்லாம் உதவி செய்யோணும்னு நெனச்சம் பாரு ! நீ என்னடானா எகத்தாளம் பேசற ! ”
/ உதவி / இது இரண்டாவது ஆச்சரியம் . !

” மேட்ர சொல்லு ” மேலும் ஆச்சரியங்களை உடம்பு தாங்காது .

சட்டென்று குரலில் வயலின் சோகத்தை சேர்த்துக் கொண்டான் ” சீனு மாமன் போய்ட்டாருடா ! ”

சட்டென்று மனதுள் ஒரு பலூன் உடைந்தது .

” உடனே கெளம்பி வரேன் நீ ரெடியா இரு “என்று போனை வைத்தேன்.

ஞாயிறு தோறும் கிரிக்கெட் மேட்ச் நடக்கும் இடத்தில் விசிலடித்து ரசிக்கும் ஒரு கிரிக்கெட் ரசிகராகத்ததான் ஐந்து வருடங்களுக்கு முன்பு அறிமுகமானார் சீனு மாமா . இரண்டு அணிகளும் பவுண்டரிகளை பறக்க விடும் போது விசில் பறக்கும் அவரிடம் . இரண்டு அணிகளும் விக்கெட்டுகளை இழக்கும் போது தலையில் கைவைத்து உட்கார்ந்திருப்பார் .

” யார்டா அந்தாளு ! எவன் அடிச்சாலும் கை தட்றான் ! கிறுக்கனா இருப்பாம் போல ! ரெண்டு டீமும் ஜெயிக்கோணும்னு நெனைக்கிறானா ” குமார் தான் அவரின் நடவடிக்கைகளை கவனித்து விட்டு பொங்கினான் .

எங்கள் அணியென்பது குமார் அவதரித்த புண்ணிய ஸ்தலமான செம்மிபாளையமும் நான் உதித்த ஆறாக்குளமும் சீனு மாமனின் அய்யம்பாளையமும் ஈன்றெடுத்த பதினைந்து டெண்டுல்கர்களால் ஆனது ! ஆடினால் பெட் மேட்ச் இல்லையென்றால் நோ மேட்ச் என்பது எங்கள் தாரக மந்திரம் . ஐநூறு ரூபாயிலிருந்து எழுநூற்றைம்பது ரூபாயாக பெட் ரேட் இரண்டு மாதத்திற்கு முன்பு தான் உயர்த்தி நிர்ணயித்தான் கேப்டன் கார்த்தி .

அணிகளை பொறி வைத்து பிடித்து வருவதில் கேப்டன் கார்த்தி கில்லாடி . அவன் அழைத்து வரும் அணிகள் ஐெயித்ததே இல்லை இதுவரை . இருந்தும் பொறியில் அவைகள் வந்து மாட்டிக்கொள்ள ஒரு காரணம் பளிங்கு தரைபோல நேர்த்தியாக இருக்கும் எங்கள் பள்ளி மைதானம் தான் . இதன் காரணமாகவே கார்த்தி நிரந்தர கேப்டனாக நீடிக்கிறான் எங்கள் அணிக்கு .

அல்வாத்துண்டை வாயில் வைத்து விழுங்கக் கொடுப்பது போல எதிரணியின் வீரன் ஒருவன் அந்தக் கேட்ச் வாய்ப்பை கார்த்திக்கு கொடுத்த அந்த மேட்ச்சில் இருந்து தான் சீனு மாமா எங்களுக்கு நெருக்கமானார் . அவர் காட்டிய நெருக்கத்தை குறைவின்றி நாங்களும் காட்டியதால் எங்கள் அணியின் மேனேஜர் பதவி தானாக அவரை சென்றடைந்தது .
வழக்கமா கேட்ச்சுகளை கோட்டை விடும் கார்த்தி அந்தக் கேட்ச்சை மட்டும் பிடிக்காமல் வழக்கம் போலவே விட்டிருந்தால் விரலிடுக்கில் பிளேடால் கீரியது போன்ற காயம் ஆனதை தவிர்த்திருக்கலாம் . ரத்தம் சொட்டுவதை பார்த்து சீனு மாமன் தான் ஓடிப்போய் பஞ்சும் தூணியும் மருந்துக் கடையில் வாங்கி வந்து துடைத்து கட்டுப் போட்டுவிட்டார் .

750 ரூபாய்கான இரவு கொண்டாட்டத்தில் அவரும் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைத்து வந்து தன் நன்றிக்கடனை தீர்த்துக் கொண்டான் கார்த்தி .

அதற்கு பிறகு எங்கள் அணிக்கு மட்டும் சியர்ஸ் மேன் ஆகிப்போனவர் காலப்போக்கில் எங்கள் வாலிப சுக துக்கங்களில் பங்கெடுக்கும் உற்ற நண்பனாக ஆகிப் போனார் .
அ�ஜித் ரசிகர் மன்றம் தொடங்கும் எங்கள் யோசனையே மாற்றி வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடங்க வைத்தார் .

சங்கத்தின் செயலகமான பத்துக்கு பதினாறு அறையில் கொசுக்களுடன் அவரும் குடியிருக்க ஆரம்பித்தார் . சமயத்தில் இரண்டு மூன்று நாட்கள் கூட வீட்டுப் பக்கம் போகாமல் பழைய பேப்பர்களையெல்லாம் எடுத்து வைத்து படித்தபடி படுத்துக் கிடப்பார் . இரண்டு மகன்களும் ஒரு மனைவியும் நாலு ஏக்கர் நிலமும் அவருக்கு இருப்பதாக எல்லோருக்கும் தெரியும் .

ஆறாக்குளத்தில் மாரியம்மன் பண்டிகையின் போது ஒரு வாரம் போல வீட்டுப் பக்கமே போகாமல் விழாவை சிறப்பித்து திரிந்தார் . ஒரு ஈ காக்கா கூட அவரை தேடி வரவில்லை . ஒரு முறை மட்டும் அவரின் மூத்த மகன் வீட்டில் வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாயை காணவில்லை என்று வந்தான் . நான்கு நாட்களாக வீட்டுப் பக்கமே வரவில்லையென்று அவர் நிரூபித்த பிறகு கைவிடப்பட்ட ஒரு ஜந்துவை பார்ப்பது போல பார்த்து விட்டு கிளம்பிச் சென்றான் .

சுப்பிரமணியன் டீக்கடையில் எடுபிடி வேலைகள் செய்து கொடுப்பார் . அதனால் உணவுப் பிரச்சனை இல்லை . அப்படியே இல்லையென்றாலும் மாமனுக்கு உணவு ஒரு பிரச்சனையே இல்லை .

இரவு நேரங்களில் அவரின் வாலிப வயதுக் காதல் காவியங்கள் அவர் சொல்லசி சொல்ல திகட்டாதவை . ஆறு மாதங்களாக முயன்றும் வசந்தியின் கடைக்கண் பார்வை கிடைக்காமல் தவித்த சுரேசுக்கு சீனி மாமனின் யோசனை தான் கைகொடுத்தது .
புறாவிடு தூது காலத்தியவர் வாட்சப் காலத்திய காதலுக்கு எப்படி அப்டேட் ஆனார் என்பது எங்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது .

சங்கப் பொருளாளர் பார்த்திப
ன் அண்ணனின் காதலி சாந்தி . பார்த்தியின் காதல் சாந்தியின் வீட்டுக்கு தெரிந்து போன நாளொன்றில் சங்கத்தில் கண்ணீரும் கம்பலையுமாக பார்த்தி அண்ணன் கதறி அழுத போது யாராலும் தேற்ற முடியவில்லை . இரண்டு நாட்களில் சாந்தியை அவளது முறைப்பையனுக்கு கட்டி வைக்கப் போகிறார்களாம் . இரவு முழுவதும் பார்த்திக்கு ஆறுதல் சொல்லியபடியே உடனிருந்த சீனு மாமன் விடிந்ததும் வீட்டுக்கு சென்று சிறிது நேரத்தில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுமாக வந்து நின்றார் . சோர்ந்து கிடந்த பார்த்திக்கு டீ வாங்கி வந்து கொடுத்துவிட்டு ” நானிருக்கும் போது நீ எதுக்குடா மாப்ள கவலப்படற ! தகிரியமா இரு ! சித்த நேரத்துல வந்தர்றேன் ” என்று சொல்லிச் சென்றவர் ஒரு மணி நேரத்தில் சாந்தியின் வீட்டிலிருந்து அதிகாரப்பூர்வமாக பார்த்தி சாந்தி திருமணத்திற்கு சம்மதம் பெற்று திரும்பி வந்தார் .

எங்களோடு சேர்த்து அவர் மீது ஆச்சரியங்களை அவருக்கு துணையாக சங்கத்தின் வாசலில் படுத்துக் கிடக்கும் தெருநாய்க்கும் அன்றைய தினம் விதைத்துச் சென்றது .

பார்த்தி அன்று ஆயிரம் ரூபாயை என் கையில் தான் கொடுத்தான் . சீனு மாமனை சிறப்பாக கவனிக்க வேண்டுமென்பது அந்த ஆயிரம் ரூபாய்க்கான உத்தரவு .
சிறப்பான கவனிப்பினிடையில் அவரே தான் சொன்னார் ” தோத்துப் போன காதலும் ஒரு காதல ஜெயிக்க வைக்கும்டா மாப்ள ! நல்லா தெரிஞ்சுக்க ! ”

புரியாமல் பார்த்த போது சாந்தியின் அம்மாவுக்கும் அவருக்குமான பழங்காதலை எந்த உணர்ச்சியுமின்றி சொன்னார் . இதை யாரிடமும் சொல்லக் கூடாதென்று அவர் தலைமேல் அடித்து சத்தியம் செய்யச் சொன்னார் என் எச்சில் கையையும் பொருட்படுத்தாமல் . அப்படியே படுத்து உறங்கிப்போனார் .

இதெல்லாம் விட பார்த்தியின் திருமணத்தன்று மண்டபத்தின் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை . காதல் தோற்றுப் போனதாக சொல்லி ஒருநாள் குடித்து அழுது கிடந்த பார்த்தியை போலவே அன்று சங்கத்தில் அழுதபடியே குடித்துக் கிடந்தார் . அவரை பார்த்தியின் உத்தரவின்பேரில் மண்டபத்துக்கு அழைத்து போக வந்த ஒவ்வொருவரும் காரணம் புரியாமல் திரும்பி சென்றனர் . அவரோடு இருந்த எனக்கு மட்டுமே அதற்கான காரணம் தெரியும் . சிரிப்பு தான் வந்தது எனக்கு . ஆனால் ஒவ்வொரு முறை சிரிக்க முயலும் போதும் அதற்கு முன்பு அழுகை எனக்கும் ஏனோ வந்து தொலைத்தது .
ஆக பார்த்தியின் திருமணம் எனக்கும் சீனு மாமனின் கனவுக் காதலோடே கழிந்தது . போதையில் படுத்தவாறே கைகளை தரையில் அடித்தவாறு உறக்கத்தில் பேசிக்கொண்டே இருந்தார் விடியும் வரை .

அன்றிலிருந்து மூன்றாவது வாரத்தில் நெருங்கிய சொந்தத்தில் ஒரு திருமணம் என்று சொல்லி சென்றவர் அதன் பிறகு திரும்பவே இல்லை . உடம்புக்கு முடியாமல் படுத்த படுக்கையாக கிடக்கிறார் என்ற தகவல் மூன்று வாரம் கழிந்து விக்கெட் கீப்பர் சிவராமன் தான் மேட்ச் விளையாட வந்தபோது சொன்னான் . பார்க்கச் சென்ற போது நினைவு தப்பிக் கிடந்த அவரது உடலின் வேதனை காணச் சகிக்காமல் ஓடி வந்து விட்டோம் .
நரம்பெனச் சுண்டிக் கிடந்த உடல் தலை வெட்டப்பட்ட ஆட்டுக்குட்டியின் உயிர் பிரியும் உடலைப் போல துடித்து துடித்து அடங்கிய காட்சி மீண்டும் அவரை பார்க்க செல்லும் மன உறுதியை எங்களிடமிருந்து மொத்தமாக பறித்து விட்டிருந்தது என்றே சொல்லலாம் .

அதற்கு பிறகான நாட்களில் அவரைப் பற்றி வந்த செய்திகள் எங்களிடையே ஒரு கனத்த மெளனத்தை போர்த்திச் சென்றது . எலும்பும் தோலுமான உடம்பில் தினம் இரண்டு மூன்று முறை மட்டும் நினைவு வந்து செல்லும் பிரேதமாக அதுவும் கவனிப்புகள் கைவிடப்பட்ட ஒரு அனாதைப் பிணமாக அந்த வீட்டில் சீனு மாமன் கிடக்கிறார் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை .
நாங்கள் அவரின் மரணச் செய்திக்கு காத்திருந்தோம் . அவரின் விடுதலைக்கு காத்திருந்தோம் .

டீக்கடையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த குமார் ஓடிவந்து ஏறிக் கொண்டான் .

” உனக்கு யாரு தகவல் சொன்னாங்க குமாரு ? ”

” காத்தால லைன் மேன பாக்க அய்யம் பாளையம் போயிருந்தனா … மாமன் வீட்டு வழியா திரும்பி வரும் போது பந்தல் போட்றவங்களுக்கும் பந்தம் புடிக்கறவனுக்கும் சொல்லச் சொல்லி போன்ல ஒருத்தரு பேசிட்டு இருந்தாரு மாப்ள ! அதான் ஊருக்கு வந்து உனக்கு போன் அடிச்சேன் . நீ என்னடானா எடுக்குவனாங்கற ?

” வேற யாருக்கெல்லாம் சொல்லிருக்க ? ”

” கார்த்திக்கும் பார்த்திபன் அண்ணனுக்கு மட்டும் தான் மாப்ள சொல்ல முடிஞ்சுது ! ரெண்டு பேரும் கெளம்பி வரேன்னாங்க கொஞ்ச நேரத்துல ”

பாக்கெட்டில் கைவிட்டு செல்போனை எடுத்து குமார் கையில் கொடுத்தேன் !
” கார்த்திய கூப்பிட்டு பல்லடம் போய் பெரிய மாலை ஒன்னு வாங்கிட்டு வர சொல்லிடு குமாரு கையோட ”

சொல்லி முடித்தவனிடமோ என்னிடமோ துக்கத்தின் சாயல் தென்படாததை அய்யம்பாளையம் நோக்கி சென்ற என் மிதமான வேகத்தினூடே துல்லியமாக கணிக்க முடிந்தது .

” இதே தேதில இனி ஒவ்வொரு வருசமும் சீனு மாமன் நினைவுக்கோப்பை டோர்னமெண்ட் நடத்திரணும் சண்முகா ” என்று பின்னால் அமர்ந்து தோள் தொட்டு சொன்ன குமாரின் குரல் மேற்படியான எந்த உணர்ச்சியும் காட்டிக் கொள்ளாமல் தான் ஒலித்தது .

சீனு மாமனின் வீட்டை நெருங்குகையில் பலத்த அதிர்ச்சி ஒன்று முகத்தில் அறைந்தது . ஒரு சம்பவம் நடந்ததற்கான , அது எவ்வளவு சிறிய , முக்கியத்துவமில்லாத சம்பவமாக இருந்தாலும் அப்படி ஒன்று நடந்ததற்கான எந்த அறிகுறியுமற்று இருந்தது அந்த வீடு ! முன் கதவு முக்கால் பகுதி சாத்தப்பட்டிருந்தது .
உள்ளே தொலைக்காட்சி விளம்பர பாடல் காற்று வழியே வந்து ஹமாம் போட்டு குளிக்கச் சொன்னது .
வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி குமாரின் முகத்தை கோபத்தோடு பார்க்க முற்பட்ட என்னை கையைப் பிடித்து அவசரமாக சாலையின் எதிர்ப்பக்கம் இருந்த பெட்டிக்கடைக்கு இழுத்துச் சென்றான் . குமாரின் மீது வந்து கோபத்தை காட்டிலும் ஒரு பெரிய ஏமாற்றத்தை சந்தித்துவிட்ட உணர்வே எனக்கு மேலோங்கியிருந்தது . உண்மையில் சீனு மாமனின் மரண செய்தி எதிர்பார்த்திருந்த ஒரு நிம்மதியையே மனதுக்குள் நிறைத்திருந்ததை இப்போது உணர முடிந்தது .

” ரெண்டும் வில்ஸ் குடுங்க ” என்று வாங்கி ஒன்றை நீட்டினான் . நான் மறுக்கவும் ஒன்றை பெட்டிக்கடைக்காரரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு சைகையால் தீப்பட்டி கேட்டான் . மாமனின் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்ததில் துளிர்க்க ஆரம்பித்த கண்ணீரை தவிர்க்க குமார் பக்கம் திரும்பினேன் .

” எதுத்த வூட்டுல எளவாயிப் போச்சுங்கற மாதிரி காலைல பேசீட்டு இருந்தாங்க … பாத்தா அப்பிடியொன்னும் தெரீலீங்களா ?
பெட்டிக்கடைக் காரரிடம் விசாரித்துக் கொண்டிருந்த குமாரின் மேலிருந்த கோபம் தணிந்திருந்தது

” ஆமாந்தம்பி ! அது நாலஞ்சு மாசமா இழுத்துட்டு கெடக்கற கேசு ! போகவும் மாட்டீங்குது பொழைக்கவும் மாட்டீங்குது . ஒடம்பு துடிச்சுட்டே கெடக்கும் . காத்தால போயி பாத்துருக்குறாங்க மரக்கட்டை மாதிரி கெடந்திருக்குது ! கண்ணு ரெண்டும் முழிச்ச மாதிரியே இருக்கவும் கம்பவுண்டர போய் கூப்பிட்டு வந்து காட்டிருப்பாங்க போல ! அந்தாளு வந்து பாத்துட்டு கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரி தான் ஆக வேண்டியத பாருங்கனு சொல்லீட்டு போய்ட்டான் ”

நாங்கள் அவர் சொல்வதை கவனிக்கின்றோமா என தலையை நிமிர்ந்து சோதித்தார் . குமார் விரலிடுக்கில் காற்றில் கரைந்து கொண்டிருந்த சிகரெட்டை உருவிக்கொண்டேன் .

” அதா பாருங்க , வீட்டுக்கு மின்னாடி பந்தல் போட ஓலை சவுக்கு பூட்டுக கூட கொண்டாந்து எறக்கிட்டாங்க ! அதென்னடானா பழையபடி ஒடம்பு துடிக்க ஆரம்பிச்சுடுச்சாம் . பாவம் ! போய் பாக்கவே கஷ்டமா இருக்குது தம்பி ! தலகாணிய எடுத்து மூஞ்சி மேல வச்சு ஒரே அமுத்து ! நிம்மதியா போய் சேரட்டும்னு நம்மளுக்கே கை பரபரங்குது ! என்ன செய்ய ! விதினு ஒன்னு இருக்குதல்ல ”

விலகி வந்து அருகில் இருந்த வேப்ப மரத்தடியில் நின்றோம் . ” கார்த்திய கூப்பிட்டு மால வாங்க வேண்டாம்னு சொல்லிடு குமாரு ”

எதிர்புறம் சீனு மாமனின் வீட்டிலிருந்து அவரது மூத்த மகன் வெளியே வருவது தெரிந்து . கதவை சாத்திவிட்டு பூட்டுப் போட எத்தனித்தவன் பிறகு பூட்டாமல் பூட்டை கதவில் வெறுமனே தொங்க விட்டு வாசலில் நின்றிருந்த பைக்கை உதைத்து மேற்கு திசையில் சென்று மறைந்தான் .

பல்லடம் ராசு
பல்லடம் ராசு

” மாப்ள ! மாலைய வாங்கிட்டு வந்துட்டு இருக்காணாம் ! திருப்பி குடுக்க சொல்லிடட்டுமா ? ” என்று கேட்டுவிட்டு மீண்டும் போனை காதருகில் கொண்டு சென்ற குமாரிடமிருந்து அதை பிடுங்கி கட் செய்து அவன் பாக்கெட்டில் போடும் போது கைகளில் பரவிய நடுக்கத்தை குமார் கவனிக்க தவறவில்லை .

” ஏன்டா ? ”

” வாங்குன மாலைய திருப்பிக் குடுக்க கூடாது ! நீ வா ”

குமாரின் கையை உறுதியாக பற்றி அழைத்துக் கொண்டு சாலையை கடந்து சீனு மாமன் வீட்டுக் கதவை திறந்த போது ஏதோ புரிந்தவனாக கையை விடுவித்துக் கொள்ள உதறினான் . எனினும் அந்த வீட்டின் நிசப்தமோ அல்லது வேறெதுவோ ஒன்று அவனை வாய் திறந்து எதுவும் பேச விடாமல் செய்திருக்க வேண்டும் . ஆனால் என் உறுதியான பிடி அவனை என்னோடு சேர்த்து அந்த வீட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தியது . அதே பிடியை தளரவிடாமல் சீனு மாமன் படுக்கவைக்கப்பட்டிருக்கும் பின்கட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன் .

**

அடுத்தடுத்து வருடங்களில் இதே தேதியில் சீனு மாமனுக்கு இக்குடும்பம் அஞ்சலி செலுத்தி படையலிடுமா என்று தெரியாது . ஆனால் ‘ சீனு மாமன் நினைவுக் கோப்பை ‘ பலத்த ஆரவாரத்துடன் நடந்து கொண்டிருக்கும் என்பது நிச்சயம் . யார் பவுண்டரி அடித்தாலும் விசிலடித்துக் கொண்டு யார் அவுட் ஆனாலும் தலையில் கைவைத்து உட்கார்ந்து கொண்டு எல்லா அணிகளும் ஜெயிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் நாங்கள் அவருக்கான அஞ்சலியை செலுத்திக் கொண்டிருப்போம் .
இப்படிக்கு
சீனு மாமா கிரிக்கெட் குழுவின்
சண்முகன்
உட்பட 14 டெண்டுல்கர்கள் ( மட்டுமே )�