முதல்வர் ஜெயலலிதாவுக்கென்று சிறப்புக்குணங்கள் சில உண்டு. அவற்றிலொன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வாரி வழங்குவது.
ஜெ.வின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. “110வது விதியின்கீழ் முதல்வர் ஜெயலலிதா சொன்னதோ, கடல் அளவு; செய்ததோ, கை அளவுதான்! இதுதான் 110வது விதியின் கீழ்அவர் படித்த அறிக்கைகளின் கதி! இதையெல்லாம் தமிழ் மக்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்,
அதுதான் அவர்களின்தலை விதி” என்று தனக்குத்தானே கேள்வி கேட்டு தனக்குத்தானே பதில் சொல்லும் அறிக்கையில் வழக்கம்போல விதியை நொந்துகொண்டார் கருணாநிதி. ஏற்கெனவே எதிர்க்கட்சிகள், இந்த 110 அறிவிப்புகளை எதிர்த்து தமிழகமெங்கும் கண்டன கூட்டங்களையும் நடத்தினர்.
எப்பொருள் நோக்கினும் அப்பொருளில் அம்மா புகழ் காணும் அதிமுகவினர் இதையும் கொண்டாடுகிறார்கள்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் சபாநாயகர் ப. தனபால் , “ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், சட்டப்பேரவையில்110 வது விதியின் கீழ் நூறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு சாதனை புரிந்துவிட்டார்” என்று புளகாங்கிதம் அடைந்தார். “விதியைமாற்றிய விதி” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு அதிமுகவினர் இதை கொண்டாடினர் அதிமுகவினர்.
இன்னொன்றும் “வழக்கம்போலவே” நடக்கிறது. இந்த 110 விதி என்றால் என்ன என்பது புரியாமல் பெரும்பாலான மக்கள் குழம்பி நிற்கிறார்கள்.
ஆகவே கருணா – ஜெயா.. இவர்களைவிட்டுவிட்டு முதலில் 110 விதி பற்றி நாம் பார்ப்போம்.
.அரசமைப்பு சட்டத்தின் 208-வது பிரிவு 1-வது உட்பிரிவின்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள் இயற்றப்பட்டிருக்கின்றன. இதில் மொத்தம்23 அத்தியாயங்களும், 292 விதிகளும் உள்ளன. விதிகளில் உட்பிரிவுகளும் உண்டு.
இந்த விதிகள்படிதான் சட்டப்பேரவை நடத்தப்படவேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள்
நடந்துகொள்ள வேண்டும்.
இதில் ஒன்றுதான் விதி-110. இது என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
(1) பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப்பற்றி ஓர் அமைச்சர் பேரவைத் தலைவரின் அனுமதியுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம்.
(2) அவ்வறிக்கையின் மீது எவ்வித விவாதமும் இருத்தல் கூடாது.
(3) உள் விதி 1-இன் கீழ்அறிக்கையளிக்க விரும்பும் ஓர் அமைச்சர் எந்தநாளில் அந்த அறிக்கை அளிக்க விரும்புகிறார் என்பதையும் பேரவைத் தலைவரின் பார்வைக்கு வைக்க அதன் பிரதி ஒன்றையும் முன்கூட்டியே சட்ட பேரவை செயலாளருக்கு அனுப்ப
வேண்டும்.
இதான் 110! ஆச்சா?
இப்போது, . இந்த விதி எந்த காரணத்திற்காக கொண்டு வரப்பட்டது என்று பார்ப்போம்.
முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனைக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது அப்பொருளைப்பற்றி உறுப்பினர்கள் விவாதித்தால் காலவிரயம் கூடும் அல்லது அந்த குறிப்பிட்ட விசயம் மீது உரிய நடவடிக்கைஎடுக்க முடியாமல் போய்விடும் என்று, அரசு கருதும் போது இந்த 110 விதியின் கீழ் திட்டத்தை அறிவிக்கலாம்.
அதாவது மிக அவசியமான அவசரமான தேவைக்கு மட்டுமே இந்த 110 விதியை பயன்படுத்த வேண்டும் என்பது மரபு. ஆனால் நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் அறிவிப்பைக்கூட ஜெயலலிதா இந்த விதியின் கீழ் அறிவிக்கிறார்.
இதுதான் விமர்சனத்துக்குள்ளாகிறது.
அதாவது, “ விதி என்று ஒன்று இருந்தால் விதிவிலக்கும் இருக்கும். அப்படி விதிவிலக்காக பயன்படுத்த வேண்டிய 110ஐ, விதியாகவே மாற்றிவிட்டார் ஜெயலலிதா.
அதனால் எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவிக்க வாய்ப்பில்லாமல் போகிறது.
இந்திய ஜனநாயகம் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு மக்களுக்காக திட்டங்களை தீட்டும்போது மக்களுடன்
(மக்கள்பிரதிநிதியான சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிக்க
விரும்பாமல் தானே எல்லாம் என்று நடந்துகொள்வது ஜனநாயக விரோதம்.
“110 விதியின் கீழ்தான் தினமும் அனைத்துதிட்டங்களையும் அறிவிப்பேன்;
அத்திட்டங்களைப் பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்கமாட்டேன், அதுபற்றி யாரும் கேள்வி
கேட்க கூடாது, நான் பதிலும் சொல்ல மாட்டேன்” என விதிவிலக்கை விதியாக மாற்றிவிட்டார் ஜெயலலிதா” என்று விமர்சிக்கிறார்கள் அரசியல்நோக்கர்கள்.
சரி இதற்கு என்னதான் தீர்வு?
110ம் விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்கள் பற்றி பேரவை உறுப்பினர்கள் கேள்வி கேட்கவோ, விவாதிக்கவோ முடியாது என தற்போது விதி உள்ளது. இந்த விதியில் சில மாறுதல்களை கொண்டு வரவேண்டும்.
அதாவது விதி 110ன்கீழ் அறிவிப்பு-திட்டங்கள் அறிவித்தால் அன்றைய தினம் அதுபற்றி கேள்வி எழுப்பவோவிவாதிக்கவோ
முடியாது என்றாலும், மறுநாள் இதை முதலாவதாக பேரவை உறுப்பினர்களின் விவாதத்திற்கு வைக்க வேண்டும் என்று திருத்தம் செய்ய வேண்டும்.
அதுதான் ஜனநாயகத்தைக் காக்க வழி!