jeyalalitha
முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘’63 இந்திய மீனவர்கள் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வருவது தொடர்பாக உங்கள் கவனத்துக்கு கொண்டு வர நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
63 இந்திய மீனவர்களில் 2 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 5 பேர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 7 பேர் நாகை, 46 பேர் ராமநாதபுரம், 2 பேர் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ஒரு மீனவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்.
கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இந்த 63 மீனவர்களும் பல கட்டங்களாக சவுதி அரேபியாவில் உள்ள ஜூபைல் என்ற பகுதியில் தங்கி இருந்து மீன் பிடிப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனமான யூசுப் கலீல் அல் அமீரி அல் காலித் என்ற நிறுவனம் அந்த மீனவர்களை அழைத்து சென்றுள்ளது.
ஆனால் அந்த தனியார் நிறுவனம் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டப்படி 63 மீனவர்களுக்கும் மாதந்தோறும் உரிய சம்பள பணத்தை கொடுக்கவில்லை. இதன் காரணமாக பணமின்றி 63 மீனவர்களும் சவுதி அரேபியாவில் தவிக்க நேரிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கும் அவர்களால் மாதந்தோறும் பணம் அனுப்ப இயலவில்லை.
தனியார் நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதை உணர்ந்த 63 மீனவர்களுக்கும் தங்களுக்கு மாதந்தோறும் மீன் பிடிப்பதில் உரிய பங்கு பணம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை போய் விட்டது. இதையடுத்து பணம் தராவிட்டாலும் பரவாயில்லை தங்களை, தங்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பும்படி 63 மீனவர்களும் அந்த தனியார் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அதை ஏற்க தனியார் நிறுவனம் மறுத்து விட்டது. அந்த 63 மீனவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அந்த தனியார் நிறுவனத்திடம் உள்ளது.
63 மீனவர்களையும் தற்போது அந்த தனியார் நிறுவனம் பணி செய்யவும் அனுமதிக்க மறுக்கிறது. மேலும் அவர்களை இந்தியாவுக்கும் திருப்பி அனுப்ப மறுக்கிறது.
இதனால் 63 மீனவர்களும் சவுதி அரேபியாவில் தவித்தப்படி உள்ளனர். எனவே தாங்கள் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதருக்கு உத்தரவிட்டு, சவுதி அரேபியாவில் உள்ள உயர் அதிகாரிகள் கவனத்துக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும். இதன் மூலம் சவுதி அரேபியாவில் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி ஏழை மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த மீனவர்கள் அனைவருக்கும் அந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து உரிய சம்பளத்தை பெற்றுத் தரவும் தேவையான நடவடிக்கைகளை சவுதி அரேபியா அரசு மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
63 மீனவர்களின் ஏழை குடும்பத்தினர் தங்கள் உறவுகள் பாதுகாப்பாகவும், தங்கள் வாழ்வாதாரத்துக்கு எந்தவித சேதமின்றி திரும்பி வர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் தாங்கள் உடனே விரைந்து செயல்பட்டு தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’என்று கூறியுள்ளார்.