ம.ந.கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.
சமீபத்தில் கோவில்பட்டியில் பிரச்சார கூட்டத்தில் பேசிய, தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீஷ், தங்கள் கூட்டணி வென்றால் விஜயகாந்த் முதல்வர், வைகோ துணை முதல்வர் என்று பேசினார். .
இதற்கு மறுநாளே மறுப்பு தெரிவித்த வைகோ, தனக்கு எந்த பதவி மீதும் விருப்பம் இல்லை என்றார். இதனால் அவர், தேர்தலில் போட்டியிடுவாரா, இல்லையா என்ற குழப்பம் தொண்டர்கள் மத்தியில் நிலவியது. கட்சி முக்கியஸ்தர்களிடமும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கவில்லை என்றே இறுதிவரை அவர் சொல்லி வந்தார்.
ஆனாலும் அவரது செயல்பாடுகள், கோவில்பட்டி தொகுதியையே சுற்றியே இருந்ததால், இந்த தொகுதியில் அவர் போட்டியிடலாம் என யூகம் கிளம்பியது. அதை உண்மையாக்கும் வகையில் வகையில் கோவில்பட்டி தொகுதியில் தான் போட்டியிடுவதாக வைகோ அறிவித்துவிட்டார்.
பொதுவாக, வைகோ, சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட அதிக ஆர்வம் செலுத்துவதில்லை. மக்களவைத் தேர்தலில் தான் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். கடந்த 1994-ம் ஆண்டு மதிமுகவை தொடங்கிய பிறகு அக் கட்சி சந்தித்த முதல் சட்டபேரவை தேர்தலில் (1996) சட்டபேரவை தேர்தலில் போட்டியிட்டார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் அவரது ம.தி.மு.க. கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது.
அத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்ட வைகோ, திமுகவின் கே. ரவிசங்கரிடம் 634 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதன்பிறகு 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சட்டப்பேரவை தேர்தலில் வைகோ போட்டியிடுகிறார் அவர்.
கோவில்பட்டி ஏன்?
வைகோ கோவில்பட்டி தொகுதியை தேர்வு செய்ததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு அருகே இருப்பதால் கோவில்பட்டி பகுதி மக்களுக்கு வைகோ நன்கு பரிச்சயமானவர். கோவில்பட்டியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொள்பவர் வைகோ. மேலும் வைகோ சார்ந்த நாயக்கர் சமுதாய வாக்குகள் இத்தொகுதியில் கணிசமாக உண்டு. மதிமுகவுக்கு என்று கணிசமான வாக்கு வங்கியும் உண்டு. கடந்த 1996 சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ். ராதாகிருஷ்ணன் 31,828 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். தவிர ம.ந.கூவில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளுக்கும் இந்தத் தொகுதியில் கணிசமான வாக்கு வங்கி உண்டு.
வைகோ இந்தத் தொகுதியை தேர்ந்தெடுக்க இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். கோவில்பட்டி தொகுதி 2008-க்கு முன்பு வரை சிவகாசி மக்களவைத் தொகுதிக்குள் இருந்தது. சிவகாசி மக்களவைத் தொகுதி உறுப்பினராக வைகோ பதவி வகித்தபோது, கோவில்பட்டியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.
ஆகவேதான் வைகோ கோவில்பட்டியை தேர்ந்தெடுத்தார் என்று கூறுகிறார்கள்.
வெற்றி கிடைக்குமா?
இந்த முறை பலமுனை போட்டி நிலவுகிறது. இது வைகோ முன் இருக்கும் பெரிய சவால்.
தவிர, அதிமுக சார்பில் போட்டியிடும் ராமானுஜம் கணேஷூம், வைகோ சார்ந்த நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர் தான். அவரும் தொகுதியில் பரவலான செல்வாக்கு பெற்றவர். மேலும் ஆளுங்கட்சி என்கிற பலமும் அவருக்கு உண்டு. ஆகவே கணிசமாக உள்ள சாதி ஓட்டுக்கள் பிரியும்.
திமுக சார்பில் போட்டியிடும் சுப்பிரமணியன் இந்த தொகுதியின் இன்னொரு பெரும் சமுதாயமான தேவர் இனத்தை சேர்ந்தவர். இவருக்கும் தொகுதியில் செல்வாக்கு உள்ளவர்தான். “நாயக்கர் ஓட்டு இரண்டாக பிரியும். ஆகவே நமது வேட்பாளருக்கு தேவர் ஓட்டு அப்படியே கிடைக்கும். வென்றுவிடலாம்” என்பதுதான் தி.மு.கவின் கணக்கு.
ஆக.. மூன்று வேட்பாளர்களுக்குள்ளும் கடும் போட்டி நிலவும் என்பதே யதார்த்த நிலை.
தொகுதி மாறுகிறாரா வைகோ?
இதற்கிடையே வைகோவை தொகுதி மாறச் சொல்லி அவரது நலம் விரும்பிகள் சிலர் கூறிவருகிறார்கள்.
அவர்கள், “கோவில்பட்டியைவிட சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதே வைகோவுக்கு பாதுகாப்பானது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் மற்ற கட்சியை விட ம.தி.மு.க. அதிக ஒட்டுக்கள் பெற்றிருக்கிறது. அப்போது ம.தி.மு.க.வுடன் பா.ஜ.க. இருந்தது. அந்த ஓட்டுக்களை தற்போது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஈடுகட்டும். பாஜகவைவிட இங்கு கம்யூனிஸ்டுகளுக்கு அதிக செல்வாக்கு உண்டு. கோவில்பட்டியைவிட சாதிப்பிடிமானம் அதிகம் இல்லாத தொகுதி இது” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
வைகோ என்ன செய்யப்போகிறார்?