தலைப்பைப் படித்தவுடன் அதிர்ச்சி. நம்ம ஊர் ஆசாமிங்களை ஏப்பம் விடுகிறார்களோ இவர்கள் என. அப்புறம் உள்ளே சென்று படித்தால் விவகாரம் வேறு.
அங்கு ஒருவர் குற்றம் ஏதேனும் புரிந்திருப்பதாக போலீசார் சந்தேகப்பட்டால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் – முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யாமலேயே.
இது தவறு என்று பலர் வாதாடியும் அப்படி ஒரு நடைமுறை அங்கிருக்கிறது. பறிமுதல் அதிகாரபூர்வமாகவே செய்யப்படுவதால் நம் சின்ன தம்பி-பெரிய தம்பி பாணியில் வீட்டுக்குக் கொண்டுபோய்விடமுடியாது. அரசாங்க கஜானாவில் செலுத்தியாகவேண்டும். அவ்வாறு 2014 ஆம் ஆண்டில் ஐந்து பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை போலீசார் பறிமுதல் செய்து ரொக்கமாக்கி செலுத்தியிருக்கின்றனர்.
கொள்ளையர்கள் கைவரிசையில் இழக்கப்பட்டதோ 3.5 பில்லியன் டாலர்தான். எனவே போலீஸ் ரொம்ப ஓவராக செயல்படுகிறது என குற்றச்சாட்டுக்கள்.
இல்லை இல்லை இதெல்லாம் பொதுமக்கள் நலனுக்காகவே, எடுத்துக்காட்டாக, நிதிநிறுவன மோசடி வழக்கில் குற்றம் புரிந்தவர்களின் சொத்துக்களும் இவ்வகையில் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட தொகை ஏமாந்தவர்களுக்கு திருப்பித் தரப்படுகிறது எனவும் வாதிடப்படுகிறது.
அது சரிதான், நம்ம சின்ன தம்பி-பெரிய தம்பி பாணியில் எத்தனை கைப்பற்றப்பட்டவை அரசுக்கு முறையாக செலுத்தப்பட்டது, இதெல்லாம் போலீசார் அத்துமீறலுக்கு ஊழலுக்கு வழிவகுக்காதா என்றெல்லாம் கேள்விகள் இப்போது எழுப்பப்படுகின்றன.
- டி.என். கோபாலன்