பீஜிங்
கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்தியாவுக்கு மருந்து அளிக்கும் சீனாவின் சிச்சுவான் ஏர்லைன்ஸ் தனது சேவையை ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்கு பல நாடுகளில் இருந்து ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து மற்றும் அமெரிக்காவில் இருந்து கொரோனா தடுப்பூசிக்கான மூலப் பொருட்கள் எனச் சரக்கு விமானங்கள் மூலம் எடுத்து வரப்படுகிறது.
இவற்றில் முக்கியமானது சீனாவின் சரக்கு விமானச் சேவை நிறுவனமான சிச்சுவா சுவான்ஹாங் லாஜிஸ்டிக்ஸ் என்னும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திடீர் என உள்ளிட்ட ஆறு தடங்களில் தனது சேவையை 15 நாட்களுக்கு நிறுத்தி உள்ளது. இந்த ஆறு தடங்களில் இந்தியாவுக்கு வரும் விமான சேவையும் ஒன்றாகும்.
இது குறித்து நிறுவனம் “தற்போது ஒரு சில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அவற்றில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் இருந்து எங்கள் நாடுகளுக்கு கொரோனா பரவுவதைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 15 நாட்களுக்கு விமானச் சேவையை நிறுத்தி உள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளது.
சரக்கு விமானச் சேவை ரத்து காரணமாக இந்தியாவுக்கு ஆக்சிஜன், மருந்துகள், மருந்துகளின் மூலப்பொருட்கள் அனுப்புவோர் மிகவும் துயரடைந்துள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாகச் சீன விமானச் சேவை நிறுவனங்கள் சரக்கு கட்டணத்தை 35% முதல் 40% வரை உயர்த்தி உள்ளன. இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பலர் தெரிவிக்கின்றனர்.