பாரிஸ்:
கடலில் மூழ்கி உயிரிழந்த சிரிய சிறுவனின் புகைப்படம் குறித்து கேலி சித்திரம் வெளியிட்டு பிரான்ஸ் நாளிதழான சார்லி ஹெப்டோ மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சிரியாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக அந்நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கானோர் , கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புக வருகிறார்கள். பாதுகாப்பற்ற அந்த கடல் பயணத்தில் விபத்து ஏற்பட்டு பலர் மடிகிறார்கள்.
அப்படிய ஒரு விபத்தில் படகு கவிழ்ந்து உயிரிழந்த ஐலான் என்ற சிறுவனின் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆனால் பிரான்ஸில் இருந்து வெளியாகும் சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகை, அந்த சிறுவனனின் புகைப்படம் குறித்து கேலி சித்திரம் வரைந்துள்ளது.
அதில், ஏசு கிறிஸ்து போன்ற தோற்றத்தில் ஒருவர் கடல் நீரின் மீது நடந்து வருவதைபோலவும், அருகே, சிரியா நாட்டு குழந்தை கடலில் மூழ்கிய போட்டோவும் இருக்கிறது.
அதோடு, கிறித்தவர்கள் நீரில் மேல் நடக்கும் வல்லமை கொண்டவர்கள் என்றும், இஸ்லாமிய குழந்தை நீரில் மூழ்கத்தான் முடியும் என்றும் விளக்க குறிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த இதழ், நபிகள் நாயகத்தை பற்றி கேலி சித்திரத்தை வெளியிட்டு இஸ்லாமியர்களின் கண்டனங்களுக்கு ஆளானது. மேலும் பயங்கரவாதிகள் சிலர் சார்லி ஹெப்டோ அலுவலகம் புகுந்து 12 ஊழியர்களை சுட்டு கொலை செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது