புதுடெல்லி: கொச்சி என்று சொல்வதற்கு பதிலாக, கராச்சி என்று வாய்தவறி கூறிய பிரதமர் மோடி, தன் எண்ணம் முழுவதும் பாகிஸ்தான் பற்றியே இருப்பதால், இந்த தவறு நிகழ்ந்தது என்றுகூறி சமாளித்தார்.
‘ஆயூஷ்மான் பாரத் ஸ்கீம்’ என்ற மருத்துவம்சார் திட்டம் குறித்து பேசிய மோடி, “இந்த திட்டத்தின்மூலம், ஒருவர் தனது அடையாள அட்டையைக் காட்டி, நாட்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம்.
உதாரணமாக, குஜராத்தின் ஜாம்நகரைச் சேர்ந்த ஒருவர், மத்தியப்பிரதேச மாநிலத்தின் போபாலுக்கு செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அங்கே, அவர் நோய்வாய்ப்பட்டுவிட்டால், சிகிச்சைக்காக அவர் ஜாம்நகர் திரும்ப வேண்டியதில்லை.
போபால் நகரிலேயே, இத்திட்டம் தொடர்பான தனது பயனாளர் அடையாள அட்டையைக் காட்டி இலவச சிகிச்சைப் பெறலாம். அங்கு மட்டுமல்ல, கொல்கத்தா சென்றாலும் சரி, கராச்சி சென்றாலும் சரி, சிகிச்சைப் பெறலாம்” என்று பேசிய அவர், உடனடியாக சுதாரித்துக்கொண்டு, “கொச்சி என்று சொல்வதற்கு பதில், கராச்சி என்று சொல்லிவிட்டேன். ஏனெனில், தற்போது என் நினைவு முழுமையும் நமது அண்டை நாடு பற்றியே இருப்பதால் இப்படி ஆகிறது” என்று கூறி சமாளித்தார்.
– மதுரை மாயாண்டி