சென்னை: சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையை புறநகர் பேருந்து நிலையமான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீட்டிப்பு செய்வதற்காக தமிழ்நாடு அரசு ரூ.1964 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற மெட்ரோ ரயில் சேவை, சென்னையில் இருந்து பூந்தமல்லி மற்றும் கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  ஏற்கனவே சென்னை சென்ட்ரலில் இருந்து மீனபாக்கம் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வரும் நிலையில், அதை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை நீட்டிப்பு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்து,  அதற்கான திட்ட ஒப்புதலும் பெறப்பட்டது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் இடையே மெட்ரோ ரயில் திட்ட நீட்டிப்புக்கு 1,964 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான தூரம், 15.46 கிலோ மீட்டர் தூர மெட்ரோ ரயில் வழித்தட பணிகளின் முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தல் பணிகளுக்கும் மற்றும் பிற பணிகளுக்கும் 1,964 கோடி ரூபாய் ஒதுக்கி நிர்வாக ரீதியாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.