கிராமப்புற ஏழைகளின் கூலிக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் விளாசல்.
கிராமப்புற வேலையளிப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த ஏழை எளிய மக்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதியை வழங்காத மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக விளாசி உள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களில் கிராமப்புற வேலையளிப்பு உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி அங்குள்ள கிராம மக்கள் வேலை செய்வதற்காக ஊதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந் நிலையில் 2015 -2016 ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய ஊதியத் தொகை ரூ.8 ஆயிரம் கோடி இன்னும் வழங்கப்படாதது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று ( ஏப்ரல் 7) உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி.லோகூர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.அப்போது அவர்கள் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட மகக்ளுக்கு உரிய நேரத்தில் அவர்களுக்கான நிவாரணம் கிடைக்கவில்லை எனில் அந்த திட்டமே அர்த்தமற்றதாகும். பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தொகை கிடடைப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு பின்னரே கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்தவர்கள் ஊதியம் பெறுவதற்காக இன்னும் காத்திருக்கிறார்கள்.

ஊதியம் இல்லாமல் மக்கள் ஏன் வேலை செய்ய வேண்டும்? இன்று செய்யும் வேலைக்கு மூன்று மாதங்கள் கழித்துதான் ஊதியம் வழங்கமுடியும் என்று யாரும் சொல்ல முடியாது. என்று நீதிபதிகள் கடுமையாகச் சாடினர்.
இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் மத்திய அரசு ஒரு வாரத்தில் பணத்தை வழங்கி விடும் என்று நீதிபதிகளிடம் கூறினார். ஆனால் இதில் திருப்தியடையாத நீதிபதிகள், மத்திய அரசு கிராமப்புற வேலையளிப்பு உறுதி திட்டத்தை சட்டப்படி எப்படி செயல்படுத்துகிறது என்பதை வரும் வியாழக்கிழமையன்று விளக்க வேண்டும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்தை வலியுறுத்தினர்.
கிராமப்புற மக்களுக்கான ஊதியம் வழங்கப்படாததால் வறட்சியின் பிடியில் தவிக்கும் அந்த மாநிலங்கள் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கும். இந்த ஊதியத் தொகை ரூ. 8.261 கோடி தவிர, 2015 -2016க்கான தளவாடப்பொருள்கள் வாங்குவதற்கான தொகை ரூ 3.686 கோடி வழங்கப்படாததையும் அரசு அரசு ஆவணங்கள் காட்டுகின்றன.
நடப்பு நிதியாண்டிற்கான் ரூ 38.500 கோடி பட்ஜெட்டில் இதற்கான தொகை ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2015- 2016 ஆம் நிதியாண்டிற்கான கிராம மக்கள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய ஊதியத் தொகை ரூ 8 ஆயிரம் கோடி வழங்கப்படாததால் அடுத்த நிதியாண்டில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வேலையில்லா காரணத்தால் கிராமப்புற மக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு இடம்பெயரக்கூடாது என்பதற்காக 100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வறட்சியால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு 150 நாட்களுக்கு வாழ்வதற்கான நிதி வழங்கப்பட வேண்டும் என்பதை தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் வழி செய்கிறது.இதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கி மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிறது.
” 45 நாட்களாக கிராமப்புற மக்களுக்காக ஊதியம் வழங்கப்படாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அங்குள்ள மக்கள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். அப்பகுதியில் எல்லாம் வெப்ப நிலை 46 டிகிரியை தாண்டிச் சென்றுவிட்டது. ஒரு குடம் குடி தண்ணீருக்கு கூட அவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.இந்த நிலையில் தவிக்கும் மக்களுக்கு ஆறு மாதம் முதல் எட்டு மாதம் கழித்து ஊதியம் வழங்கப்படுவது என்பது அர்த்தமில்லாத ஒன்று. அரசிடம் திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அது செயல்படுத்தப்படுகிறதா என்பதுதான் கேள்வி.மரத்வாடா மற்றும் பண்டல்காண்ட் பகுதிகளில் இன்னும் வறட்சி தொடர்வதை மத்திய அரசு அனுமதிக்க கூடாது. இந்த நிலைமைகளை சமாளிக்க மத்திய அரசு ஆக்கப்பூர்வ பணிகளை தொடங்கவேண்டிய நேரம் இது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Patrikai.com official YouTube Channel