ராமண்ணா வியூவ்ஸ்
நாளைக்கு காதலர் தினமாச்சே, “நல்ல லவ் கொட்டேசனா தேடிப்பிடிச்சு கொடுப்பா.. என் லவ்வருக்கு ஸ்பெஷல் லெட்டர் கொடுக்கணும்” என்ற நண்பனுக்காக, நெட்டை துழாவ ஆரம்பித்தேன்.
காதல் குறித்து, தந்தை பெரியார் சொன்னது கண்ணில்பட்டது. 18.01.1931 அன்றைய “குடிஅரசு’ இதழில்அவர் ர் எழுதிய தலையங்கம். ஆர்வத்துடன் படித்தேன். ஆகா.. என்ன ஒரு தீர்க்கமான சிந்தனை!
படித்த முடித்து வெகுநேரம் வரை, இந்தகட்டுரையும், பெரியாரும்தான் என் சிந்தனையில் இருந்தார்கள்.
(நண்பனுக்கு லவ் கொட்டேஷன் எடுத்தாச்சா என்கிறீர்களா.. அது கெடுக்குது விடுங்க… பெரியாரோட கட்டுரைய படிங்க..!)
அன்பு,ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத் தவிர வேறு ஒரு பொருளைக் கொண்டதென்ற சொல்லும் படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசகம் எழுதப்படுவதாகும். ஏனெனில் உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி, அனாவசியமாய் ஆண் – பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல் திருப்தியில்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவேயாகும்.
ஆனால் காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எது வரையில் இருக்கின்றது? அது எந்த எந்த சமயதில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது? அப்படி மறைந்து போய் விடுவதற்குக் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும் பொருளற்ற தன்மையும் உண்மையற்ற தன்மையும் நித்தியமற்ற தன்மையும் அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.
ஆனால் அந்தப்படி யோசிப்பதற்கு முன்னே இந்தக் காதல் என்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழுக்கில் அது எப்படிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இன்றைய தினம் காதலைப் பற்றிப் பேசுகிறவர்கள் “காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல, அன்பு -நேசம் -ஆசை -காமம் என்பவை வேறு, காதல் வேறு, நட்பு வேறு என்றும் அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுத்துவதாகும். அக் காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமே இல்லை என்றும்,
அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும். அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும் பிறகு வேறு ஒருவரிடமும் அந்தக் காதல் ஏற்படாது அந்தப்படி மீறி அந்தப் பெண்ணுக்கோ ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விபச்சாரம் என்று தான் சொல்ல வேண்டுமேயொழிய அது ஒருக்காலும் காதலாகாது என்றும், ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ என்றெல்லாம் ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது.
மேலும் இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும் ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது.
ஆனால் இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனுபோகமும் மக்களின் அனுபவ ஞானமும் இல்லாதவர்கள் என்றோ அல்லது இயற்கையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றே தான் கருத வேண்டி இருக்கின்றது.
அன்றியும் இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாவதர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்கின்றோம்.
இன்னும் திறந்து வெளிப்படையாய்த் தைரியமாய் மனித இயற்கையையும் சுதந்திரத்தையும் சுபாவத்தையும் அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால் இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும் தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்வது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித் தனமும் அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் தான் சொல்ல வேண்டும்.
இவ்வளவு பெருமையையும் அணியையும் அலங்காரத்தையும் கொடுத்துப் பேசப்பட்ட காதல் என்பதை முன் குறிப்பிட்டபடி அது என்ன? அது எப்படி உண்டாகிறது? என்பதை யோசித்துப் பார்த்தால் யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும். காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா? என்பது ஒரு புறமிருந்தாலும் தமிழ் மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆண் பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறு பொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. அதன் வேறுவிதமான பிரயோகமும் நமக்குத் தென்படவில்லை.
அன்றியும் அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருளைத் தவிர வடமொழி மூலத்தை அனுசரித்துக் காதல் என்பதற்கு கொலை, கொல்லல், வெட்டுதல், முறித்தல் என்கின்ற பொருள்கள் தான் கூறப்பட்டிருக்கின்றன. மற்றப்படித் தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண்பெண் சேர்க்கைக்கூட்டு முதலியவை சம்மந்தமான விஷயங்களும் அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும் இக்கருத்துக்களையே தான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகிறதே தவிர காதலுக்கென்று வேறு பொருளில்லை.
ஆதலால் இவைகளன்றி காதல் என்பதற்கு வேறு தனி அர்த்தம் சொல்லுகின்றவர்கள் அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டு பிடித்தார்களென்பதும் நமக்கு விளங்கவில்லை.
நிற்க, இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு சமயம் தானாகவே உண்டாவதாயிருந்தால் எந்த சந்தர்ப்பத்தில் எந்த ஆதாரத்தின் மீது என்பவைகளைக் கவனித்தால், பெண் ஆணையோ ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்ப்பதாலும் அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும் உருவத்தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்க கேட்க நேரிடுவதாலுமே தான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.
இந்தப் படியும் கூட ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில் கேட்ட மாத்திரத்தில் தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு வேண்டும் என்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கிறானோ அதுபோல் தான் இந்தக் காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர வேற எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது நமக்குப் புலப்படவில்லை.
எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தைத் திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும், காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது.
அதாவது அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போக போக்கியத்திற்குப் பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோதான் யாரும் எந்தப் பெண்ணிடமும் ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும் போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம். அல்லது வேஷ மாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம்.
உதாரணமாக ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்துவதை ஒரு ஆண் பார்க்கின்றான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கின்றாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு யார் என்று இவர்களில் ஒருவர் கேட்கிறார்கள். பெண் தன்னை ஒரு அரசன் குமாரத்தி என்று சொல்லுகின்றாள். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு வெறுப்பேற்பட்டுப் போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி. இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?
நிற்க, அவன் தன்னைச் சேவகன் மகன் என்று சொல்லாமல் தானும் ஒரு பக்கத்துத் தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லிவிட்டால் அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு “மறுஜென்மத்தாலும்” இவனை விட்டுப் பிரியக்கூடாது என்று கருதி விடுகிறாள். நான்கு நாள் பொறுத்த பின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும் சேவகன் மகன் என்றும் அறிந்தாள் என்று வைத்துக்கொள்வோம்.இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா?அல்லது இருந்தாக வேண்டுமா? என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும் மறுக்கும் தன்மையும் விளங்கும்.
இந்தப்படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது. இது போலவே இன்னமும் தான் முதலில் நினைத்ததற்கு அல்லது தனது நன்மைக்கும் திருப்திக்கும் இஷ்டத்திற்கும் விரோதமாயோ தான் எதிர்பார்க்காத கெட்ட காரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக் காதல் பயன்படுமா? அதை எவ்வளவு தான் கட்டிப்போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால் உண்மைக்காதலின் நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது.
நிற்க, உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகிய பின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக் கூடச் சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரீரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா? என்பவைகளைக் கவனிக்கும் போது சரீர மாறுபாடாலும் பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாற முடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய்க் கருத நேர்ந்தால் அது பொய்யாகவோ மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்குச் சந்தேகப்படும்படி விட்டால் அப்போது கூடக் காதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக் காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கி விடக்கூடிய காதல் குற்றமான காதலா?என்பதற்கு என்ன மறுமொழி பகர முடியும்?
காதல் கொள்ளும் போது காதலர்கள் நிலமை, மனப்பான்மை, பக்குவம், லஷியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சக் காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, லஷியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியிலும் துன்பத்திலும் அழுந்த வேண்டியதுதானா? என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாததையும் அது பயன்படாததையும் காணலாம்.
ஒரு ஜதைக் காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துறவிகளாய் விட்டார்களானால் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும் வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்னடுமா? விரோதமில்லையானால் ஓருவர் ஞானியாகி துறவியாகிவிட்டால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக் விரோதமாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்காமல் போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும், ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.
அது போலவே மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும் வெறுப்புக் கொள்வதும் பிரிவதும் இயற்கையேயாகும். பலவீனமாய் இருக்கும் போது ஏமாந்து விடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாத போது கட்டுப்பட்டு விடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையேயல்லவா?
உதாரணமாக ஒரு வாலிபன் ஏமாந்து ஓரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துக்களையெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கின்றோம். அந்த வாலிபனுக்கு அந்தத் தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி சில சமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனிடமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கின்றோம். ஆகவே இந்தத் தாசி கொண்டது காதலா? அல்லது வாழ்க்கைக்கு ஒரு செளகரியமான வழியா? இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக் கொண்டே வந்தால் இது ஒத்த காதல் ஆகிவிடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளை விடச் சிறிது கூடச் சிறந்தது அல்லவென்பது விளங்கிவிடும்.
அதற்கு ஏதேதோ கற்பனைகளைக் கற்பித்து ஆண் பெண்களுக்குள் புகுத்திவிட்டதால் ஆண் பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்மென்று கருதி எப்படிப் பக்திவான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால் அநேகர் தங்களைப் பக்திவான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதிப் பூச்சுப் போடுவதும் பட்டை நாமம் போடுவதும் சதா கோவிலுக்குப் போவதும் பாட்டுக்கள் பாடி அழுவதும் வாயில் சிவ சிவ என்று சொல்லிக்கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து பக்திமான்களாகக் காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், எப்படிக் குழந்தைகள் துங்குவது போல் வேஷம் போட்டுக் கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக ‘தூங்கினால் கால் ஆடுமே’ என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்க வேண்டுமென்று கருதிக் காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும், எப்படிப் பெண்கள் இப்படி இப்படி இருப்பது தான் கற்பு என்றால் பெண்கள் அது போலவெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், உண்மையான காதலர்களானால் இப்படியல்லவா இருப்பார்கள் என்று சொல்லி விட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்துவிட்டால் அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்….
ஆகவே ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும் அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அ.றிணைப் பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவதுபோல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையிலிருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும் நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக் கூடியதென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாற வேண்டியது தான் என்றும், மாறக் கூடியது தான் என்றும் நாம் கருதுகின்றோம்.
ஆகவே, இதிலிருந்து நாம் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ அப்படிப்பட்டதில்லைஎன்றோ சொல்ல வரவில்லை. ஆனால் அன்பும் ஆசையும் நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும் திருப்திக்குமேயொழிய மனதிற்குத் திருப்தியும் இன்பமும் இல்லாமல் அன்பும் ஆசையும் நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இதை எழுதுகின்றோம். இதுவும் ஏன் எழுதவேண்டியதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதிற்கெல்லாம் ‘இது காதலல்ல’, ‘அது காதலுக்கு விரோதம்’, ‘அது காம இச்சை’, ‘இது மிருக இச்சை’, ‘இது விபச்சாரம்’ என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒரு விதப் பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப் பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்றுப் பார்த்துவிடலாம் என்றே இதைப் பற்றி எழுதலானோம்.
– தந்தை பெரியார்.”