நிமிர் பெரு விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும்
அகப்பட கை அகட்டி என் கைபிடித்து
விரிந்த நெஞ்சிலனைத்து உச்சி முகர்ந்து
பரந்த தோள் வளைத்து அன்பு முகம்
என் முன் குனிந்து அன்னம் தொட்டு
சிரிக்கும் விழிகள் சீரிய அமைவோடு
கருத்தடர்ந்த இமைக்குள்ளிருந்து
கருவிழி நட்போடு அருகி வரவரக் குவிந்து
அடர்மீசைக்கடியில் மறையிதழ் விரிந்து
அன்பை அள்ளி வரும் காதல்கவி கூற்று
என நான் கனவு கண்டு கற்பனை சுமந்து
எழுதி என் உள்ளத்தில் எழுதிட்ட இக்கவி
மெலிந்த உடலும் முணுமுணுக்கும் மொழியும்
சிடுசிடுக்கும் முகமும் சந்தேகக் குணமும்
செயலேதும் செய்ய விரும்பாது எக்கணமும்
சோம்பி சுருண்டிருக்கும் மெய்யும்
எவரையும் குற்றம் கூறி எடுத்தெரிந்துப் பேசும்
என்னவர்க்கு எனைச் சேர்த்த மணநாலெனும் தருணம்
என்றும் சேராது கைவிட்டு காணாமல் போனது இன்கவி
…
அந்த அரைமணி நேரம்
அத்தனை ஆலம்பனம்
அவருக்குப் பிடிக்க வேண்டுமே…
அளவறியாது கொள்ளத் தோன்றுமா?
அந்நியமாய் தூரத்தள்ளல் நேருமா…
அழகு நிறம் கூட்ட வேண்டுமா?
அதை அவர் கண்கள் நோக்குமா…
அருமை உடல் கூட்டக் கூடுமோ?
அத்தனை நயம் இவ்வமுதம் அடையுமா?
அணிகலயத்தில் அப்படியே நிற்குமா …
அடுக்கடுக்காய் தயக்கங்களுடன்
அல்லல்பட்டுக் கொண்டிருந்தது
அவருக்காய் அம்முதல் நாள்
என் மனம்
முன்பின் முகமறியா
அவர் வீட்டு சமையலறையில்
- – கவிதாயினி எழில்