‘தனக்கு இரு கண்கள் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும்’’என்ற பார்முலாவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் தீர்க்கமாக எடுத்து விட்டதாகவே தெரிகிறது.

அவர்களின் எதிரி பா.ஜ.க.அல்ல. காங்கிரஸ் தான் என்பது நடக்கும் சம்பவங்களை பார்த்தா லேயே தெரிகிறது.

உ.பி. மாநிலத்தில் காங்கிரசை கழற்றி விட்டு விட்டு இருவரும் தனியாக உடன்பாடு எற்படுத்தி யுள்ளார்கள்.அங்கு காங்கிரஸ் வலிமையாக இல்லை. அவர்களால் பா.ஜ.க.வை தோற்கடிக்க முடியும்.

ஆனால் பக்கத்தில் உள்ள மேலும் 2 மாநிலங்களிலும் அந்த இரண்டு பேர் உடன்பாடு கண்டிருப்பது -காங்கிரசை வீழ்த்துவதையே அவர்கள் இந்த தேர்தலில் ,தங்கள் ‘செயல்திட்டமாக’வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

உ.பி.யை தொடர்ந்து மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்டிலும் இவர்கள் இணைந்துள்ளனர். ம.பி.யில் மாயாவதி கட்சி 26 இடங்களிலும்,அகிலேஷ் கட்சி 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

அந்த மாநிலத்தில் இரண்டு கட்சிகளுக்கும் 6 சதவீத வாக்குகள் உள்ளன. ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை. ஆனால் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை பிரிக்க முடியும்.

உத்தரகாண்டிலும் இதே கூத்துதான். அங்கு மொத்தமுள்ள 5 இடங்களில் மாயாவதி கட்சி 4-ல் போட்டியிடுகிறது .அகிலேஷ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் இரு கட்சிகளுக்கும் ஒரு எம்.எல்.ஏ.கூட கிடையாது.ஆனாலும் இருவருக்கும் சேர்த்து 7 சதவீத ஓட்டுகள் உள்ளது.

அங்கும் காங்கிரசை பலவீனப்படுத்தி- பா.ஜ.க.வெற்றி பெற – இந்த உ.பி. ஜாம்பவான்கள்   உதவுவார்கள்.

பீஹாரில் இதே நிலைதான். லக்னோவுக்கு  நேரில் சென்ற ஆர்.ஜே.டி.தலைவர் தேஜஸ்வி யாதவ்,மாயாவதிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். பீகாரில் அவரது கட்சிக்கு 2 லோக்சபா தொகுதிகளை பிறந்தநாள் பரிசாக கொடுத்தார்.

அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார் – மாயாவதி. 40 தொகுதிகளிலும் தனித்து நிற்பார் என்று தெரிகிறது. ஆனாலும் அங்கு அவரது ‘செயல் திட்டம்’ செயல்பட வாய்ப்பில்லை.

பீகாரில் தேஜஸ்வி யாதவ் ‘பிரமாண்ட’ கூட்டணியை உருவாக்கி விட்டார். அவரது ஆர்.ஜே.டி ,காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம். சி.பி.எம்.( எம்.எல்) உள்ளிட்ட எட்டு கட்சிகள் இந்த கூட்டணியில்  இணைந்துள்ளன.

–பாப்பாங்குளம் பாரதி