கூடங்குளம் அணுவுலை பற்றி, ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் கெஜ்ரிவாலின் கருத்து. ஈழத்தையும் அவர் ஆதரிக்கவில்லை.
இது எல்லாமே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் கருத்துக்களுக்கு எதிரானதுதான். அதுவும் ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்களை தூக்கிலிட வேண்டும் என்றவர் கெஜ்ரி. ஆனால அவர்களை தூக்கிலிருந்து மீட்டவர் வைகோ. அதோடு, அவர்களின் விடுதலைக்கு உழைப்பவர்களில் வைகோவும் ஒருவர்.
இப்படி இத்தனை கருத்து பேதம் இருந்தும், டில்லி சென்று கெஜ்ரிவாலை சந்தித்தார் வைகோ. அவரோடு போராட்டத்தில் உட்கார்ந்து கம்பீரமாக போஸ் கொடுத்தார். வழக்கம்போல ஆரத்தழுவி உச்சி முகர்ந்தார்.
இதெல்லாம்கூட பரவாயில்லை… வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆம்ஆத்மி தங்களுக்கு ஆதரவு தரும் என்றார். ஆனால், ஆம்ஆத்மி அலுவலகம் சென்று ஆதரவு கேட்ட வைகோவை எதிர்த்து அக் கட்சியினர் முழக்கமிட்டு அவமானப்படுத்தினார்கள்.
அப்போதும் டென்சன் ஆகவில்லை வைகோ. ஆதரவுக்காக காத்திருந்தார்.
இப்போதோ, ம.தி.மு.க., மக்கள் நலக்கூட்டணி, கேப்டன் கூட்டணி, அல்லது வேறு கட்சி, கூட்டணி.. எதற்கும் தங்களது ஆதரவு இல்லை என்று வைகோவுக்கு கடிதம் எழுதிவிட்டார் கெஜ்ரி.
விஜயகாந்த் கொள்கை என்னவென்றோ தெரியாமல், அவரை வருந்தி வருந்தி அழைத்து ஏமாந்தார் கருணாநிதி. கெஜ்ரிவாலின் கொள்கைகள் தனக்கு எதிரானது என்று தெரிந்து வரவேற்று ஏமாந்தார் வைகோ.
மற்றபடி இருவரின் அழைப்புகளும் ஓட்டுகளுக்காகவே. ஆக, இந்த விசயத்தில் கருணாநிதிக்கும், வைகோவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை!