d
“மாண்புமிகு பிரதமர் சொல்லிக்கொண்டிருந்தார்… ஸ்டாலினையும் குருஸ்சேவையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அப்படியே டிவி பெட்டிக்குள் நுழைந்து விடலாம் என்று எனக்கு அப்போது ஓர் ஆவல் எழுந்தது. அவருடைய சூட்டைப் பிடித்துச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது… மோடி ஜி… ஹிட்லரைப் பற்றியும் கொஞ்சம் பேசுங்களேன். ஹிட்லரை விடுங்கள். முசோலினைப் பற்றிப் பேசுங்கள். கறுப்புத் தொப்பி அணிந்திருப்பாரே… உங்கள் குரு கோல்வால்கர் சந்திக்கப் போயிருந்தாரே… பாரதியம் என்பதற்கான வரையறையை ஜெர்மனியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னாரே… (அவரைப்பற்றிப் பேசுங்களேன்.) ஹிட்லர் பற்றி, முசோலினி பற்றி, பிரதமர் பற்றி எல்லாம் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. நமது பிரதமர் மன் கீ பாத் பேசுவார், ஆனால் மனதின் குரலைக் கேட்க மாட்டார்.
இப்போது எனது சொந்த விஷயம் ஒன்றைக் கூற வேண்டும். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு என் அம்மாவுடன் பேசினேன். நான் ஜேஎன்யுவில் இருக்கும்போது வீட்டாருடன் அதிகம் பேசுவதில்லை. ஜெயிலுக்குப் போனபிறகுதான், வீட்டாருடன் பேச வேண்டும் என்பது புரிந்து போனது. நீங்களும் உங்கள் வீட்டாருடன் அவ்வப்போது பேசிக்கொண்டிருங்கள். நான் அம்மாவிடம் சொன்னேன் – அம்மா, நீ மோடியை நன்றாகவே கேலி செய்தாய் இல்லையா…? அம்மா சொன்னார் – நான் கேலி செய்யவில்லை மகனே… கேலி செய்பவர்கள் அவர்கள்தான்…. சிரிப்பதும் சிரிப்பு மூட்டுவதும் அவர்களுடைய வேலை. நாம் நம்முடைய வேதனையைத்தான் சொல்ல முடியும். அந்த வேதனையைப் புரிந்து கொண்டவர்கள் உடன் சேர்ந்து அழுவார்கள், புரியாதவர்கள் சிரிப்பார்கள். என்னுடையது வேதனை, கேலி அல்ல. அதனால்தான் நான் சொன்னேன் – மோடியும் ஒரு தாயின் மகன்தானே… என் மகனை தேசத் துரோகக் குற்றத்தில் சிக்க வைத்து விட்டாரே… மனதின் குரலைப் பேசுகிறவர் எப்போதாவது தாய்மார்களின் குரலைப் பற்றியும் பேசட்டுமே என்றார்.
அம்மாவிடம் சொல்வதற்கு எனக்கு எந்தப் பதிலும் இருக்கவில்லை. ஏனென்றால், இந்த தேசத்தில் இப்போது நடந்து கொண்டிருப்பதன் பின்னால் மிகவும் ஆபத்தான ஒரு போக்கு இருக்கிறது. அதனால்தான் நான் எந்தவொரு தனிப்பட்ட கட்சியை மட்டும் நான் பேசவில்லை. எந்தவொரு மீடியாவையும் பேசவில்லை, எந்தவொரு துறையையும் பற்றிப் பேசவில்லை. ஒட்டுமொத்த நாட்டைப்பற்றிப் பேசுகிறேன். நாட்டில் வசிப்பதற்கு மக்களே இல்லை என்றால் அங்கே நாடு எப்படிப்பட்டதாக இருக்கும்? சிந்தியுங்கள் நண்பர்களே… ஜேஎன்யுவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த ஒவ்வொருவருக்கும் நாம் தலைதாழ்த்தி வணக்கம் தெரிவித்தாக வேண்டும். ஏனென்றால், அவர்கள் இந்த விஷயத்தைப் புரிந்து கொண்டவர்கள்.
ஜேஎன்யுவில் எப்படிப்பட்ட ஆட்கள் எல்லாம் வருகிறார்கள்…! இங்கே 60 விழுக்காட்டினர் பெண்கள். இது ஜேஎன்யூவில் மட்டுமே சாத்தியம். எத்தனை குறைகள் இருந்தாலும்சரி, நான் பெருமையுடன் சொல்வேன்,நாட்டில் வேறெங்கும் காண முடியாதபடி இட ஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்படுவது ஜேஎன்யுவில் மட்டும்தான். அப்படி செயல்படுத்தவில்லை என்றாலும், அதைச் செயல்படுத்த வேண்டும் என்று நாம் போராடுகிறோம், செயல்படுத்த வைக்கிறோம். இங்கே எப்படிப்பட்ட மாணவர்கள் எல்லாம் வருகிறார்கள்…!
உங்களுக்கு நான் இதுவரை சொல்லாத விஷயம் இது… உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்காது. என் குடும்பம் வெறும் 3000 ரூபாய் வருவாயில் ஓடுகிறது. இப்படிப்பட்ட நான் வேறு ஏதாவதொரு பெரிய பல்கலைக்கழகத்தில் பிஎச்டி செய்வது சாத்தியம் ஆகியிருக்குமா…? (ஜேஎன்யுவில்தான் இது சாத்தியம் ஆனது.) ஆனால்… ஜேஎன்யு மீது எப்படியெல்லாம் தாக்குதல் நடத்தப்படுகிறது? நான் எந்தவொரு கட்சியினரையும் குறிப்பாகச் சொல்லவில்லை. எனக்கும் ஒரு அரசியல் சார்பு உண்டு. அது வேறு விஷயம். ஆனால் ஜேஎன்யுவுக்கு ஆதரவாக நிற்கிற எல்லாரையும் தேசத் துரோகிகள் என்று குற்றம் சாட்டுகிறார்களே…! சீதாராம் யெச்சூரியையும் என்னுடன் சேர்த்து தேசத்துரோக வழக்கில் சேர்த்து விட்டார்கள். ராகுல் காந்தியை தேசத் துரோகியாக என்னுடன் சேர்த்து விட்டார்கள். டி. ராஜாவையும் தேசத் துரோகி என்று குற்றம் சாட்டுகிறார்கள். கேஜ்ரிவால் மீதும் தேசத்துரோகி வழக்கு… எந்த மீடியாக்காரர்கள் ஜேஎன்யுவின் சார்பாகப் பேசுகிறார்களோ… – உண்மையில் அவர்கள் ஜேஎன்யு சார்பாகப் பேசவில்லை, உண்மையை உண்மை என்றும் பொய்யை பொய் என்றும் சொல்கிறார்களோ – அவர்கள்மீது வசைமாரி பொழியப்படுகிறது. அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. இது என்ன வகையான தேசபக்தி ஐயா… சுயம்புவாக வந்த தேசபக்தியா?
ddஜெயிலில் சில காவலர்கள் என்னிடம் கேட்டார்கள் – நிஜமாகவே நீ கோஷம் போட்டாயா? ஆமாம் கோஷம் போட்டேன் என்றேன். திரும்பிப் போனபிறகு மறுபடி கோஷம் போடுவாயா என்று கேட்டார்கள். ஆமாம், இன்னும் உரக்க கோஷம் போடுவோம் என்றேன். அப்பனே… உன் தலையெழுத்து அப்படி இருக்கிறது. உன் எதிர்காலம் முடிந்து போய்விட்டது என்றார்கள். ஐயா… இந்த அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆயிற்று. இன்னும் மூன்று ஆண்டுகள் இழுத்தாக வேண்டும். இவ்வளவு சீக்கிரமாக உங்கள் நோக்கங்கள் நிறைவேறி விடாது. இந்த நாட்டில் 69 சதவிகிதத்தினர் உங்களுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெறும் 31 சதவிகிதம்தான் உங்களுக்கு ஆதரவு கிடைத்தது. அதிலும்கூட பலர் உங்கள் வாய்ச்சவடால்களில் ஏமாந்தவர்கள். சிலரை நீங்கள் ஹர் ஹர் என்று கோஷம்போட்டு ஏமாற்றினீர்கள். இப்போது ஹர்ஹரால் வேதனைப்படுகிறார்கள்.(ஹர்ஹர் என்பது துவரம்பருப்பைக் குறிக்கும். துவரம்பருப்பு விலை உயர்வைச் சொல்கிறார்.)
நூறு முறை பொய்யை பொய் என்று சொல்லிக்கொண்டிருந்தால் அது உண்மையாகி விடும் என்பது சரிதான். ஆனால் இது பொய்க்குத்தான் பொருந்தும், உண்மைக்கு அல்ல. சூரியனை நூறு முறை நிலா நிலா என்று சொன்னால் அது நிலா ஆகிவிடுமா? ஆயிரம் முறை சொன்னாலும் அது சூரியனாகவேதான் இருக்கும். பொய்யைத்தான் நீங்கள் பொய் என்று சொல்ல முடியும். சத்தியத்தை ஒருபோதும் பொய் என்றாக்கிவிட முடியாது. நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் இவர்களுடைய திட்டங்கள் எல்லாம் திசைதிருப்பும் முயற்சிகளாகவே இருக்கும். மக்களின் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவது. புதிய புதிய பிரச்சினைகளில், அஜென்டாக்களில் சிக்க வைப்பது.
இந்தப்பக்கம் ஆக்குபை யுஜிசி போராட்டம் நடந்துகொண்டிருந்தது. ரோகித் கொலை நடந்தது. ரோகித்துக்காக குரல் எழுந்தது. உடனே தேசவிரோதம் என்ற குரல் எழுந்தது. பாருங்கள்…. நாட்டிலேயே மிக மோசமான தேச துரோகிகளைப் பாருங்கள்… (ஜேஎன்யு) தேச துரோகிகளின் கூடாரம் என்றார்கள். ஆனால் இது அதிக காலம் நீடிக்காது. எனவே அடுத்த பிரச்சினைக்குத் தயார் செய்வார்கள். ராமர் கோயில் கட்டுவோம் என்பார்கள்.
இன்று நடந்த ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். சிறையிலிருந்து புறப்படுவதற்கு முன்பு ஒரு காவலருடன் பேசிக்கொண்டிருந்தேன்.
உனக்கு மதத்தில் நம்பிக்கை உண்டா என்று கேட்டார்.
மதத்தை அறிவேன் என்றேன். முதலில் அறிந்து கொள்ள வேண்டும், அதன் பிறகுதானே நம்ப முடியும்?
ஏதாவதொரு இனக் குடும்பத்தில்தானே பிறந்திருப்பாய் என்று கேட்டார்.
பிறப்பினால் நான் இந்துக் குடும்பத்தில் பிறந்தேன் என்றேன்.
அப்படியானால் இந்து மதம் பற்றி ஏதும் தெரியும்தானே என்று கேட்டார்.
ஐயா… எனக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ அந்த அளவில் பார்த்தால், கடவுள்தான் உலகைப் படைத்தார் என்றேன். அணு அணுவிலும் கடவுள் இருக்கிறார். சரிதானே?
மிகவும் சரி என்றார்.
சரி, ஆனால் இப்போது சில ஆட்கள் கடவுளையே படைக்க விரும்புகிறார்களே அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டேன். (பீகாரின் சொலவடை புரியவில்லை)
பைத்தியக்காரத்தனத்தின் உச்சம் என்றார்.
ஆம் நண்பர்களே… ராமர் கோவிலை வைத்து எத்தனை காலம்தான் நடத்துவீர்கள் நாடகத்தை? உங்கள் ஏமாற்றுத் தந்திரத்தால் 80 இடங்களை 180 இடங்கள் ஆக்கினீர்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. ஆனால் இவர்கள் தமது முயற்சியைக் கைவிடவில்லை. பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புகிறார்கள். அப்போதுதான் இந்த நாட்டின் முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி விமர்சனம் எழுந்து விடாதிருக்கும் என்று நினைக்கிறார்கள். இன்று இங்கே நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் இருக்கிற உங்களுக்கு,உங்கள்மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று உணர்கிறீர்கள். உண்மையிலேயே இது பெரிய தாக்குதல்தான். ஆனால் இந்தத் தாக்குதல் இன்று நடந்தது அல்ல நண்பர்களே…. உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்….
ஆர்எஸ்எஸ்இன் முக்கியப் பத்திரிகையான ஆர்கனைசரில் ஜேஎன்யு குறித்து ஒரு கவர் ஸ்டோரி தயாரிக்கப்பட்டது. ஜேஎன்யு குறித்து ஸ்வாமிஜியின் அறிக்கை வெளிவந்தது. (சுப்பிரமணியம் ஸ்வாமியைக் குறிப்பிடுகிறார் என்று நின.) இதைக் கேட்டுக்கொண்டிருக்கிற ஏபிவிபி நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். ஒருமுறை உங்கள் ஸ்வாமிஜியை இங்கு அழைத்து வாருங்கள். நேருக்கு நேர் விவாதம் செய்வோம். தர்க்க ரீதியாக – குதர்க்கமாக இல்லாமல் – ஜேஎன்யுவை நான்கு மாதங்களுக்கு மூடிவிட வேண்டும் என்று அவர் தர்க்கரீதியாக நிரூபித்தால் அவர் சொல்வதை நான் கேட்டுக் கொள்கிறேன். இல்லை என்றால், அவரிடம் வேண்டிக் கொள்வேன் – ஐயா, முன்னால் இந்தியாவுக்கு வெளியே இருந்தது  போலவே இப்போதும் வெளியேறி விடுங்கள் என்று.
எப்படியெல்லாம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது….?
இன்னொரு சுவாரசியமான விஷயத்தை சொல்கிறேன். நீங்கள் கேம்பசுக்குள் இருந்தீர்கள் என்பதால் உங்களுக்குத் தெரிந்திருக்காது. எவ்வளவு அழகாகத் திட்டமிட்டிருந்தார்கள்…. துல்லியான பிளான்…. ! போஸ்டர்கூட மாற்றப்படுவதில்லை. எந்தப் போஸ்டருடன் அல்லது எந்த நோட்டீசுடன் இந்து கிராந்தி சேனா எதிர்ப்புக் காட்டுகிறதோ அதே போஸ்டர், அதே நோட்டீசுடன் ஏபிவிபி போராட்டம் நடத்துகிறது. அதே வாசகங்களை, அதே போஸ்டருடன் எழுத்துக்கு எழுத்து அப்படியே பிரதியெடுத்து, முன்னாள் ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்துகிறார்கள். இதன் அர்த்தம் என்ன… அத்தனை பிளானிங்கும் நாக்பூரில் முடிவு செய்யப்படுகிறது. (நாக்பூர் என்பது, ஆர்எஸ்எஸ் தலைமையகம் என்பதைக் குறிக்கும்.) இது தன்னிச்சையாக எழுந்த எதிர்ப்பு அல்ல நண்பர்களே… திட்டமிட்ட எதிர்ப்பு.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் – முக்கியமான விஷயம் – இந்த நாட்டில் எழுகிற எதிர்ப்புக் குரல்களை, போராட்டக் குரல்களை அடக்குவது. முக்கியமான விஷயம் – நாட்டின் மக்களை வாட்டும் பிரச்சினைகளிலிருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்புவது. முக்கியமான விஷயம் – இந்த ஜேஎன்யு வளாகத்தில் போராடும் மக்களிடமிருந்து எழும் எதிர்ப்புக் குரல்களை – அது அனிர்பான், உமர், அசுதோஷ் என எந்தத் தரப்பினருடைய குரலாக இருந்தாலும் சரி – அவர்களை தேசத் துரோகிகள் என்று குற்றம் சாட்டி ஜேஎன்யுவின் குரலை ஒடுக்குவது. ஜேஎன்யுவை சட்டவிரோதானதாகக் காட்டுவது, இந்தப் போராட்டத்தை ஒடுக்குவது.
ஆனால் நான் சொல்லிக் கொள்கிறேன் – இந்தப் போராட்டத்தை நீங்கள் ஒடுக்க முடியாது. இதை அடக்க எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ அவ்வளவுக்கு நாங்கள் இன்னும் வலுவுடன் இன்னும் வீரியமாக ஆர்த்தெழுவோம்.
கடைசியாக ஒரு விஷயம். இது நீண்ட நெடிய போராட்டம். தடைகள் கண்டு நில்லாமல், தலைகளைக் குனியாமல் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுவோம். முன்னேறுவோம். இந்த வளாகத்துக்குள்ளும் சரி, தேசத்தை சீர்கெடுக்கும் சக்திகளை – அது ஏபிவிபி ஆனாலும் சரி,வெளியிலிருக்கும் ஆர்எஸ்எஸ் அல்லது பாஜக சக்திகள் ஆனாலும் சரி – தேசத்தை சீர்குலைக்க முனையும் சக்திகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போம். ஜேஎன்யு குரல் கொடுக்கும், எழுந்து நிற்கும். சரித்திரம் படைக்கும். ஆக்குபை யுஜிசி-யில் துவங்கிய இந்தப் போராட்டம், ரோகித் வெமுலா துவக்கிய போராட்டம், நீங்கள் துவக்கிய இந்தப் போராட்டம் …. இந்த நாட்டில் அமைதியை விரும்புகிற மக்கள் துவக்கிய போராட்டத்தை நாம் முன்னெடுப்போம், வெற்றி பெறுவோம். இதுவே எம் நம்பிக்கை.
இந்தச் சொற்களுடன், ஜேஎன்யுவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி.
இன்குலாப் ஜிந்தாபாத்.
தேச ஒற்றுமை ஜிந்தாபாத்
சமூக நீதி ஜிந்தாபாத்.”
(நிறைவு)
தமிழ் மொழிபெயர்ப்பு: ஷாஜஹான்