ஸ்ரீநகர்:
கத்துவா சிறுமி பாலியல் பலாத்கார கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்று காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘ஜம்மு காஷ்மீர் போலீஸ் மீது நம்பிக்கை இல்லை என்றால் யாரும் இங்கு வசிக்க முடியாது. ஒவ்வொரு முறை குற்றம் நடக்கும் போதும் பிரத்யேக விசாரணை குழுவை அமைக்க முடியாது. குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையை குறை கூறுபவர்கள் குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பவர்கள் என்று அர்த்தம்.
நான் இந்த வழக்கு விவகாரத்தில் தெளிவாக இருக்கிறேன். போலீசார் சிறந்த பணியாற்றியுள்ளனர். அனைத்து ஆதாரங்களையும் அறிவியல் பூர்வமாக சேகரித்துள்ளனர். தற்போது வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அதனால் இனி நீதிமன்றம் தான் முடிவு செய்யும். அதனால் சிபிஐ விசாரணை என்பது முற்றிலும் அவசியமற்றது. குற்றவாளிகள் கோருகிறார்கள் என்பதற்காக இந்த முடிவை எடுக்க முடியாது’’ என்றார்.
காஷ்மீர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை பஞ்சாப் மாநில நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.