gkvasan123
மதுரை:
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்துள்ளது. இந்த கட்சிக்கு 26 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்ததற்கு த.மா.கா. மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மதுரைக்கு இன்று வந்த ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழ் மாநில காங்கிரஸ் மக்கள் விரும்பும் கூட்டணியில்தான் இடம்பெறும் என்று நான் ஏற்கனவே கூறி இருந்தேன். அதுபோல தற்போது தமிழக மக்கள் விரும்பும் வெற்றி கூட்டணியில் த.மா.கா. சேர்ந்துள்ளது.
இந்த கூட்டணி முடிவை ஏற்றுக்கொள்வது அவரவர் விருப்பதை பொறுத்தது. கட்சிக்கு மரியாதை கிடைக்கும் இடத்தில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் எதிர்கால நலன் கருதியே மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா. இணைந்துள்ளது. இது வெற்றி கூட்டணியாக இருக்கும். கட்சியின் வளர்ச்சிக்காக தலைமை எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்று கொள்ள வேண்டும். இன்னும் ஒரு வாரத்தில் த.மா.கா. போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் எம்.பி.க்கள் ராம்பாபு, சித்தன், உடையப்பன், மாவட்ட தலைவர் சேதுராமன், காந்தி, சிலுவை, விஜயராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.