அமெக்காவில் இருந்து வந்திருக்கும் நண்பருடன், கிழக்கு கடற்கரை சாலையில், மாமல்லபுரம் நோக்கி பயணம். உடன் பத்திரிகையாளர் சுந்தரமும் வந்திருந்தார்.
சீரான வேகத்தில் கார் பறந்துகொண்டிருக்க.. வழக்கம்போல் பேச்சுக்கச்சேரியும் களைகட்டியது. நேற்று, மதிமுக.வின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் திமுகவுக்குச் சென்றது, திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தே.மு.தி.க.வுக்குச் சென்றது ஆகியவை குறித்து பேச்சுச திரும்பியது.
பத்திரிகையாளர் சுந்தரம் ப“மூத்த அரசியல்வாதி டாக்டர் ஹண்டே தெரியாமா?” என்றார்.
“எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தாரே..” என்றேன்.
“ஆமாம்..அவரேதான்! கட்சிகள் மாறிய அவர் 1997 வாக்கில் அ.தி.மு.க.வில் இருந்தார். நான் பணிபுரிந்த பத்திரிகைக்காக அவரை பேட்டி எடுக்கலாம் என்று தொடர்புகொண்டேன். வீட்டுக்கு வரச் சொன்னார்.
அவர் அதிமுககாரர் என்பதால், அந்தக் கட்சிகளுக்கு எதிரான கேள்விகளாக தயார் செய்துகொண்டு அவரது வீட்டுக்குச் சென்றேன். சிறு தோட்டம். அங்கேயே நாற்காலிகளில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம்.
அதிமுகவுக்கு எதிரான எனது கேள்விகளை எல்லாம் அவரும் ஆமோதித்தார். “ஆமாம் தம்பி… அதிமுக இந்தந்த தவறுகளைச் செய்கிறது..” என்றெல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்தார். எனக்கு புரியவில்லை. அதிகமுககாரராக இருந்துகொண்டு அந்த கட்சியையே விமர்சிக்கிறாரே என்று நினைத்தேன்.
தவிர, அதே க\ட்சியைச் சேர்ந்த ஒருவர் விமர்சிப்பது பரபரப்பாகவும் இருக்குமே என்றும் நினைத்து தொடர்ந்து கேள்விகள் கேட்டேன். போட்டோகிராபர் அவரை படங்கள் எடுத்தார்.
பேட்டி முடிந்தது. “சார்.. உங்கள் தலைவர் புகைப்படம் உங்கள் வரவேற்பறையில் இருக்கும் அல்லவா? அங்கு வைத்தும் சில போட்டோக்கள் எடுக்கலாம்” என்றேன்.
மகிழ்ச்சியுடன், “உள்ளே வாங்க” என்ற அழைத்துச் சென்றார். எம்.ஜி.ஆர் புகைப்படத்துடன் இவர் இருக்கும் படத்தைப்போட்டு, அதிமுகவை இவர் விமர்சிப்பதையும் வெளியி்ட்டால் நன்றாக இருக்குமே என்பதுதான் என் எண்ணம்.
உள்ளே பெரிதாக இருந்தது… திமுக தலைவர் கருணாநிதியின் படம்! எம்.ஜி.ஆர். படத்தைக் காணோம்!
அதிர்ச்சியுடன் நான், “ என்ன சார்… கருணாநிதி படம் இருக்கு..” என்றேன்.
ஹண்டேவும், “ஆமா.. நீங்தானே தலைவர் படத்துகிட்ட போட்டோ எடுக்கணும்னு சொன்னீங்க” என்றார் புன்னகைத்தபடியே.
அப்போதுதான் இவர் கட்சி மாறி தி.மு.க.வில் சேர்ந்திருப்பது புரிந்தது… ஆனால் உறுதி செய்துகொள்ள வேண்டுமே என்பதற்காக… “திமுகவுல என்ன பொறுப்பு சார்?” என்றேன்.
“இன்றைக்கு காலையில் தானே சேர்ந்திருக்கேன்… தவிர பொறுப்பு பற்றி கவலையில்லை.. சாதாரண தொண்டன் நான்” என்றார்.
நேற்று நான் தொலைபேசியில் பேசி பேட்டிக்கான நேரம் கேட்கும்போது அதிமுகவில் இருந்தவர், இன்று காலை திமுகவில் சேர்ந்திருக்கிறார்.
பிறகு என்ன செய்வது… திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை வைத்து புதிதாக கேள்விக கேட்டு மீண்டும் ஒரு பேட்டி எடுத்தேன்..!” பத்திரிகையாளர் சுந்தரம் சொல்லி முடிக்க.. நானும் அமெரிக்க நண்பரும் (காரிலிருந்து) விழுந்துவிடாமல் சிரித்தோம்!
சுந்தரம் மீண்டும் பேச ஆரம்பித்தார்: “இது சிரிக்கக்கூடிய விசயம் அல்ல. ஏனென்றால் சுயநலத்துக்காக கட்சி மாறுபவர்க அல்ல அவர். அரசியலில் இருந்ாலும், குறிப்பாக அமைச்சராக இருந்தாலும், கை சுத்தமான மனிதர்..
1967ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து ராஜாஜியின் சுதந்திரா கட்சி போட்டியிட்டது அல்லவா.. அந்த தேர்தில்ல சுதந்திரா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு அக் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராக இருந்தவர்.
மதுவிலக்கை, முதல்வர் கருணாநிதி நீக்கிய போது, கொட்டும் மழையில் சென்று வேண்டுகோள் விடுத்தது பலருக்கும் தெரியும். அதே மதுவிலக்குக்கை வலியுறுத்தி சட்டமன்றத்தில் திமுகவினரை கடுமையாக விமர்சித்தவர் ஹண்டே..
அம்பேத்கர் பற்றி, தமி்ழ், ஆங்கிலம், இந்தியில் அருமையான புத்தகம் எழுதியிருக்கிறார்.
தற்போதும் முதுமை அண்டாமல் தனது மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளுக்கு சிகி்ச்சை அளிக்கிறார். தன் சொந்த உழைப்பை நம்பியே வாழ்பவர். இப்போது பாஜகவில் இருக்கிறார்” என்று சொல்லி முடித்தார் சுந்தரம்.
“தகுதியே சில சிலருக்கு தடை ஆகிவிடும். அது போன்றவர்களில்.ஒருவர் ஹண்டே என்பது புரிந்தது” என்றார் அமெரிக்க நண்பர்.
சாலை ஓர இளநீர் கடை ஒன்று என் கண்ணில் பட, வண்டியை நிறுத்தச் சொன்னேன்.