கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் வாகானங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
பெஞ்சல் புயல் 7-ம் தேதி இரவு 10.30 மணி முதல் 11.30 மணியளவில் மரக்காணம் – புதுச்சேரி இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது மெதுவாக கடந்ததால் கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதியில் மழை வெளுத்து வாங்கியது.
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தநிலையில் உள்மாவட்டங்களில் கனமழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்தங்கரையில் 503 மி.மீ, தருமபுரி அரூரில் 331 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
கனமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இந்தநிலையில், ஏரிகள், ஆறுகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே உள்ள பரசன் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு பேருந்து நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ள நீரில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்துச் சென்றது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள், கார் ஆகியவை இழுத்துச் செல்லப்படும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.