திரைக்கு வராத உண்மைகள்; 8 :
டி.ராஜேந்தர்… தமிழ் சினிமாவின் ஆச்சரியமான மனிதர் என்றால் இவர் தான். இவரது சம காலத்தில் திரையில் அறிமுகமான டைரக்டர்களை எல்லாம் காணோம்: கதாநாயக நடிகர்களை எல்லாம் காணோம். மோகன்,,ராமராஜன் ,கார்த்திக், பாண்டியராஜன், பிரபு, நெப்போலியன் என்று அதன் பிறகு வந்தவர்கள் எல்லாம் கூட போன இடம் தெரியவில்லை இவரோ இன்றளவும் நிற்கிறார்.
வெற்றிக்கொடி கட்டி வீதி வலம் வந்த இயக்குனர்கள் பாக்கியராஜ், பாரதிராஜா, எல்லாம் கூட காலிப் பெருங்காய டப்பாக்களாக ஆகிவிட்ட போதிலும், 80-களில் பெற்ற பெயரோடும், புகழோடும், பெருமையோடும் இன்றும் மீடியாக்களால் பேசப்படுகிற மனிதராக.. தற்காலத் தலைமுறையோடும் கை கோர்த்து வலம் வருகிற ‘சினிமா பர்சனாலிட்டி”யாக இருக்கும் ஒரே மனிதர் டி. ராஜேந்தர்!
அவரது அரசியல் நடவடிக்கைகளோடு யாரும் ஒத்துப் போவதில்லை. தவிர.. கதை, திரைக்கதை, வசனம், பாடல்,இசை, டைரக்க்ஷன்.. ஏன் ஒளிப்பதிவு உட்பட ஒருவரே செய்கிறார் என்கிற அவரது ஆச்சரிய இமேஜ், எல்லாம் போய்விட்டது. ஆனாலும் யானை படுத்தால் குதிரை மட்டம்’ என்கிற அளவில் இன்னமும் நிற்கிறார்.
இவர் சினிமாவுக்கு வந்து 35 வருடங்கள் முடிந்து விட்டது. ஆனால் இவரோ இப்போதுதான் 35 வயது இளைஞர் போல் தோன்றுகிறார். சன் டி.வி. நிகழ்ச்சியில் சமீபத்தில் இவர் ஆடிய நடனக்காட்சியைப் பார்த்தவருக்கு இது தெரியும். இவரது ஒருதலை ராகத்தை ஓடி ஓடிப் பார்த்த அன்றைய இளஞர்கள் எல்லாம் இன்று பேரன் பேத்தி எடுத்து விட்ட தாத்தாக்கள்.
இவரோ இன்றும் இளைஞனாக – ஆவேசப் பேச்சால் அரங்கில் கலகலப்பும் கைத்தட்டலும் பெற்றுவிடுகிற சுறுசுறு, விறுவிறு கலைஞனாக – விளங்குவதை விஜய் நடித்த’ புலி’ படத்து விழா மேடையில் இவர் பேசியதைக் கேட்டவர்கள், தொலைகாட்சியில் பார்தவர்கள் உணர்வார்கள்.
அவரது பேச்சும், செய்கைகளும் பார்வையாளர்களுக்கு அவரை ஒரு கோமாளி போல் காட்டுகிறது. அந்த கோமாளித்தனமே அவர் மீது தமிழ் மக்கள் அன்பு கொள்ளக் காரணமாகிறது. சினிமாவிலே, வீராவேசம் பேசும், சூராதிசூரன் போல் தோன்றுவார். ஆனால், உள்ளத்தால் அப்பாவித்தனமான ஒரு குழந்தை இவர் என்பதை இவரோடு, இவரது ‘உஷா, வார இதழில் நான் துணையாசிரியராகப் பணிபுரிந்த போது பார்த்திருக்கிறேன்: உணர்ந்திருக்கிறேன். அவரோடு பழகிய மற்றவர்களின் அபிப்பிராயமும் இதுவாகத்தான் இருக்கும். இவரை கிண்டல் கேலி பேசுபவர்கள் கூட இவரைப் பகையாளியாகப் பார்ப்பதில்லை, பாவிப்பதில்லை, வெறுப்பதில்லை. அதுதான், டி,ஆர்.! டி,ராஜேந்தர்!
டி. ராஜேந்தர் என்கிற ராஜேந்திரன் மயிலாடுதுறை என்கிற மாயவரத்தில் (மாயவரம் என்பதை 1983-ல் ‘ மயிலாடுதுறை’ என்று பெயர் மாற்றினார். அந்நாளைய முதல்வர் எம்.ஜி.ஆர்) வயிற்றிலே தாளம் தட்டி, வாயினால் பாட்டுப் பாடி மகிழ்ந்திருந்த காலம். கல்லூரி நாட்களிலேயே கவிதை, பாட்டு என்று இலக்கியப் பித்துடன் இருந்தவர். தொடக்க காலத்தில் அவருக்கு சினிமாவில் பாட்டு எழுத வேண்டும் என்பதுதான் ஆசை.
அடிப்படையில் அவர் பாடலாசிரியர்தான். அதனால் தான் இன்னமும் கூட அவரது பேச்சிலும், வசனத்திலும் எதுகை, மோனை விளையாடும்.
சினிமா ஆசைகாரணமாக ஒருவரது சிபாரிசின் பேரில் சென்னை வந்து அந்நாளைய இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவை சந்தித்து பாட்டெழுத வாய்ப்பு கேட்டிருக்கிறார் டி.ஆர். அப்போது கண்ணதாசன் வாலி, ஆகிய இருவரும்தான் எல்லாப்படங்களிலும் பாட்டெழுதி வந்தார்கள். மற்ற பாடலாசிரியர்கள் பாடே திண்டாட்டமாக இருந்தது. இந்நிலையில் புதிய பாடலாசிரியரை ஆதரிக்க அந்நாளைய இயக்குநர்களோ, இசையமைப்பாளர்களோ தயாரில்லை.
நொந்து போய் சொந்த ஊருக்கே திரும்பிய ராஜேந்தர், மாயவரத்தை அடுத்துள்ள வடகரை என்ற கிராமத்தில் இருந்த பண்ணையார் இப்ராகிம் ராவுத்தர் என்பவரைப் பிடித்தார். ராவுத்தருக்கும் சினிமாப்படம் தயாரிக்க ஆசையிருந்தது.
ராஜேந்தர் தினமும் அதிகாலை ஆறுமணிக் கெல்லாம் மாயவரத்திலிருந்து வடகரை நோக்கி பயணப்படுவார். பஸ்ஸிலா? அதற்குக் காசு ஏது? இத்தனைக்கும் அப்போது டவுன் பஸ்ஸில் வடகரைக்கு டிக்கட் 35 காசுதான். ஆனாலும் அந்த காசு கூட கையில்லாத ராஜேந்திர் என்ன பண்ணுவார்? நடைதான்.
கால்நடையாகவே வந்தாறு கி.மீ.தூரம் நடந்து போய் ராவுத்தரைப் பார்ப்பார். ராவுத்தர் வீட்டில் காபி கிடைக்கும். முடித்து விட்டு ராவுத்தரும் ராஜேந்தரும் ஆற்றங்கரையை நோக்கி நடப்பார்கள். ரவுத்தார் வேப்பங்குச்சியால் பல் துலக்கி ஆற்றங்கரையில் முகம் அலம்பிக்கொண்டு திரும்பும் வரை அவருக்கு துணை, மெய்காப்பளர் எல்லாம் ராஜேந்தர்தான்.
ராவுத்தர் எது சொன்னாலும், அதற்கு ஆமாம், போடுவதுதான் ராஜேந்தர் வேலை.
ஏன்?
அவர் நினைப்பு எல்லாம் சினிமா எடுக்க வேண்டும். அதற்கு ராவுத்தர் பணம் போட சம்மதிக்க வேண்டும். அது ஒன்றுதானே! அப்புறம் ராவுத்தர் எது சொன்னால் என்ன? அதுவேதான், சரி! ராவுத்தர், ‘என்ன இன்னிக்கு மழை வரும்போல இருக்கே?” என்றால், ’’ஆமாண்ணே!’’… “என்ன இன்னிக்கு வெயில் கடுமையா இருக்கே?’’ “ஆமாண்ணே!’’ – இப்படியாக வில்லுப்பாட்டுக்காரர், ’பீமன், மரத்தைப் பு – டிங்கினாரே..’ என்றால் பின்பாட்டுக்காரன் ‘’டிங்கினாரே’; “டிங்கினாரே” என்பானே…. அதே கதைதான். காலையில் ராவுத்தருடன். அவர் வீட்டிலேயே டிபன்! சாப்பிட்டு, ஏதோ ஒரு மணி நேரம் ராவுத்தர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, ’’சரிண்ணே, நான் வீட்டுக்குப் புறப்படறேன்’’ என்பார் ராஜேந்தர்.
‘’சரி, போயிட்டு வா!’’ என்று விடை கொடுப்பார் ராவுத்தர்.
ராஜேந்தர் மெல்ல ஈனஸ்வரத்தில் இழுத்த படி, “அப்பு……….றம்… நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்கன்……னா.., நான் மெட்ராஸ் போயி ஆகவேண்டியதை பார்த்துட்டு வருவேன்..” என்பார்.
ராவுத்தர், ’’என்ன சினிமா தானே..? எடுப்போம்!’’ என்பார், கம்பீர தொனியில்!
“சரி, வரேண்ணே…” என்று பணிவுடன் விடை பெற்றுத் திரும்புவார் ராஜேந்தர்.
இப்படியே ஆயிற்று – ஒரு மாதம், இரண்டு மாதம், ஆறு மாதம் , ஒரு வருடம்.
“இலவு காத்த கிளி ஆகிறோமோ?” என்ற வருத்தம் ராஜேந்தரை வாட்டலாயிற்று.
ஒருநாள் ஒரு உறுதியான முடிவுக்கு வந்துவிட்டார். தன் நண்பரையும் அழைத்துக் கொண்டு நேரே ராவுத்தரிடம் போனார். அதிகாலை. அப்போதுதான் ராவுத்தர் குளித்து முடித்து, தலைதுவட்டிக் கொண்டிருந்தார்.
ராஜேந்தரை பார்த்ததும், “வாப்பா, ராஜேந்திரா!” என்று வழக்கம் போல் அழைத்தார். சற்று பொறுத்து, ’’வா,சாப்பிடலாம்!’’ என்றார்.
ராஜேந்தர் “இல்லண்ணே.. நான் சாப்பிட்டுத்தான் வர்றேன்’’ என்றார். அதோடு, ’’மெட்ராஸ் போறேன் சினிமாவில் முயற்சி பண்ணலாம்ன்னு..’’
ராவுத்தருக்குப் புரிந்து விட்டது…. “நாம் சினிமா தாயாரிப்பதில் தீவிரம் காட்டாத்தால் கோபத்தில் அல்லது ஏமாற்றத்தில் இவன் சென்னை கிளம்புகிறான்’ என்று.
ராவுத்தர் பேசவில்லை, சற்றுநேரம்.
தலை துவட்டிய துண்டை கொடியில் காயப்போட்டுக் கொண்டே கேட்டார் “சினிமா எடுக்கணும்னா, எவ்வளவு செலவு ஆகும்கிறே..?”
“ஒரு பத்து லட்சம் இருந்தா போதும் அண்ணே..’’
“சரி இப்போ மெட்ராஸ் போய், அது சம்பந்தமா என்ன ஏதுன்னு விசாரிச்சு யார்யாரைப் பார்க்கணுமோ, பார்த்துட்டு வரணும்னா உனக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்.?”
“ஒரு மூவாயிரம் வேணும் அண்ணே..”
“அவ்வளவுதானே?” – ராவுத்தர் மூவாயிரத்துக்கு “செக்” எழுதினார். ராஜேந்தரிடம் கொடுத்தார். ’’மாயவரம் போயி பேங்கிலே மாத்திட்டு மெட்ராஸ் போய் வேலையை முடிச்சிட்டு வா!’’
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் மனதோடு, புறப்பட்டார் ராஜேந்திரன், பீடு நடைபோட்டு!
சென்றார் சென்னை! கண்டார், உரியவர்களை: திரும்பினார். தொடங்கினார். உதயமாயிற்று, “ஒரு தலை ராகம்”!
வெளிவந்து திரையுலகில் ஜெயக்கொடி நாட்டியது! அப்புறம் ? அதெல்லாம் உங்களுக்குத் தெரிந்தது தானே!
ராவுத்தரை வடகரைக்கு சந்திக்கப் போகும் போதெல்லம் அவருடன் சென்று வந்த அவரது நண்பர் சொல்லக் கேட்டது.
(தொடரும்..)
ஆர்.சி.சம்பத் அலைபேசி எண்: 97907 52183