ஒடிசாவின் மனித உரிமை ஆர்வலரும் சுரங்க எதிர்ப்புப் போராளியும்- ஆவணப்படத்தயாரிப்பாளருமான தேபரஞ்சன் சாரங்கியின் திடீர் கைதுக்கு பல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி அம்மாநில முதலமைச்சருக்கு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கமும் துவங்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்திருப்பதன் பின்னணி பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.
தேபரஞ்சன் சாரங்கி, ஒடிசா மாநிலத்தில் சுரங்க எதிர்ப்பு இயக்கத்தை தீவிரமாக நடத்தி வருபவர். மிகப்பெரிய மனித உரிமைச் செயற்பட்டாளரும், ஆவணப்பட்த்த்யாரிப்பாளருமான தேபரஞ்சன் சாரங்கியை சீருடை அணியாத அம்மாநில காவல்துறையினர் ராயஹெடா மாவட்டத்தின் குச்சிபெடார் கிராமத்தில் மார்ச் 18 ஆம் தேதி கைது செய்தனர்.
தன்னுடைய நெருங்கிய நண்பரின் தந்தையார் இறப்பு நிகழ்வில் கலந்து கொண்டபோது இக்கைது சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில் ராயஹெடா மாவட்ட்த்தின் திக்ரி காவல்நிலையத்தில் இவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவவழக்கில் அவர் ஆஜராகததால் அவரை ஜாமீனில் விடமுடியாத குற்றத்தின் கீழ் கைது செய்ய காஷிபூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.கைது செய்யப்பட்ட அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார்? என்பது இதுவரை தெரியவில்லை.. அவருடைய ஜாமீன் மனுவை பரிசீலிக்காமலேயே அவருடைய நீதிமன்றக் காவலை மார்ச் 22 ஆம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
பழங்குடி இன மக்களின் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் தொடர்பான ஆவணப்படத் தயாரிப்பிற்காக மால்காங்கிரி மாவட்டத்தில் கடந்தாண்டில் சாரங்கி படப்பிடிப்பு நடத்தினார். அப்போது அவர் காவல்துறையினரால் மிரப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.இதனைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு சதி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஆதிவாசிகளின் நலனை முன்னிறுத்தி சுரங்க எதிர்ப்பு போராட்ட இயக்கத்தை கடந்த 8 ஆண்டுகளாக தேபரஞ்சன் சாரங்கி நடத்தி வருகிறார். ஆதிவாசிகளின் நலனில் அக்கறை கொண்ட இவர் “குறுக்குத் தெருக்களில்..” ( AT THE CROSSROADS) என்ற ஆவணப்படத்தையும் தயாரித்துள்ளார்.இப்படத்தில் தெற்கு ஒடிசாவில் துயரப்படும் பழங்குடி இன மக்களின் துயரத்தையும், அவர்களின் மாநில அரசுக்கு எதிரான நியாயப்பூர்வ போராட்டங்களையும் முன்னிலைப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டது., அரசுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடக்கும் துப்பாக்கிச் சண்டைகளில் இப்பகுதிகளில் வசிக்கும் தலித்துகள் மற்றும் ஆதிவாசி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒடிசா மாநிலத்தின் காந்தமால் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மீது நட்த்தப்பட்ட காட்டுமிராண்டித் தாக்குதல் தொடர்பான உண்மை கண்டறியும் குழுவிலும் சாரங்கி இடம்பெற்றிருந்தார்.
சிறந்த எழுத்தாற்றலும் படைப்பாற்றலும் கொண்ட இவர் மனித உரிமைச் செய்ல்பாடுகளில் தீவிர நாட்டம் கொண்டவர். சுரங்கப் பணி எதிர்ப்பு, மக்கள் இடப்பெயர்ச்சி, வகுப்புவாதம், சிறுபான்மை மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள், ஆதிவாசி மக்களின் நலன் இப்படி பல தளங்களில் அக்கறை செலுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்துவருபவர். 2000 ஆம் ஆண்டில் 3 ஆதிவாசிகளை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அதனையடுத்து சாரங்கி நட்த்தி வரும் இயக்கம் மிகப்பெரிய சிக்கல்களைச் சந்தித்தது.
ஒடிசா பகுதியில் மிகுதியாக உள்ள பாக்சைட் சுரங்கங்களை வெட்டி எடுப்பதற்கான உரிமையை பெரும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது. அதற்கான எதிர்ப்புக் குரலாக விளங்கி வருபவர் சாரங்கி. இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் எதிர்ப்பின் வீரியத்தை செயலிழக்கச் செய்து விடலாம் என்பதே அரசின் உள்நோக்கம் எனத் தெரிகிறது.