கலிபோர்னியா:
ஜப்பானில் திமிங்கிலங்கள் வேட்டையாடப்பட்டு, அதன் கறியை விற்பனை செய்து வந்தது ஊரறிந்த விஷயம். அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி என்ற பெயரில் நடந்த இந்த வேட்டைக்கு கடந்த ஆண்டு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
ஜப்பான் மட்டுமல்ல வணிக ரீதியாக ஐஸ்லாந்தும் திமிங்கில வேட்டையில் ஈடுபட்டு வந்தது. சர்வதேச திமிங்கில ஆணையத்துடன் 1986ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து நடுத்தர மற்றும் பெரிய அளவிலான திமிங்கில வேட்டையை ஐஸ்லாந்து நிறுத்தியிருந்தது.
ஆனால் கடந்த நவம்பர் மாதம் கலிபோர்னியாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜானி ஜீவிக் என்பவர் தயாரித்த ‘பிரீச்’ குரும் படம் மூலம் ஐஸ்லாந்தில் வணிக ரீதியான திமிங்கில தொழிற்சாலை செயல்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
2002ம் ஆண்டில் இந்த ஆணைய ஒப்பந்தத்துக்குள் ஐஸ்லாந்து இணைந்த பிறகும் எப்படி திமிங்கில வேட்டை தொடர்கிறது என்ற கேள்வி எழுந்தது. அந்த ஒப்பந்தத்தில் உள்ள சரத்துக்களை பயன்படுத்தி வணிக திமிங்கிலங்களை விட்டுவிட்டு, துடுப்பு திமிலங்களை நூற்றுக்கணக்கில் வேட்டையாடி வருவது தெரியவந்துள்ளது.
பொதுவாக ஐஸ்லாந்தில் யாரும் திமிங்கில இறைச்சியை விரும்பி சாப்பிடுவது கிடையாது. அதனால் திமிங்கில இறைச்சியை ஜப்பானுக்கு ஐஸ்லாந்து அனுப்பி வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜப்பான், நார்வே போன்ற நாடுகள் வணிக திமிங்கிலங்களை வேட்டையாடுவதில் புகழ்பெற்றது. உலகில் ஐஸ்லாந்து மட்டுமே ஆபாயகரமான துடுப்பு திமிங்கிலங்களை வேட்டையாடி வருகிறது.
பீர் மற்றும் சொகுசு நாய்களுக்கான உணவில் இந்த இறைச்சி கலக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் தடை இருப்பதால் திமிங்கில இறைச்சி தொழில் லாபகரமானதோ அல்லது செழிக்க கூடியதோ இல்லை. இருந்தபோதும் திமிங்கில வேட்டைக்காரர்கள் வேட்டையாடுவதை நிறுத்தாமல் உள்ளனர். அதேபோல் அங்குள்ள திமிங்கில தொழிற்சாலையும் மூடப்படாமல் இருப்பதை குரும்படம் சுட்டிக்காட்டுகிறது.