அமீர்கான், தற்போது நாட்டில் சகிப்பின்மை பெருகிவிட்டதாகவும், அதனால் நாட்டை விட்டே வெளியேறிவிடலாமா என தனது மனைவி கேட்டதாகவும் சொல்லப்போக.. இந்துத்துவா அமைப்புகள் அமீர்கானை “தேசத்துரோகி” என்கிற அளவுக்கு விமர்சிக்க ஆரம்பித்துவிட்டன. சிவசேனா இன்னும் ஒருபடி மேலே போய், “அமீர்கானை அறைபவருக்கு ஒரு லட்சம் பரிசு” என அறிவித்திருக்கிறது. இன்னொரு பக்கம் அமீர்கானுக்கு ஆதரவாக, பலகட்சிகளும் அமைப்புகளும் அறிக்கைவிட்டபடி இருக்கின்றன.
இதற்கிடையே, தான் பேசியது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுவிட்டது, இந்தியாவை நேசிக்கும் தான், வேறு எந்த நாட்டிலும் குடியேற மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார் அமீர்கான்.
ஆனாலும் அவரது பேச்சு ஏற்படுத்திய சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.
இதில் புரியாத விசயம், இதே போன்ற கருத்துக்களை ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னதை யாரும் பொருட்டாக எடுத்துக்கொள்ளவல்லை என்பதுதான்.
கோவை தலைநகர் பனாஜியில் நடந்த46வது சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய ரஹ்மான் அமீர்கான் விவகாரம் குறித்து பேசினார்.
அதாவது,, “மதச் சகிப்பின்மையை நானும் எதிர்கொள்ள நேர்ந்தது. இரு மாதங்களுக்கு முன் ஈரானிய திரைப்படமான ‘முகம்மது – மெஸேஞ்சர் ஆப் காட்’ என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததற்காக இசுலாமிய அமைப்புகள் எனக்கு எதிராக பேசின. அந்தப் படத்தின் தலைப்பு அல்லாவுக்கு எதிரானது என்பது அவர்களது வாதம்.
ரஸா என்ற அமைப்பு எனக்கு எதிராக பத்வா விடுத்தது. அந்த நேரத்தில், நான் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை டெல்லி, உத்தரபிரதேச மாநில முதல்வர்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்தார்கள்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் பேசினார்.
அவர் பேசிய சகிப்பின்மை என்பது இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் சகிப்பின்மை. ஆனால் அது குறித்து எவரும் கருத்து தெரிவிக்கவில்லை. அமீர்கான் அனுபவித்த சகிப்பின்மைதான் பேச்சாக இருக்கிறது.
சகிப்பின்மை என்பது எந்த மதத்தை அடிப்படையாக வைத்து வந்தால் என்ன… அதைக் கண்டிக்க வேண்டாமா? இந்து சகிப்பின்மையை கண்டிப்போம், இஸ்லாமிய சகிப்பின்மையை சகிப்போம் என்பதுதான் மதநல்லிணக்கமா?
- ம. அறிவரசன்