பதான்கோட் விமானப்படை தளம் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல், நாடு முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தனது நீண்டகால ராணுவ சேவையில் பதான்கோட்டில் நான்கு ஆண்டுகள் பணி புரிந்தவரும், 1999ம் ஆண்டு கார்கில் யுத்தத்தில் பங்கேற்றவருமான ஓய்வு பெற்ற லெப். கர்னர் கணேசன்.சு. அவர்களை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்..
அவரது பேச்சு, அதிர்ச்சிகரமான பல உள் விவகாரங்களை வெளிப்படுத்தியது. இதோ அவர் நமக்களித்த சிறப்புப்பேட்டி…
பதான்கோட் விமானபடைத்தளத்தை ஜஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் தேர்ந்தெடுத்தது ஏன்?
பொதுவாக பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் இலக்கு ஜம்மு காஷ்மீராகத்தான் இருக்கும். ஆனால், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அங்கு பனிப்பொழிவு மிக அதிகமாக இருக்கும். ஆகவே வேறு இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். குறிப்பாக பதான்கோட்டை தேர்ந்தெடுக்க முக்கிய காரணங்கள் உண்டு. அந்த பகுதி, இந்திய பாகிஸ்தானின் இன்டர் நேசனல் பார்டர் பகுதியில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அந்த இன்டர் நேசனல் பார்டர் பகுதியில் ரவி ஆறு ஓடுகிறது. அந்த எல்லைப்பகுதி, சமவெளியாக இருக்காது. கரடு முரடான பகுதி. ஆகவே அங்கே முழு வீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது கடினம். ஆகவே அந்த பகுதி வழியாக ஊடுருவி இருக்கிறார்கள்.
தவிர பதான்கோட் ராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஏர்பேஸ். 1971ம் ஆண்டு இந்த பதான் கோட் பகுதியில் நடந்த டாங்கி சண்டை மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
மேலும் பதான்கோட் விமானபடைத் தளத்தில் விமானங்கள், வெடிகள், விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் நிலையம், ராக்கெட் லாஞ்சர்கள் இருக்கின்றன. அவற்றைத் தகர்க்க வேண்டும் என்பதே பயங்கரவாதிகளின் நோக்கம். அப்படி நடந்தால், பதான்கோட் பகுதியே வெடித்துச் சிதறி இருக்கும். நினைத்துப் பார்க்கவே முடியாத சேதம் ஏற்பட்டிருக்கும். ராணுவ வீரர்களின் தீவிர கண்காணிப்பு பணியாலும், அர்ப்பணிப்புணர்வுடன் போரிட்டதாலும் பயங்கரவாதிகளின் நோக்கம் வீழ்த்தப்பட்டிருக்கிறது.
இன்னொரு விசயம், விமானபடைதளத்தில், கிரவுண்ட் செக்யூரிட்டி, தரைப்படை தளத்தில் இருப்பது போல் அதிகமாக இருக்காது. ஏனென்றால், விமானப்படையின் போர்க்களம் ஆகாயம்தான். அதுதான் அவர்களது இலக்கு. பதான்கோட் விமானபடைத்தளத்திலும் “டிஃபன்ஸ் சர்வீஸ் கோர்” எனப்படும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் படைதான் பாதுகாப்புக்கு இருக்கும். அந்த படையைச் சேர்ந்தவர்கள் 58 வயது வரை பாதுகாப்பு பணி புரிவார்கள். அதாவது “கிரவுண்ட் செக்யூரிட்டி” லைட் ஆகத்தான் இருக்கும். ஆகவே தாக்குவது ஓரளவு சுலபம் என்று பயங்கரவாதிகள் கருதி இருக்கிறார்கள்.
இந்தத் தாக்குதலைப் பற்றி முன்கூட்டியே தகவல் தரவில்லை என்று உளவுத்துறை மீது ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறதே!
இது தவறு. நம்மிடமும், ஐ..பி. ரா, ஆர்மி உளவுப்பிரிவு என உளவு அமைப்புகள் இருக்கின்றன. தாக்குதல் நடக்கும் என்பதை முன்னதாகவே நமது உளவு அமைப்புகள் மோப்பம் பிடித்திருக்கும். ஆனால் எங்கே தாக்குதல் நடக்கும் என்பதை முன்னதாகவே கணிப்பது கடினம். ஆகவே,. இந்தியபகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று சில நாட்கள் முன்னாலேயே “ரெட் அலர்ட்” கொடுக்கப்பட்டிருக்கிறது. எங்கு தாக்குதல் நடத்துவார்கள் என்பதை துல்லியமாக கணிப்பது கடினம். ஆகவே பொதுவாக எல்லா ராணுவ நிலைகளிலும் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பதான்கோட் விமான படைத்தளத்தில் குறைவான ஆட்கள் இருந்தாலும், அங்கும் கூடுதல் எச்சரிக்கையோடுதான் இருந்தருக்கிறார்கள். உளவு அமைப்பினரும், ராணுவத்தினரும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால் இதர பாதுகாப்பு அமைப்புகள் அப்படி செயல்படவில்லை என்பதே வருத்தமான உண்மை.
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
தாக்குதல் ஜனவரி 2ம் தேதி நடந்திருக்கிறது. அதற்கு முந்தைய நாள், பதான்கோட் பகுதியை உள்ளடக்கிய குர்தாஸ்பூர் மாவட்ட எஸ்.பி., சந்விந்தர்சிங், குருத்வாராவுக்கு வழிபட காரில் சென்றபோது, இந்திய ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் நான்கு பேர் அவரைக் கடத்தி இருக்கிறார்கள். அவரை கட்டிப்போட்டுவிட்டு, அவரது காரையும், மொபைல் போனையும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். பிறகு தப்பி வந்த பல்வீர்சிங், தான் கடத்தைப்பட்டதையும் தன்னை கடத்தியவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்றும் காவல்துறையில் புகார் தெரிவிக்கிறார். ஆனால் பஞ்சாப் காவல்துறை இதை கண்டுகொள்ளவில்லை. “உன் மீதான தனிப்பட்ட விரோதத்தில் யாரேனும் கடத்தி இருக்கலாம்” என்று அலட்சியமாக சொல்லியிருக்கிறார்கள் பஞ்சாப் காவல்துறை உயர் அதிகாரிகள்.
குர்தாஸ்பூர் எஸ்.பி., சந்விந்தர்சிங் தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தபின், இருபத்திநான்கு மணி நேரங்களுக்கு மேல்,தான் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந் 24 மணி நேரத்தில் பஞ்சாப் போலீஸ் எடுத்த நடவடிக்கை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், பதான்கோட் ஏர்பேஸ், என்ற இலக்கை நோக்கி வந்த பயங்கரவாதிகள் ப்ளூ வீக்கன் லைட் எரியும் வண்டியை கடத்தினார்கள் என்பது நம்ப முடியாத கதை அவ்வாறே கடத்தி இருந்தாலும் எஸ்பி. மற்றும் அவர் நண்பரை தாக்காமல் விட்டது அணு அளவும் நம்ப முடியாததாக இருக்கிறது. பயங்கரவாதிகள் எனத் தெரிந்தும் இந்தியநாட்டைக் காக்க, தன் உயிரையும் கொடுப்பேன் என்று சத்திய பிரமாணம் செய்த காவல்துறை அதிகாரி, தீவிரவாதிகளிடம் சண்டையிட்டு தடுக்க ஏன் முயற்சிக்கவில்லை?
ஆகவேதான் சொல்கிறேன், உளவுப்பிரிவும், ராணுவமும் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன. ஆனால் இதர காவல் பிரிவு சரியாக செயல்படவில்லை. பாகிஸ்தான் தூண்டிவிட்ட பயங்கரவாதிகளுக்கு இது வசதியாகப்போய்விட்டது.
இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பின்புலமாக இருப்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், இந்த தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் கண்டித்திருக்கிறார். ஆகவே குறிப்பிட்ட இந்த பதான்கோட் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பின்னணியில் இருந்திருக்குமா என்ற கேள்வி எழுகிறதே!
நிச்சயமாக இந்த தாக்குதலின் பின்னணியிலும் பாகிஸ்தான் இருக்கிறது. பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கிறார்கள். இங்கு வந்ததும் எஸ்.பியின் செல்போனை பறித்து பாகிஸ்தானுக்கு பேசி இருக்கிறார்கள்.
அந்நாட்டு ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ. ஆகியவற்றின் ஆதரவோடுதான் பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். அதில் சந்தேகமே இல்லை. அவர்களின் ஆதரவு இல்லாமல், தீவிரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ முடியாது.
ஆனால், பாகிஸ்தான் பிரதமருக்கு தெரிந்து இது நடந்ததா, தெரியாமல் நடந்ததா என்பதை நாம் கணிக்க முடியாது. ஏனென்றால், அந்நாட்டில் ராணுவம்தான் சக்திவாய்ந்த அமைப்பு. அரசியல் அமைப்பு என்பது, ராணுவத்தின் அதிகாரித்துக்கு கீழ்தான் அங்கு இருக்கிறது.
ஆகவே அந்நாட்டு ராணுவம் இந்த பயங்கரவாத தாக்குதல் பற்றி முன்கூட்டியே அந்நாட்டு அரசுக்கு தகவல் சொல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது சொல்லியும் இருக்கலாம். ஆனால் அந்நாட்டு ராணுவம் ப்ளஸ் ஐ.எஸ்.ஐ. தான் பதான்கோட் தாக்குதலுக்கும் காரணம்.
தற்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் பதான்கோட் தீவிரவாதத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.. அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சையத் சதாகத் ஹுசைன், “இந்தியஅரசும் இந்திய ஊடகங்களும் பாகிஸ்தான் வெறுப்பில் உழன்று வருகின்றன. ஒவ்வொரு பயங்கரவாதத்தாக்குதலுக்கும் பாகிஸ்தானை குற்றம்சாட்டுகின்றன” என்று கூறியிருக்கிறாரே!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பதே பாகிஸ்தானின் ஒரு பகுதியாகத்தானே இருக்கிறது… அங்கிருந்து ஒரு குரல் இப்படி ஒலிக்கிறது என்றால் அதன் பின்னே இருப்பது பாகிஸ்தான் ராணுவமும், அதன் உளவு அமைப்பும்தானே! மேலும் ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் இந்த மாதிரி தாக்குதல் நடத்தும் அளவு வல்லமை பொருந்தியது அல்ல.
பாகிஸ்தான் ராணுவம் ஏன் இப்படி இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதலை தூண்டிவிடவேண்டும்?
காரணம், பயங்கரவாதிகள் இல்லை என்றால், பயங்கரவாதம் இல்லை என்றால் பாகிஸ்தான் ராணுவம் இல்லை! பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் ராணுவமும் நெருங்கிய கூட்டாளிகள். காரணம், இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல்கள் இல்லை என்றால், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் பற்றியோ, அந்நாட்டு ராணுவம் பற்றியோ யாரும் பேச மாட்டார்கள். அதை பொருட்படுத்த மாட்டார்கள். “பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கின்றன. நாங்கள் பயங்கரவாதிகளை வேட்டையாடுகிறோம்” என்று சொல்லி, தனது முக்கியத்துவத்தை நிறுவ முனைகிறது பாகிஸ்தான் ராணுவம். தவிர, இதைச் சொல்லி, அமெரிக்காவில் இருந்து ஆயுதங்களையும் வாங்கிக் குவிக்கிறது.
பதான்கோட் தாக்குதல் சமயத்திலேயே ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தை பயங்கரவாதிகள் தாக்கி இருப்பதையும் முடிச்சுப்போட்டுப் பாருங்கள். எளிதில் விளங்கும்.
சமீபத்தில்தான் திடுமென பாகிஸ்தான் சென்று அந்நாட்டு பிரதமரிடம் பேசினார், இந்திய பிரதமர் மோடி. அடுத்த சில நாட்களிலேயே விமானபடைத்தளத்தைத் தாக்கியிருக்கிறார்ள் பயங்கரவாதிகள். ஆக, பிரதமர் மோடியின் ராஜதந்திரம் தோற்றுவிட்டது என்று சொல்லலாமா?
மோடியின் பாகிஸ்தான் பயணம் பற்றி எதுவும் நாம் சொல்ல முடியாது. ஏனென்றால், பாகிஸ்தான் பிரதமருடனான சந்திப்பின்போது, இந்த இந்த பிரச்சினை குறித்து பேசினோம் என்பதாக பிரதமர் மோடி ஒரு ப்ரஸ் ரிலீஸ் கூட அளிக்கவில்லை. அந்நாட்டு பிரதமர் நவாஸ் செரிப்பின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லப்போனேன், அவரது பேத்தி கல்யாணத்துக்கு வாழ்த்து சொன்னேன் என்பதாகத்தான் சொன்னார். நவாஸ் செரிப்பீன் அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி வந்தார். அவ்வளவுதான்.
மற்றபடி நவாஸூடன் அவர் என்ன பேசினார் என்பது யாருக்குத்தெரியும்? தெரியாத விசயம் பற்றி நாம் எப்படி கருத்து சொல்ல முடியும்?
பயங்கரவாதிகளின் தாக்குதலை இந்திய அரசு எப்படி எதிர்கொள்ளும் விதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இவர்கள் எங்கே எதிர்கொள்கிறார்கள்? முந்தைய காங்கிரஸ் அரசு இருந்தபோது, இப்படி ஏதேனும் நடந்துவிட்டால், “காங்கிரஸ் அரசுக்கு பயங்கரவாதத்தை எதிர்கொள்ள தெரியவில்லை. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக நாடகம ஆடுவதிலேயே கவனமாக இருக்கிறது. இவர்களுக்கு தேசபக்தி இருந்தால்உடனே பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும்” என்றெல்லாம் பா.ஜ.கவினர் குதித்தார்கள்.
மோடி ஆட்சியிலும் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன. காங்கிரஸ் செய்ததைப்போலத்தான் இவர்களும் நடந்துகொள்கிறார்கள். வேறு என்ன சொல்வது? ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி நிகழ்வுக்குப் பின், தக்க பதிலடி கொடுப்போம் என்று அரசு சூளுரைக்கிறதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்க திராணி இல்லாததாகவே இருக்கிறது.
இந்திய அரசு என்ன விதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வெளி தாக்குதலை நாம் நடத்த வேண்டும். அங்கிருக்கும் பயங்கரவாதிகள் முகாம்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட வேண்டும். அது ஒன்றுதான் பயங்கரவாதத்தை வேறோடு அழிக்க ஒரே வழி.
அப்படி நடந்தால், இந்திய பாகிஸ்தான் போர் ஏற்பட்டு, பெரும் சேதமும் நிறைய உயிரிழப்புகளும் ஏற்படுமே!
அப்படியானால் இராணுவ வீரர்கள் மட்டும் தொடர்ந்து பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா?, ராணுவீரர்களின் உயிர்களுக்கு மதிப்பு இல்லையா.. இந்த தேசத்துக்காகத்தானே அவர்கள் சேவை புரிகிறார்கள். பலியானவுடன் ஐந்து லட்ச ரூபாய் நிதி அளித்தால், இறந்தவன் உயிர் பெற்றுவிடுவானா?
(சற்று இடைவெளிவிட்டு..) ஒரு முக்கியமான விசயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்ரேல் நாட்டை நாம் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தன் தரப்பில் ஒருவர் இறந்தால், எதிரியின் தரப்பில் நூறு பேர் மடியவேண்டும் என்ற நோக்கம் கொண்டது இஸ்ரேல். இந்த கொள்கையால்தான் தன் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் முறியடித்தது அந்த நாடு.
தவிர, பாகிஸ்தான் மீது போர் தொடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. தாக்குதலில் “லிமிடெட் அட்டாக்” என்று உண்டு. ஏற்கெனவே நான் சொன்னது போல, பயங்கரவாதிகள் முகாம்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்த வேண்டும். இதைத்தானே ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா செய்தது. சிரியாவில் ரஷ்யா செய்கிறது. ஏன்.. இதே பாகிஸ்தானிலும் அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியதே! அப்படி நடந்தால், உலக நாடுகள் நிச்சயம் இந்தியாவை நிச்சயமாக ஆதரிக்கும். இந்தியா ராணுவ ரீதியாக மட்டுமல்ல.. பொருளாதார ரீதியாக பெரும் பலம் பெறவும் இந்த நடவடிக்கையே உதவும்.
அதாவது..
பொறுங்கள்.. அப்படி வான்வெளிதாக்குதல் நடத்தினோம் என்றால், போர் ஏற்பட்டு அதிகமான உயிர் சேதம், பொருட் சேதம் ஏற்படுமே என்கிறீர்கள். பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள நம் நாட்டு உளவு அமைப்புகள், இராணுவ அமைப்புகள் நிறைய நேரத்தையும் நிதி ஆதாரத்தையும் மனித உழைப்பையும் கூடவே உயிர்களையும் அதீதமாக செலவு செய்துகொண்டுதான் இருக்கின்றன. மேலும், இங்கு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தால் நம் நாட்டுடன் பொருளாதார உறவு கொள்ள, இங்கு முதலீடு செய்ய பிற நாடுகள் தயங்கும். அதுதான் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். தவிர, இப்படி நம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது தார்மீக ரீதியாவும் நமக்கு அவமானம் என்பதை அனைவரும் உணரவேண்டும்.
ஆகவேதான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்… பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது விமானத்தாக்குதலை நாம் நடத்தியே ஆகவேண்டும். இது அவசர அவசியம்.
பதான்கோட் தாக்குதல் பற்றி வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இந்த விசயத்தில், மீடியா சில முக்கிய கேள்விகளை எழுப்பவில்லை என்கிற ஆதங்கம், வருத்தம் எனக்கு இருக்கிறது. அவற்றை நான் கேட்க விரும்புகிறேன்.
பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட குர்தாஸ்பூர் எஸ்பி எதிர்பாராதவிதமாக நள்ளிரவில் அந்த இடத்துக்கு வந்துள்ளார்.அந்த இடத்தில் இருந்து காருடன் அவர் கடத்தப்பட்டுள்ளார். டிரைவர் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டதில்இறந்துள்ளார். விமானப்படை தாக்குதலுக்கு வந்த தீவிரவாதிகள் அந்த எஸ்பியின் அலுவலக காரைபயன்படுத்தியுள்ளன.ர். எஸ்பி உயிரோடு இருக்கிறார். ஆனால் டிரைவர் இறந்துள்ளார். இவை அனைத்து மேபயங்கரவாதிகளுக்கு வசதியாக இருந்துவிட்டது. அந்த எஸ்பி மீது ஏற்கெனவே லஞ்ச ஊழல் புகார்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
கேள்வி என்வென்றால்… ஏப்படி அந்த எஸ்பி தப்பித்தார்?. ஏன் அவர் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு சாகவில்லை?.
அவரது உயிர் மட்டும்அவ்வளவு அதிசயமானதா? இந்திய அரசியலமைப்புக்கு அவர் அளித்த உறுதிமொழி என்னஆனது? ராணுவத்தினர் மட்டும்தான், உறுதிமொழியை தீவிரமாக பின்பற்றி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யவேண்டுமா? நாட்டை காப்பதில் இருந்து ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டும் உறுதிமொழியில் இருந்து விலக்குஅளிக்கப்பட்டுள்ளதா?.
இந்த கேள்விகள் அனைத்தும் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கேட்கும் கேள்வியாகும். ராணுவ வீரர்கள் மட்டும்சாக வேண்டும். ஊழல் போலீஸ் அதிகாரிகள் உயிர் வாழ வேண்டுமா? எங்களது குடும்பத்தின் நிலை என்ன?
இந்த கேள்விகளுக்கும் நடந்து கொண்டிருக்கும் ஆபரேஷனுக்கும் எந்த தொடர்பு கிடையாது. எந்த மீடியாக்களும்கேட்காததால், உங்கள் patrikai.com இதழ் மூலம் நான் கேட்கிறேன். உரியவர்கள் பதில் சொல்லட்டும்.
பேட்டி: டி.வி.எஸ். சோமு