புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாரதீய ஜனதா இடையேயான கூட்டணி முறிந்துவிட்டது. இதனால் தமிழகம் போலவே, பெரிய கட்சிகள் ஆதரவு ஏதுமின்றி புதுவையிலும் தனித்துவிடப்பட்டுள்ளது பாஜக.
புதுவை சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அ.தி.மு.க. தனித்து போட்டியிடுவதற்காக 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரசும், பாரதீய ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரான ராதாகிருஷ்ணன் வென்றார். எனவே சட்டசபை தேர்தலிலும் இதே கூட்டணி நீடிக்க வேண்டும் என பா.ஜ. விரும்பியது. இதுதொடர்பாக பாரதீய ஜனதா தலைவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் “ சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினர் ஓட்டுகள் என்.ஆர்.காங்கிரசுக்கு கிடைக்காது” என்று என். ஆர் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் தெரிவித்தார்கள்.
தவிர,” மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதா மழைவெள்ள நிவாரணம் உள்பட பல்வேறு விஷயங்களில் புதுவைக்கு அனுசரணையாக நடந்துகொள்ளவில்லை” என்றும் குற்றம்சாட்டினார்கள்.
இதனால் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க ரங்கசாமி விரும்பவில்லை. ஆனாலும் விடாமல், பா.ஜனதா கட்சியினர் என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி அமைக்கவே தொடர்ந்து முயற்சித்தார்கள். சமீபத்தில் புதுச்சேரி வந்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூட்டணி தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேச முன்றார். ஆனால் ரங்கசாமி அதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை.
இதையடுத்து வேறு வழியில்லாமல் புதுச்சேரி மாநிலத்தில் தனித்து போட்டியிட பாஜக முடிவு செய்தது. 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அம்மாநில பா.ஜனதா தலைமை வெளியிட்டுவிட்டது. . எஞ்சிய 14 தொகுதிகளுக்கான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
ஆக, தமிழகம் போலவே புதுவையிலும் பாஜக தனித்துவிடப்பட்டுள்ளது.