இணைய தளபதிகள்:
கட்சிக்காக போராட்டங்களில் கலந்துகொள்வது, தெருத்தெருவாக பிரச்சாரம் செய்வது, சுவரொட்டிகள் ஒட்டுவது என்பது மட்டுமே தொண்டர்களின் பணி என்பது இன்று மாறியிருக்கிறது.சமூக இணையதளங்களில் தங்களது கட்சிக்கான குரலாக ஒலிப்பதும் முக்கிய பணியாக ஆகிவிட்டது. அப்படி ஒவ்வொரு கட்சிக்கும் தளபதிகளாய், சமூகவலைதளங்களில் கருத்துப்போர் இடுபவர்கள் பலர். அவர்களில் சிலரது பேட்டிகள் இந்த பகுதியில் தொடர்ந்து வெளியாகும்.ஏற்கெனவே ம.தி.மு.க. சார்பாக எழுதும் ஜி. துரை மோகன்ராஜு, தி.மு.க. சார்பாக களமாடும் கோதண்டராமன் சபாபதி ஆகியோரின் பேட்டிகள் வெளியாயின.
இன்று, அ.தி.மு.க. சார்பாக கருத்துக்களை பதிந்து வரும் கிஷோ கே. சுவாமியின் பேட்டி:
அரசியல் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
சிறு வயது முதலே அரசியல் ஆர்வம் அதிகமிருந்து வந்துள்ளது வீட்டில் தந்தை அரசியல் கட்சியில் இல்லை என்றாலும் அதிகப் படியாக அரசியல் விவாதங்களில் நண்பர்களுடன் மேற்கொள்வார் , அதுமட்டுமில்லாமல் சிறுவயதிலிருந்தே எனக்கு செய்தித் தாள்கள் படிப்பது வழக்கமானது , அப்படித் தான் அரசியல் ஆர்வம் அதிகமானது.
அ. தி.மு.க.மீது ஈடுபாடு ஏற்பட காரணம் என்ன?
ஏழு வயது இருக்கும் பொழுது ,”அம்மா” (ஜெயலலிதா) அவர்களைப் பார்த்து, அப்போதலிருந்தே “அம்மா” பாசத்துடன் வளர்ந்தவன் நான். அப்போது அம்மா, கட்சியின் கொ.ப.செ.வாக இருந்த காலகட்டம். அன்று,. எங்கள் தெருக்கோடியில் புரட்சித் தலைவி வரப் போகிறார் என்ற அறிவிக்கப்பட்டது. தெருவெங்கும் விழாக்கோலம். அம்மா ,. அங்கே இருந்த சத்துணவுக் கூடத்திற்கு வருகை தருகிறார் … வந்தது முதல் அவரது பேச்சில் தென்பட்டது எல்லாமே மக்கள் திலகம் பற்றிய பரப்புரை தான்! கூட்டம் ஆர்ப்பரித்தது! “ அம்மா” என்று நான் அழைக்கத் துவங்கியதும் அன்று முதல் தான்! என்றும் “அம்மா” என் இதயத்தில் நீக்கமற நிறைந்துவிட்டார். இனி என்றும் அவரை மனதில் இருத்தியே என் வாழ்கை நகரும்.
இது அரசியலை மீறிய ஒரு பாசம். இது அரசியலை தாண்டிய ஒரு பாசம் , இது உணர்ச்சி பூர்வமான ஒரு மன நிலை! அவர், “ எனக்கு குடும்பம் என்றில்லை , எனக்கு குழந்தைகள் திருமணம் என்றில்லை என்பது விதி” என்று அவர் சொல்லும் பொழுது , “இல்லை அம்மா, நான் இருக்கிறேன் உங்கள் பிள்ளையாக! என்று குமுறலாக நான் சொல்வது என்பது எந்த ஒரு எதிர்பார்ப்பின் அடிப்படையிலும் கிடையாது.
தானாடவில்லை என்றாலும் தன் சதையாடும் என்கிற உணர்வுப் பெருக்கு! . வார்த்தைகளில் அதை அடக்கிவிட முடியாது , வெளிப்படுத்தவும் முடியாது
நீங்கள் எழுதி அதிம்பேர் படித்த பதிவு எது?
2014 ம் ஆண்டு கீழ் நீதிமன்றத்தில் முதல்வருக்கு எதிராக தீர்பளிக்கப் பட்டு அவர் பெங்களூருவில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டப் பொழுது , அ தி மு க வினர் மற்றும் அவரது அபிமானிகள் மிகுந்த மன உளைச்சலிலும் வேதனையிலும் இருந்தனர். . அப்பொழுது அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையிலும் நம்பிக்கையூட்டும் வகையிலும் நான் மேற்கொண்ட பதிவுகள் அதிகப் படியான வரவேற்பைப் பெற்றது .
பிறர் எழுதுவதில் நீங்கள் விரும்பிய பதிவு என்ன?
முகநூலில் மிகச் சிறந்த பதிவர்கள் பலர் இருக்கிறார்கள் அதில் ஒரு பதிவு என்று என்னால் குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை , எனினும் ஆபாச வசவுகள் இல்லாத அற்புதமான பதிவுகளை யார் மேற்கொண்டாலும் , கட்சி மாச்சரியங்களின்றி அவற்றை நான் வரவேற்பதுண்ட
உங்களது பதிவுகளுக்கு வரும் கடுமையான பின்னூட்டங்களை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
எதிர்கருத்துக்கள் ஆக்கப் பூர்வமான விமர்சனங்களாக அமைந்தால் அதற்கு பதில் அளிப்பேன் , விதண்டாவாதமாக இருப்பின் அவற்றை நீக்கி விடுவது என் வழக்கம் .
உங்கள் பதிவு சர்ச்சைக்குள்ளானது உண்டா?
எனக்குத் தெரிந்து சமூக வலை தளங்களில் தமிழ் பதிவர்களில் அதிகப் படியான சர்ச்சைகளை எதிர்கொண்டது நானாகத் தானிருக்கும்.
ஒரு கட்டத்தில் ஊடகவியாலர்களில் ஒரு பிரிவினர் ஒன்று கூடி எனக்கெதிராக தொடர்ச்சியாக செயல் பட்டும் அவர்களுக்கிருந்த ஊடக பலத்தைக் கொண்டு எனக்கெதிராக ஒரு தலைப் பட்சமான செய்திகளை வெளியிட வைப்பது உட்பட நீதி மன்றத்தில் வழக்குகள் தொடர்வது காவல் துறையிடம் புகார் என்று பல பிரச்சனைகளை கொடுத்துள்ளனர் . ஒரு அரசியல் கட்சியும் என் மீது புகார்களை பதிவு செய்தது .
உங்கள் பதிவை கட்சி முக்கியஸ்தர்கள் படித்து கருத்து சொல்லியிருக்கிறார்களா?
பல மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட படித்து வருகிறார்கள் , என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டியும் உள்ளனர் . “கட்சியில் இருக்கும் எங்களை விட அம்மா அபிமானியாக இருக்கும் நீ அதிக விசயங்களைத் தெரிந்து வைத்துள்ளாய்” என்று கூறும் கட்சி முக்கியஸ்தர்களும் உண்டு.
சமூக இணையதளத்தில் எழுதுவது கட்சிக்கு ஓட்டாக மாறுமா?
சமூக ஊடகங்கள் கருத்தியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தவும் பல தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் , கடைக் கோடி தொண்டர்களுக்கு கட்சி சம்மந்தப் பட்ட விஷயங்களைக் கொண்டு சேர்க்கவும் தான் அதிகம் பயன்படும் … இந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று வாக்குச் சேகரிக்க உதவாது என்பதே என் கருத்து.
இணையதள சண்டை – ஊரில் நடக்கும் கட்சி சண்டை ஒப்பிடுங்களேன்..
இணைய தள சண்டை என்பது இருட்டில் அமர்ந்துக் கொண்டு கல் எரியும் நபர்கள் அதிகம் உலாவும் களம். ஊரில் நடக்கும் கட்சி சண்டை அப்படியில்லை.
பொது விசயங்கள் குறித்து ஆரம்பிக்கும் விவாதம், தனிப்பட்ட முறையில் ஆபாச தாக்குதல் ஆவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வலை தளங்களில் விவாதங்கள் நடை பெரும் பொழுது , “டேய் , நீ என்ன பத்தி இப்படி அசிங்கமா எழுத்திட்டியா .. உன்னை என்ன செய்யறேன் பாரு“ என்கிற கொந்தளிப்புகளை அதிகம் இங்கே காண முடியும்.
என்னைப் பற்றியே நிறைய வசவுகளும் பல பக்கங்களில் மேற்கொள்ளப் படுகிறது , அப்படி பொங்குபவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் …” நாம் கண்டுக் கொள்ளாமல் ஒதுங்கிச் செல்வதே சிறந்த வழிமுறை” என்பதுதான். இப்படிச் செய்வதனால் நாம் பயந்து விட்டோம் என்று அர்த்தமில்லை.
தவிர, இணையத்தில் உபயோகிக்கப் படும் வாசகங்கள் அனைத்துமே இலக்கிய நடை கொண்டதாக இருந்திட வாய்புகள் குறைவே , பேச்சு வாக்கில் உபயோகிக்கும் வார்த்தைகள் பெரும்பாலும் , நக்கல் நையாண்டி கலந்தே எழுதப்படும். . இது தான் உலகளாவிய அளவில் நடப்பதும் கூட . அதற்கு ஆங்கிலத்தில் பிளேமிங் ( flaming ) என்று சொல்வார்கள்.
“flaming is an internet term used to describe full , frank and unrestricted , comments posted on the web , which often bear a strong resemblance , to insult and abuse . ” இப்படியான எழுத்து நடை பிடிக்காதவர்கள் , அதை தவிர்க்க , பிளாக் செய்யும் வசதிகள் மற்றும் இதர வசதிகளை வலை தளங்கள் கொடுக்கின்றன … அதாவது நீங்கள் உங்களை அங்கிருந்து அகற்றிக் கொள்ளலாம்.