anna_university
என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 550 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை 2 விதமாக நடைபெற உள்ளது. அதாவது மாணவர் சேர்க்கை இடங்களில் அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் என்றும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு கல்லூரியில் உள்ள இடங்களில் 65 சதவீதத்தை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் (அரசு ஒதுக்கீட்டுக்கு) கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அவர்கள் 50 சதவீத இடங்களைத்தான் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வுக்கு கொடுக்கவேண்டும்.
பொதுவான கல்லூரிகள் வைத்துக்கொள்ளும் இடங்கள் 35 சதவீதமாகும். அந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடங்களில் மாணவர்சேர்க்கையை அந்தந்த கல்லூரிகளே நிரப்பிக்கொள்ளலாம். அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மாணவர் சேர்க்கை தான் பெரிய அளவிலானதாகும். இந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் பி.இ., பி.டெக் சேருவதற்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன.
கலந்தாய்வு மூலம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் பி.இ., பி.டெக். சேருவது குறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன், ‘’இந்த ஆண்டு மாணவர்கள் நலன் கருதி, முதன் முதலாக விண்ணப்ப படிவங்கள் அச்சிடப்படவில்லை. அதற்கு மாறாக, மாணவர்கள் ஆன்-லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். என்ஜினீயரிங் விண்ணப்பம் குறித்த அறிக்கை ஏப்ரல் 14-ந்தேதி வெளியிடப்படும்.
ஏப்ரல் 15-ந்தேதி முதல் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் ஆன்-லைனில் என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பிக்கலாம். மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே ஆன்-லைனில் தங்கள் பெயர், தந்தை பெயர், வயது, முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், பிளஸ்-2 தேர்வு முடிவு வெளிவந்த உடன், அதில் அவர்கள் எடுத்த மதிப்பெண்களை ஏற்கனவே ஆன்-லைனில் பதிவு செய்திருந்த விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர், ‘செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மிஷன்’ என்ற முகவரிக்கு ரூ.500-க்கு டி.டி. எடுக்க வேண்டும். மாணவர்கள் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் ரூ.250-க்கு டி.டி. எடுத்தால் போதும்.
இந்த டி.டி. எண்ணை அந்த விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, அதை பதிவிறக்கம் செய்து அதில் கூறப்பட்டுள்ள அனைத்து சான்றுகளின் நகல்களும் எடுத்து சேர்த்து ‘செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மிஷன், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை-600025’ என்ற முகவரிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிட்ட 10 நாட்களுக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்றாலும் கொடுக்கலாம்.
வீட்டில் இருந்தபடி ஆன்-லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் ஏப்ரல் 14-ந்தேதி அறிவிக்கப்படும் மையங்களில் உள்ள ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அந்த மையங்களின் உதவியை விண்ணப்பிக்க நாடலாம். கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’என்று தெரிவித்துள்ளார்.