chidambaram-temple

பரமன் நமக்குள் இருக்கும் பொழுது, ஊர் ஊராகச் சென்று பல பாடல் பெற்ற கோவில்களில் ஏன் தரிசனம் செய்ய வேண்டும் ?
ஒரு காலகட்டத்தில் மனிதர்கள் அனைவருமே தங்களை, தங்கள் வாழ்க்கைச் சூழலை, தாங்கள் வாழும் சமூகத்தை ஓரளவு பாதுகாப்பாக இன்பமயமானதாக வைத்துக் கொண்டார்கள். நீர் ஆதாரத்திற்கு ஆறு, குளம், ஏரி, ஊரணி, கிணறு எல்லாம் இருக்கும். உணவு உற்பத்திக்குப் பரந்த வயல்வெளிகள் இருக்கும். வைத்தியர், துணி வெளுப்பவர், சவரம் செய்பவர், மட்பாண்டங்கள் செய்பவர், பிராமணர் ஏனைய தொழிலாளிகள் அனைவரும் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். இயற்கைச் சீற்றங்களோ, ஓரளவுக்குப் பெரிய தொற்று வியாதிகளோ வந்தால் ஒழிய அவர்களுக்குப் பெரிய துன்பம் என்பது மரணம் மட்டுமே. எனவே வெளி உலகம் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லாமல் போய் விட்டது. இதை உணர்ந்த ஞானிகள், மகான்கள் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்த மனிதன் பல ஊர்களுக்குச் சென்று அங்குள்ள ஆலயங்களை தரிசனம் செய்து வர வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். இதனால் பலதரப்பட்ட மனிதர்கள், அவர்கள் தம் கலாச்சாரம், பண்பாடுகள், கலை, இலக்கியங்கள், வாழ்க்கை முறைகள் இவற்றையெல்லாம் அறிந்து கொண்டு அவன் மனப் பக்குவத்தை அடைவான் என்பது அவர்கள் நோக்கமாக இருந்தது. இன்றும் கூட நாம் அனைவருமே சௌகர்யமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டு ஓரளவு சுகமாக வாழ்கிறோம். ஆனால், எவ்வளவோ மனிதர்கள் உணவின்றி, நீரின்றி, கல்வியின்றி, மருத்துவமின்றி, போக்குவரத்தின்றி கஷ்டப்படுவதை நாம் அறியாமல் இருக்கிறோம். அறிந்து கொண்டாலும் கூட அதைக் குறித்து சிறிதளவேனும் நாம் கவலைப்படுவதில்லை. அது அவனவன் தலை விதி என்று சொல்லி நம் சௌகர்யங்களைப் பற்றி மட்டும் கவனம் கொள்கிறவர்களாக, தன்னலம் மிக்கவர்களாக வாழந்து வருகிறோம். நீரை வீணாக செலவு செய்கிறோம், பணத்தை பிரயோஜனமில்லாத வகையில் பதுக்கி வைக்கிறோம், மரங்களை வெட்டுகிறோம், இயற்கை வளங்களைச் சுரண்டுகிறோம். இப்படி நாம் செய்கின்ற சுயநலம் மிக்க பல தவறுகளால் எங்கோ வாழ்கிற நம்மைப் போன்ற மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதநைக் குறித்து நாம் கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லை.
இப்படிப்பட்ட கேடு கெட்ட குணாதிசயத்திலிருந்து மனிதனை மடை மாற்றுவதற்காகவே பல தேசங்களுக்குச் சென்று ஆலய வழிபாடுகள் செய்து வரச் சொன்னார்கள். அப்பொழுதுதான் பல தேசங்கள், பல மக்கள், அவர் தம் கஷ்ட நஷ்டங்கள் இவைகளெல்லாம் மனிதனுக்குத் தெரியவரும். தென் கோடியிலிருந்து ஒருவன் வட கோடியிலிருக்கும் காசிக்குப் போய் வந்தால் அவனை தெய்வத்திற்கு நிகராக வைத்து வணங்குவார்கள். அந்த அளவு அவன் மனப்பக்குவம் பெற்றவனாக ஆகி விடுகிறான். பொதுவாகவே தன் புறவாழ்வில் நேர்த்தியையும், ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க முடியாத மனிதனால், அக நோக்கில் மன ஒருமைப்பாட்டை அடைய முடியாது. அதற்கான பயிற்சி களமாகவே ஆலயங்கள் உள்ளன. நமக்கு ஒரு வீடு இருக்கிறது. வீடு முழுவதும் நமக்கு சொந்தமானதுதான், எனவே எங்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொல்ல முடியுமா ? முடியாது. அந்தந்த விஷயங்களுக்கென்று தனித்தனியாக அறைகளை அமைத்துக் கொள்கிறம் அல்லவா ? பூஜை அறை, வரவேற்பு அறை, சமையல் அறை, படுக்கை அறை, பொருட்களை சேமித்து வைக்கும் அறை, உணவு அறை, காற்றோட்டத்திற்கு முற்றம் என்று நேர்த்தியாக, ஒரு ஒழுங்கு முறையாக அமைத்துக் கொள்கிறோம்.
அது போல ஒரு ஊர் என்கிற பொழுது கல்வி சாலை, நூலகம், வியாபார ஸ்தலங்கள், அன்னதான சத்திரம், விளையாட்டு மைதானம், கச்சேரி மண்டபம், ஆலயங்கள் என அந்தந்த விவகாரங்கள் செம்மையாக நடைபெற வேண்டும் என்ற நோக்கில் அவ்வாறு ஒழுங்கு முறையாக, நேர்த்தியாக அமைக்கப்படுகின்றன. அது போலவே நமது இந்த உடலே கோயில், அதனுள்ளே பரமன் உறைகின்றான் என்பதை உணர்த்தும் விதமாகவே புறத்தே ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயங்களும், வழிபாடுகளும் மனதை செம்மைப்படுத்த உதவும் யுக்திகளே என்று ஞானிகளும், மகான்களும் மிகத் தெளிவாகப் பாடி வைத்திருக்கின்றனர். இந்த பிரபஞ்சத்தின் இயற்கை முழுவதிலும் அழகு மிளிர்கிறது. ஒரு சில இடங்களில் அவ்வழகு மனதைக் கவரும் விதத்தில் விளங்குகிறது. மனதை அமைதிப்படுத்துவதற்கும், கீழான எண்ணங்களிலிருந்து விலக்கிடவும் அத்தகைய இயற்கையழகுக்கு வலிமையுண்டு. அத்தகைய இடங்களில் வசிப்பவர்களுக்கோ, செல்பவர்களுக்கோ உயர்வான எண்ணங்கள் மனதில் தோன்றுவதோடு, சத்துவ குணம் மேலோங்குகிறது. அதோடு மட்டுமல்ல அவ்வாறு தோன்றுகிற உயர்வான எண்ணங்கள் அந்த இடத்தில் அருள் சக்தியை பெருகிடச் செய்கின்றன. எண்ணங்களின் வலிமை அத்தகையது. கூட்டு வழிபாடு, கூட்டு பிரார்த்தனை, கூட்டு ஜபம், கூட்டு தியானம் போன்றவை அனைத்திற்கும் வலிமை உண்டு என்று சொல்லப்படுவதின் காரணமும் எண்ணங்களின் வலிமையைக் கொண்டே.
உயர்ந்த எண்ணங்கள் அழிவற்றது என்பது கோட்பாடு. தபஸ்விகளும், முனிவர்களும், ஞானிகளும், சித்தர்களும் இயற்கையின் முழு சக்தியும் வெளிப்படுகின்ற அத்தகைய அழகிய பல இடங்களில் வசித்து வந்திருக்கின்றனர். அன்னவர்களுக்கும், அவர்களை நாடித் தெளிவும், அநுபூதியும் அடையப் பெற்றவர்களுக்கும் உயர்வான எண்ணங்கள் உதித்து அவ்விடங்களை மேலும் புனிதப்படுத்தின. அவர்கள் மறைந்தாலும் அல்லது அவ்விடத்தை விட்டு வேறு இடங்களுக்குச் சென்றாலும் கூட அவர்களின் எண்ண ஆற்றல்களும், அந்தப் புனிதத் தன்மையும் அவ்விடங்களில் வெளிப்படுவதை உணர்ந்தவர்களால் அங்கெல்லாம் ஆலயங்கள் எழுப்பப்பட்டன. அத்தகைய புண்ணிய ஸ்தலங்கள் ஆன்மீக நாட்டம் கொண்டவர்களுக்கு மனப் பக்குவத்தையும், நல்ல ஒழுக்கத்தையும் ஏற்படுத்தி மேலும் முன்னேற அனுகூலமான சூழ்நிலையாக அமைந்து விடுகின்றன. ஆன்மீக சாதகர்களுக்கு அவ்விடங்களில் உருவான உயர்வான எண்ணங்களே பல்வேறு தெய்வீகப் பாடல்களாக வடிவெடுத்தன. அவரவர்கள் பரம்பொருளை தியானிக்கின்ற வடிவங்களை ஒத்து பாடல்கள் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களெல்லாம் இடைக் காலத்தில் வந்தவைகள்தாம். நாம் காணும் மிகப் பெரிய ஆலயங்களெல்லாமே வழி வழியாக ஒவ்வொரு மன்னர்களால் விரிவுபடுத்தி கட்டப்பட்டவைகளே.
வேத காலம் என்று குறிப்பிடப்படும் காலங்களிலெல்லாம் இயற்கையான சூழலான வனங்களே வழிபாட்டுக்குரிய இடங்களாக இருந்திருக்கின்றன. அன்று வனங்களாக இருந்த இடங்கள்தாம் இன்று பெரு நகரங்களாக மாறியிருக்கின்றன. அத்தகைய வனங்களில் நீர் நிலைகள், மரச் சோலைகள் போன்ற இடங்களில்தான் வேள்விகள் நடந்திருக்கின்றன. அத்தகைய மரங்களே ஸ்தல விருக்ஷங்களாகக் கொண்டாடப்படுகின்றன. வனங்களை அழிப்பதிலும், மரங்களை வெட்டுவதிலும், அங்கு வாழும் மிருகங்களைக் கொல்வதிலும் யோகிகளுக்கு உடன்பாடு இல்லை. எனவேதான் மிருகங்களை தெய்வ வடிவங்களுக்கு வாகனமாகவும், மரங்களை ஸ்தல விருக்ஷங்களாகவும் அமைத்தனர். அங்ஙனம் அமைக்கப்பட்ட ஆலயங்கள் அனைத்தும் மானுட சரீரத்தின் புறச் சின்னங்களே. பிரபஞ்சத்திலும், சரீரத்திலும் அதாவது, அண்டத்திலும், பிண்டத்திலும் விளங்குகின்ற தத்துவங்களின் வடிவங்களே ஆலயங்கள். இவற்றையே ஆகமங்களாக அமைத்தனர். அத்தகைய ஆலயங்கள் மூலம் நமக்கு உணர்த்தப்படுவது என்னவென்றால் ”நம் உடலில் இதயக் கருவறையில் இறைவன் உறைகிறார்” என்பதே. ஆன்மா லயப்படும் இடமே ஆலயம்.
”உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பே ஆலயம்,”
”காயமே கோயில் ஆக, கடிமனம் அடிமை ஆக, வாய்மையே தூய்மை ஆக, மனமனி இலிங்கம் ஆக,”
எத்தனையோ வாயில்கள் ஆலயத்தில் இருந்தாலும், ராஜகோபுரத்தின் வழியாகவே உள்ளே நுழைய வேண்டும். அது போல புறக்கரணங்கள், அகக்கரணங்கள் எத்தனையோ நம்மிடத்தில் இருந்தாலும், மனம் என்ற கரணமே நமக்கு ஆன்மீக மார்க்கத்திற்கு வாயிலாக இருக்கிறது. எனவே,அனைத்து கரணங்களையும் விடுத்து மனதின் வழியாக உள்முகமாகப் போக வேண்டும் என்பது ஏற்பாடு. என் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் ஆலயங்களுக்குப் போய் வழிபடலாமா என்று கேட்டதற்கு, ”பல மகான்கள், ஞானிகளின் உயர்வான எண்ணங்கள் நிரப்பித் ததும்பும் இடம் ஆலயம். எனவே அங்கு அருட்சக்தி பொங்கி வழிகிறது. எனவே, ஆலயங்களுக்குச் சென்று மனம் ஒடுங்கி பிரார்த்தனை செய்து, தியானித்தால் நம் உடலில் குறைவுபட்டுள்ள பிரபஞ்ச சக்திகளை பெற்றுக் கொள்வதோடு, மகான்களின் தூய எண்ண அலைகளால் நம் மனதையும் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும் என்று சொல்லியிருக்கிறார். மனத் தூய்மை பெற்ற மகா ஞானிகளின் வார்த்தைகள் ஆத்ம வார்த்தைகளாகும். அதை ஒருவன் செவிமடுக்கும் பொழுது ஆன்மீக வாழ்வில் மட்டுமல்ல, பிரபஞ்ச வாழ்விலும் நன்மைகளை அடைவான். பாடல் பெற்ற ஸ்தலங்களில் பாடப் பெற்ற பாடல்கள் அனைத்தும், பரம்பொருளின் வல்லமைகளை உணர்த்துவதோடு, நம்மை தெளிவுபடுத்தி பரநாட்டம் கொண்டவர்களாக ஆக்க வல்லவைகளாகும். எனவே அப்படிப்பட்ட ஆலயங்களில் சென்று வழிபாடு செய்வது நமக்கு மன அமைதியையும், வலிமையையும், மனத் தூய்மையையும் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.
-இராம் மனோகர்