டில்லி
மோடி அரசால் கடந்த வருடம் ஜுலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி உலகிலேயே மிகவும் குழப்பமானதாகவும் அதிக வரி விகிதத்துடனும் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலகில் உள்ள நாடுகளில் 115 நாடுகளில் ஜி எஸ் டி அமுலாக்கப்பட்டுள்ளது. இதே வகையில் இந்தியாவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி அமுலாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 4 வரி விகிதங்கள் உள்ளன. 5%, 12%, 18% மற்றும் 28% என 4 விகிதங்கள் உள்ளன. இது தவிர தங்கத்துக்கு 3% மற்றும் மதிப்புள்ள வைரம் போன்ற கற்களுக்கு .25% என ஜி எஸ் டி விதிக்கப்படுகிறது. மதுபானங்கள், பெட்ரோலியப் பொருட்கள், பத்திரப்பதிவு கட்டணங்கள் உள்ளிட்ட பல இனங்கள் ஜி எஸ் டியில் சேர்க்கப்படாமல் முந்தைய விகிதத்திலேயே தொடர்ந்து வருகின்றன.
இது குறித்து உலக வங்கி தனது கருத்தை தெரிவித்துள்ளது. உலக வங்கி, “உலகில் 49 நாடுகளில் ஒரே சதவிகித ஜிஎஸ்டி பின்பற்றப்படுகிறது. 28 நாடுகளில் இரு சதவிகித ஜி எஸ் டி பின்பற்றப்படுகிறது. இந்தியா, இத்தாலி, லக்சம்பர்க், பாகிஸ்தான் மற்றும் கானா ஆகிய நாடுகளில் 4 சதவிகிதங்களில் ஜி எஸ் டி உள்ளது. அதிலும் சில பொருட்களுக்கு விகிக்கப்பட்டுள்ள 28% ஜிஎஸ்டி உலகிலேயே அதிக விகிதமாக உள்ளது.
மேலும் ஜி எஸ் டி வழிமுறைகள் இந்தியாவில் மிகவும் குழப்பத்துடன் காணப்படுகிறது. ஜி எஸ் டியில் ஏற்கனவே இந்தியா பல மாறுதல்களை செய்துள்ளது. மேலும் பல மாறுதல்களை செய்வதன் மூலம் இந்தியாவின் ஜிஎஸ்டி முறை எளிதாக்க முடியும். அத்துடன் பல விகிதங்களில் உள்ள வரிகளை ஒரே விகிதத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். ஜிஎஸ்டியினுள் எடுத்து வரப்படாத பொருட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். இது போல மாறுதல்கள் செய்தால் தான் இந்திய ஜிஎஸ்டி எளிதாகவும் குறைவாகவும் மாறும்” என கூறி உள்ளது.