யாழ்ப்பாணம்:
“இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் மாணவர் ஒருவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கை அதிபர் தேர்தல் நடந்தபோது, போட்டியாளர்களில் ஒருவரான மைத்ரிபால, “ இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம்” என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அவர் வெற்றி பெற்று பல மாதங்கள் ஆகியும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இதனால் சிறையில் வாடும் ஈழத்தமிழ் அரசியல் கைதிகள், உண்ணாவிரத போராட்டத்தைத் துவங்கினர். பல்வேறு அமைப்புகளும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தின.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ராஜேஸ்வரன் செந்தூரன், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ரயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதத்தில், “தமிழீழ விடுதலையைக் கொடு, ஒளியூட்டு” “ஒரு அரசியல் கைதியேனும் சிறைகளில் இருக்கக்கூடாது அனைவரையும் விடுதலை செய்ய வேணடும்” என்று அவர் கைப்பட எழுதி இருக்கிறார்.
இந்த சம்பவம், ஈழத் தமிழரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.