green3
கான்பூர்:
ழகாகவும், நல்ல நறுமனத்துடன் தினமும் பூக்கும் ஆயிரகணக்கான பூக்களுக்கு வாழ்நாள் என்னவோ ஒரு சில நாட்கள் தான். அனைத்து மத வழிபாட்டிலும் பூக்கள் தான் பிரதானவை. புனிதத்தன்மை பெற்றுள்ள பூக்களால் நீர்நிலைகளுக்கு ஆபத்து ஏற்படுவதை யாரும் உணருவதில்லை.
இந்த சிந்தனை இருவருக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களது முயற்சியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்….
அவர்களின் முயற்சியை பார்ப்போம்…
கோவில், சர்ச், மசூதிகளில் தினமும் ஆயிரகணக்கான டன் பூக்கள் குவிகிறது. வழிபாட்டு தலங்களில் மக்கள் பிரசாதங்களாக பெற்றுச் செல்லும் பூக்கள், மாலைகள் புனிதத்துவம் கொண்டதாக கருதப்படுகிறது. அதனால், அவற்றை ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் போடும் வழக்கம் நம் நாட்டில் உள்ளது.
இதனால் பூச்சி மருந்து, ரசாயன உரங்களால் உற்பத்தியான பூக்கள் நீர்நிலைகளில் கலந்து, நீரை நச்சுத் தன்மையாக மாற்றி விடுகிறது. இதற்கு தீர்வு காண கான்பூரைச் சேர்ந்த அன்கித் அகர்வால், கரன் ராஸ்டோகி ஆகிய இரு நண்பர்கள் முயற்சித்தனர்.
2012ம் ஆண்டில் தொடங்கிய இதற்கான ஆராய்ச்சி 2015ம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்தது. ஆம், இந்த பூக்கள், மாலைகளை வழிபாட்டு தலங்களிலேயே சேகரித்து பெற்று, அதன் மூலம் இயற்கை உரம், சுற்று சூழலை பாதிக்காத ஊதுபத்தி, சாம்பிரானி உள்பட பல வாசனை பொருட்களையும் தயாரித்து வெற்றி கண்டுள்ளனர்.
தினமும் 13 கோவில்கள், 3 மசூதிகளில் 500 கிலோ பூக்களை சேகரித்து, தொழிற்சாலை எதுவும் இல்லாமல் இந்த சாதனையை படைத்துள்ளனர். ‘‘பசுமைக்கு உதவுங்கள்’’ என்ற இந்த அமைப்பின் பெயரில், உருவாகும் இவர்களின் தயாரிப்புகளுக்கு ‘மிட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இவர்களின் பெரும்பாலான தயாரிப்புகள் சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கான்பூரை சுற்றியுள்ள கிராமங்களில் சுய உதவி குழு பெண்கள் 80 பேர் பணிபுரிகின்றனர். கான்பூரில் மட்டும் தினமும் 2 ஆயிரத்து 400 கிலோ பூக்கள் நீரில் வீணாக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 80 லட்சம் டன் பூக்கள் இந்திய நீர்நிலைகளில் விடப்படுகிறது.
இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தினால் நீர்நிலைகளை பாதுகாப்பதோடு, சுற்றுசூழலுக்கு ஏற்ற இயற்கை பொருட்களையும் தயார் செய்யலாமே…