கல்கத்தாவில் ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் 1853 ஆண்டு இதே நாளில், ராமசந்திர முகர்ஜிக்கும் சியாமா சுந்தரி தேவிக்கும் முதல் குழந்தையாகப் பிறந்தவர் சாரதாதேவி. பள்ளி சென்று படித்ததில்லை என்ற போதும் பிற்காலத்தில் தமது சொந்த முயற்சியால் சிறிது படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.
தனது ஐந்து வயதில் இவர், ராமகிருஷ்ணரின் வாழ்க்கைத் துணைவியானார். தமது கணவரின் ஆன்மிக வாழ்விற்குத் துணையாக அவருக்கும், அவரைக் காண வரும் பக்தர்களுக்கும் சமைப்பது, அவரது வழிகாட்டுதலில் ஆன்மிக சாதனைகளில் ஈடுபடுவது என்று ஆன்மிகப் பணிகளைச் செய்து வந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர், 1888 ஏப்ரல் மாதம் கயைக்குச் சென்ற அன்னை, அங்கு உள்ள சன்னியாசிகளுக்கு உள்ள மட வசதிகளை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் துறவிச் சீடர்கள் இருந்த ஏழ்மை நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்து வருந்தினார். இதையடுத்து ராமகிருஷ்ண இயக்கத்தை துவக்கினார். அதனால் “சங்க ஜனனி’ (இயக்கத்தை தோற்றுவித்தவர்) என்று விவேகானந்தரால் போற்றப்பட்டார்.
அன்னை சாரதா தேவி பெண் கல்வியை ஊக்குவித்தார். நிவேதிதையின் மறைவுக்குப் பின்னரும் அவர் ஆரம்பித்த பெண்கள் பள்ளி தொடர்ந்து பெண் கல்விக்கு பெரும் உதவி செய்து வருகின்றன.