amithasha1
கடந்த மாதம் 25-ந் தேதி பா.ஜனதா சார்பில் 54 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின் கடந்த 10-ந் தேதி மேலும் 30 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சிக்கு 45 தொகுதிகளும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்திற்கு 24 தொகுதிகளும், அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகத்திற்கு கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் திருச்சியில் மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.
இதில் கலந்துகொண்டு பேசுவதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சிக்கு காலை 10.30 மணிக்கு வருகிறார். மாலை 6 மணி அளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார். கூட்டம் முடிந்ததும் இரவில் அமித்ஷா தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
பா.ஜனதாவில் அறிவிக்கப்பட்டுள்ள 84 வேட்பாளர்கள் தவிர மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்றைய பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது. பொதுக்கூட்டத்தில் அமித்ஷா மற்றும் தலைவர்கள் கலந்து கொள்வதால் மைதானம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.