டாக்கா
இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டுத் தூதரக அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் கடும் போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் கடும் வன்முறை வெடித்துள்ளது. இதையொட்டி தலைநகர் கவுகாத்தி உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நேற்று முன் தினம் கவுகாத்தி நகரில் உள்ள வங்கதேச தூதர் ஷா முகமது தன்வீர் மன்சூர் என்பவரின் கார் தாக்குதலுக்கு உள்ளானது. அவர் விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வந்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் கார் சேதம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வங்கதேச வெளியுறவு செயலர் இந்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் உள்ள அனைத்து வங்கதேச தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை அதிகரிக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.