யார்க்ஷைர், இங்கிலாந்து
இங்கிலாந்து நாட்டின் யார்க்ஷைர் நகரில் உள்ள ஆசிய உணவகங்கள் மீதமுள்ள உணவுகளை ஆற்றில் கலந்து விடுவதால் ஆறுகள் மாசு படுவதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள யார்க்ஷைர் நகர் உணவுக்கு மிகவும் புகழ்பெற்றது. பல நாட்டு உணவகங்களும் இந்த நகரில் அமைந்துள்ளன. குறிப்பாக ஆசிய உணவகங்கள் மிகவும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்த ஆசிய உணவகங்களில் விற்கப்படும் காரம் மிகுந்த கோழி உணவு வகைகளை பிரிட்டிஷ் மக்கள் பலர் விரும்பி உண்ணுகிறார்கள்.
இந்த நகரின் ஓடும் நதி ஏய்ர் என்னும் நதி ஆகும். அந்த நதி தற்போது நிறம் மாறி அழுத்தமான மஞ்சள் நிற நீருடன் காணப்படுகிறது. இந்த நிற மாற்றம் இங்குள்ள ஆசிய உணவகங்கள் மீதமுள்ள உணவுகளை ஆற்றில் கலப்பதால் ஏற்படுவதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆசிய உணவு வகைகளில் உள்ள மசாலாக்கள் நீரில் கறைவதால் இந்த நிற மாற்றம் உண்டாகி உள்ளதாகவும் அதனால் நதி மாசடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து நகரின் புகழ் பெற்ற ஆசிய உணவகம் ஒன்றின் உரிமையாளரான ராப் ஹெலாவெல், “எங்களுக்கு தெரிந்து நாங்கள் நகராட்சியின் எந்த ஒரு சட்டத்தையும் மீறவில்லை. இந்த நகர் வடிவமைக்கப் பட்ட சமயத்தில் இந்த நகரின் கழிவுகள் அனைத்தும் ஏய்ர் நதியில் கலக்கும்படி வடிவமைக்கப் பட்டிருந்தது.
தற்போது நகரம் மிகவும் விரிவடைந்துள்ளது. இன்றும் கட்டிடம் கட்டுவோர் பண்டைய வழக்கத்தின் படி கழிவு நீரை ஆற்றுடன் கலக்கும் படி அமைக்கின்றனர். இது குறித்து இங்குள்ள 200 இந்திய மற்றும் ஆசிய உணவகங்கள் பேசி வருகிறோம். விரைவில் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்” எனக் கூறி உள்ளார்.