னநாயகத்தின் தாய்நாடு என்று சொல்லப்படுகிற இங்கிலாந்தில் அந்த ஜனநாயகம் படும்பாட்டை எடுத்துவைக்கிறார் கட்டுரையாளர்:

லகிலுள்ள அனைத்து மஹாராஜாக்களும் ஒழிக்கப்பட்டுவிட்டாலும் ஐந்து பேர் மிஞ்சி நிற்பார்கள். நான்கு சீட்டுக் கட்டு ராஜாக்கள் மற்றும் இங்கிலாந்து மன்னர்/மன்னி என்று ஒரு ஜோக் உண்டு.

அந்த அளவு அந்நாட்டு மக்களுக்குவிசுவாசம். ராஜ குடும்பத்தினருக்காக கடந்த ஆண்டு ஏறத்தாழ 36 மில்லியன் பவுண்ட் செலவிடப்பட்டது. பாவப்பட்ட ஏழை மக்களுக்கென செலவிடப்படும் தொகை கட்டுபடியாகாது குறைக்கவேண்டும் என்று வல்லுநர்கள் சொல்லும் அதே நாட்டில்தான் ஆண்டுக்காண்டு எலிசபெத் மஹாராணியார் மற்றும் அவரது சுற்றத்தாருக்காக ஒதுக்கப்படும் நிதி கூடிக்கொண்டே போகிறது.

இது தவறு, மன்னராட்சி முறை ஒழிக்கப்படவேண்டும், மற்ற நாடுகளில் உள்ளதைப் போல் நாட்டு அதிபர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் எனக் கூறும் இடதுசாரி சிந்தனையாளர், தொழிலாளர் கட்சியின் புதிய தலைவர் ஜெரெமி கோர்பின், உயர் மட்ட ஆலோசனைகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார் என்கின்றன பிரிட்டிஷ் ஊடகங்கள்.

அங்கே ப்ரிவி கவுன்சில் என்ற ஓர் அமைப்பு இருக்கிறது, முக்கிய கால கட்டங்களில் மன்னர் அல்லது மன்னி  அக் கவுன்சிலின் ஆலோசனைகளின்படியே முடிவெடுப்பார்கள். முக்கிய எதிர்க் கட்சியின் தலைவராயிருந்தாலும் கோர்பின் அக்கூட்டங்களில் பங்கு பெறக்கூடாது, வேறு எவரையாவது அனுப்பி வையுங்கள் என்று சொல்லும் அதிகாரம் பிரதமருக்கு இருக்கிறதாம்.

வேறொன்றுமில்லை அரச குடும்பம் வெட்டி செலவு, ஜனநாயகத்திற்கெதிரானது என நீண்ட நாட்களாகச் சொல்லிவரும் கோர்பின் பிரிவி கவுன்சில் உறுப்பினராகவேண்டுமானால் மஹாராணியாருக்கு விசுவாசமாக இருப்பேன் என உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும்.

உழைக்கும் மக்களின் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு பெரும் பணக்காரர்களின், கார்ப்பரேட்டுகளின் எடுபிடியாகவும், அமெரிக்காவின் ஊதுகுழலாகவும் செயல்பட்டு, கட்சியையும் நாட்டையும் குட்டிச் சுவராக்கிய டோனி பிளேருக்கு நேரெதிர் திசையில் நின்று, நீண்ட காலமாகவே அடித்தட்டு மக்கள், மூன்றாம் உலகநாட்டினர் உள்ளிட்டோரின் நலனுக்காகவே குரல் கொடுத்து வந்த 67 வயதான கோர்பின் கடந்த வாரம்தான் தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

new

                 பாடாத கோர்பின்…  வலதிலிருந்து இரண்டாவதாக.. 

எல்லோருக்கும் அதிர்ச்சி. இனி அவர் என்ன செய்வாரோ, சிக்கனத்தின் பெயரால் அடித்தட்டு மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்தும் முயற்சிகளுக்கெதிராக கிளர்ச்சிகளை உருவாக்குவாரோ, நிறுவனங்கள் மீதான வரியைக் கூட்டச் சொல்லி வற்புறுத்துவாரே, அமெரிக்காவோடு சேர்ந்து மற்ற நாடுகள் மீது போர் தொடுப்பதைத் தவிர்க்க இயன்றதனைத்தையும் செய்வாரே இப்படியெல்லாம் மிரண்டு போயிருக்கின்றனர் அங்கே.

போதாக்குறைக்கு இரண்டு நாட்கள் முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடாமல் அமைதியாயிருந்திருக்கிறார் கோர்பின். அது போர்க் களத்தில் மரித்த வீர்ர்களுக்கான அஞ்சலி. தேசிய கீதத்திலோ ஒருவரி அவர்களைப் பற்றிக் கிடையாது. எல்லாம் மன்னர், மன்னிகளின் புகழ்பாடுவதுதான். ஆனாலும் எப்படிப் பாடாமல் விட்டார், பெரும் பிரிட்டிஷ் பாரம்பரியத்தை அவமதித்துவிட்டார் என்று வலதுசாரிகளின் விமர்சனம்.

இப்போது ப்ரிவி கவுன்சில் பிரச்சினை. அதில் உறுப்பினராக உறுதிமொழியெடுக்கும் நேரம் ஓர் அதிகாரி முன்பு நடித்துக்காட்டவேண்டும். மண்டியிட்டு, ஒரு கரத்தில் பைபிளை ஏந்தி, விசுவாசி என்று சொல்லி, அவர் சரியாகச் செய்கிறார் என்று அந்த அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்ட பின் தான் கவுன்சில் அறைக்குள்ளே அனுமதிக்கப்படுவாராம் புதிய உறுப்பினர்.

இதுக்கெல்லாம் வேற ஆளைப் பாருங்க, என் கொள்கையில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கோர்பின் சொல்லிவிட்டார். எனவே அவர் கவுன்சில் உறுப்பினராக்கப்படமாட்டார், எனவே நாட்டின் பாதுகாப்பு, மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம்  போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து அவருக்கெதுவும் தெரிவிக்கப்படாது என பரவலாக செய்திகள்.

இதைவைத்தே இவரைக் கவிழ்த்துவிடலாமா என்று கூட பிளேர் ஆதரவாளர்கள் கணக்குப் போடலாம்.

சூப்பர் ஜனநாயகம்தானே!

 

  • த.நா.கோபாலன்